வெளியிடப்பட்ட நேரம்: 08-Aug-2017 , 07:53 AM

கடைசி தொடர்பு: 08-Aug-2017 , 07:53 AM

கதிர் குறள்-271

thirukural

மகாபாரதத்தில் கிளைக்கதை ஒன்று வரும்.  பாண்டவர்கள் வனவாசம் சென்று இருக்கும் பொழுது, ஒருமுறை நீர் எடுக்க செல்கையில், ஒருவர் பின் ஒருவராக வராமல் போக, இறுதியாக தர்மர் செல்வார். அனைவரும் இறந்து கிடக்க, வழக்கம் போல் ஒரு அசிரீரி நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல சொல்லி அவரை சோதிக்கும். அனைத்திற்கும் விடையளித்த பின் ஒருவரை மட்டும் உயிர்பிக்கிறேன், யார் வேண்டும்? என கேட்கையில் மாற்றந்தாய் வீட்டு பிள்ளைகள் இருவரில் ஒருவரை உயிர்பிக்க சொல்லிக் கேட்பார். அதற்கொரு நெடிய விளக்கம் சொல்லி, அதனால் திருப்தியடைந்த அந்த மாயன் அனைவரையும் உயிர்ப்பித்து தருவார்.

இக்கதையில் கேட்கப்படும் பல கேள்விகளில் சுவாரசியமான ஒன்று

"இந்த உலகில் மிகவும் வேடிக்கையான விசயம் எது?" என்ற கேள்விதான். அதற்கு சொல்லப்படும் பதில் "தன் கண் முன்னே ஆணவத்தில் ஆடிய பலரும் வாழ்க்கை முடிந்து இறப்பதை பார்த்த பின்னும், இந்த நிலையற்ற வாழ்வில் மனிதன் போடும் ஆட்டம் தான்".

இந்தக் கதை சமீபத்தில் வேறு ஒரு தகவலை படிக்கையில் ஞாபகம் வந்தது. என்ன தகவல் என்றால் "மனிதன் உடலில் மட்டும் 17000 வகை நுண்ணிரிகள் உயிருடன் இருக்கின்றன" மற்றும் "ஒவ்வொரு மனிதனின் உடலில் குறிப்பாக பெருங்குடலில் 1 கிலோ எடை அளவிற்கு பாக்டீரியாக்கள் இருக்கின்றன" என்பதுதான்.

மனிதன் என்ற ஒரு உயிரினம் தோன்றிய பின், அவனால் அழிக்கப்பட்ட உயிரின வகைகள் மட்டும் இலட்சத்தை தாண்டும். இந்த மொத்த பூமியும் என்னுடையது. எனக்கு பயன் தராத எந்த உயிரினமும் வாழவேண்டும் என்று அவசியம் இல்லை என வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் ஒவ்வொருவனும் ஒரு ரூபாய் போட்டு பார்க்கும் எடையில் ஒரு கிலோ அவனுள் இருக்கும் பாக்டிரியாவின் எடை என்பது அவனுக்கு தெரியுமா?

"ஹலோ, பிரபா ஒயின் ஷாப் ஓணருங்களா?" நகைச்சுவை காட்சியில் வடிவேல் சொல்வாரே... "ஒரே பாம், கடையே காலியாகிரும், நாளை மின்னே வந்து போகனும்னு பார்க்கறேன்" என்பது போல, நம்மால் காரியம் ஆக வேண்டி இருப்பதால்தான் நமக்குள் வாடகை தராமல் குடி இருக்கும் நுண்ணியிரிகள் நம்மை விட்டு வைத்திருக்கின்றன. இறந்த பின் எந்த பயனும் இல்லை என்றவுடன் நம்மை சிதைக்க துவங்குகின்றன.

நம் உடலே நம் கட்டுப்பாட்டில் இல்லை என்னும் போது நமக்கு இந்த உலகத்தை ஆளும் ஆசை வரலாமா? இதில் பற்றாக்குறைக்கு அடுத்த கிரகத்தில் இருக்கும் நிலங்களை பிளாட் போட துவங்கி விட்டார்கள். ஒருவனுக்கு ஒரு கிரகத்திலே ஒழுங்காய் வாழ தெரியவில்லையாம், அவனுக்கு ஒன்பது கிரகமும் கேட்குதாம்?

என் ஆசிரியர் ஒருவர் சொல்வார் "நாம்தான் உடன் பிறந்தவர்களுடன் கூட சண்டைப் போட்டு, நீதிமன்றத்திற்கு சென்று வழக்காடி, பாகம் பிரித்து, நிலம் வாங்கி, வீட்டை கட்டி "என் வீடு, சொந்த வீடு" என மார் தட்டிக் கொள்கிறோம், கட்டிய அடுத்த நாளே ஒரு குளவி வந்து புது வீட்டில் அதற்கான இடம் பார்த்து ஒரு கூட்டைக் கட்டிக் கொள்ளும். அதனிடம் போய் பத்திரத்தைக் காட்டி, இது என் வீடு என்று சண்டை போட முடியுமா? ஆற்றாமையில் அதன் கூட்டை உடைப்போம், நம்மால் அவ்வளவுதான் முடியும், அது "என்ன இது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு?" என்று கூலாக அரைமணியில் இன்னொரு கூடு கட்டிக் கொள்ளும். அதற்கு அது மட்டும் தான் வேலை. நம்மைத்தான் மணிக்கு வேலைக்கு வரவில்லை என்றால் கேள்வி கேட்க ஆளுண்டு."

சரிதான். நம்மில் எத்தனை பேருக்கு மனதில் ஆழமாக இந்த புவி, இந்த இடம் எனக்கு மட்டும் சொந்தமானதில்லை, அனைத்து உயிரினங்களுக்கும் இதில் சமபங்குண்டு என்ற எண்ணம் உண்டு? மற்ற உயிரினத்திற்கு பரிந்து பேச வந்து விட்டான், வேலையில்லாதவன், முதலில் மனிதர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லையாம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

இங்கு நமக்கு என்று ஒரு அடையாளம் இருக்கிறது. நம் குடும்பத்திற்கு என்று ஒரு பேர் இருக்கிறது. அது நம்மால் கெடக் கூடாது என்ற எண்ணம் மட்டும் இல்லை என்றால், இங்கு நாம் செய்யும் எதற்கும் தண்டிக்க ஆள் இல்லை என்றால், நாம் செய்வதை யாரும் கவனிக்க போவதில்லை என்றால், நாம் இப்படியேதான், யாருக்கும் தீங்கிழைக்க துணியாது இருப்போமா?

இப்போது மட்டும் யாருக்கும் தீங்கு நினைக்காமலா இருக்கிறோம்? யாருக்கும் தெரியாமல், அப்படி தெரிந்தாலும் யாரும் கண்டுக் கொள்ளாத அளவிற்கு, அப்படியே தெரிந்தாலும் சட்டப்படி தண்டிக்க மாட்டார்கள் என்னும் அளவிற்கு சிறிய அளவு தீங்கு கூட யாருக்கும் நினைத்ததில்லை என்பவர்கள் எத்தனை பேர்?

என் வாழ்நாளில் இதுவரை ஒருவரிடம் கூட, மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு, வெளியில் நடித்து பேசும் செயலை எக்காரணம் கொண்டும் நான் செய்ததில்லை என்பவர்கள் எத்தனைப் பேர் இருக்கிறோம்? குறைந்த பட்சம் பிழைப்புக்காகவாவது, மனதில் தவறென படும் விசயத்தை கண்டும் காணாமல் போகத்தானே செய்கிறோம்? வேறு வழியில்லாமல் அப்படி செய்வது வேறு.

ஆனால் தம் தேவைக்காக, நல்லவர் போல் பழகி, நம்பவைத்து ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள் இல்லையா? அப்படிப்பட்டவர்களை சபிக்கையில் நம் ஊரில் என்ன சொல்வார்கள் என யோசித்துப் பாருங்கள்.

"நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டடா, புழு பூத்து தான்டா சாவ, உனக்கு நல்ல சாவே வராதுடா"

அப்படியென்றால் என்ன அர்த்தம்? நம் செய்கைகளை நம் உடலுக்குள் இருக்கும் நுண்ணியிரிகள் கவனித்துக் கொண்டு இருக்கின்றனவா? நம் ஆட்டம் எல்லை மீறுகையில் தம் வேலையை காட்டத் துவங்குகிறதா? யோசித்துப் பாருங்கள், நம் செயல்கள் ஒவ்வொன்றையும் அவை கவனித்துக் கொண்டு "ஆடுறா மகனே ஆடு, இஷ்டம் போல ஆடு" என் சிரித்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?

அதிகாரம்: கூடாவொழுக்கம் குறள்: 271/1330

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் 
ஐந்தும் அகத்தே நகும்.

உரை:

வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

-கதிர் ராத்

Related Articles