வெளியிடப்பட்ட நேரம்: 09-Aug-2017 , 07:51 AM

கடைசி தொடர்பு: 09-Aug-2017 , 07:52 AM

கதிர் குறள் -272

kural1

ஒரு தோட்டால ஒரு உயிர் போகுமா?"

"ரெண்டு உயிர், ரெண்டு பேர் செத்துருவாங்க, ஒருத்தன் குண்டடி பட்டவன், இன்னொருத்தன் அதை முதல் தடவையா சுடறவன்"

Highway(2014) படத்தில் வரும் வசனம். முதல் முறையாக அது எந்த சூழ்நிலையில் வேண்டுமென்றாலும் நிகழ்ந்ததாய் இருக்கட்டும், தன் கையால் ஒரு உயிர் போனதை அறிந்த எவராலும், அதன்பின் தன் வாழ்க்கையை முன்பு போல் எளிமையாய் கடக்க இயலாது. இதுதான் உண்மை.

"கடல்" படத்தில் வருவது போல "நான் சாத்தான்லே" என தனக்குத்தானே சொல்லிக் கொள்பவர்களுக்குக் கூட அதே நிலைதான். ஏனென்றால் யாரும் சிறுவயதில் இருந்தே கொலை செய்யவோ, கொள்ளை அடிக்கவோ, அவ்வளவு ஏன், இந்த சமூகத்தில் தனியாக விலகும் படியான செயலை செய்ய விரும்பி வளர்வதில்லை. சூழ்நிலைகள்தான் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திசைக்கு திருப்பி விடுகிறது. இங்கு அனைவரும் விரும்பவது, தம்மை சுற்றி இருப்பவர்கள் வாழும் நிம்மதியான இயல்பான வாழ்க்கையைத்தான்.

பொருளாதாரத்தை பற்றி இங்கு பேசவில்லை. வசதி இருக்கிறது, இல்லை என்பது பிரச்சனையில்லை. நம்முடன் மற்றவர்கள் எப்படி பழகுகிறார்கள் என்பதை மையப்படுத்தித்தானே, 4 பேர் என்ன பேசுவார்கள் என்பதையும் கணக்கில் கொண்டுதானே, நம் வாழ்வின் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறோம்.

இப்பழக்கம் நாம் செய்வதில் மற்றவர்கள் ஏதேனும் குறை கண்டு பிடித்துவிடுவார்களோ என்பதில் துவங்கி, மற்றவர்கள் புகழ வேண்டும் என்பதற்காக செய்வதில் முடிகிறது. சரியில்லை என்றாலும் இது இயல்பான ஒரு விஷயம் தான். அனைத்து வீட்டு மனிதர்களும் இதை நிச்சயம் சொல்லி இருப்பார்கள் "விஷயம் வெளியெ தெரிஞ்சா 4 பேர் முகத்துல நான் எப்படி முழிப்பேன்?" என்று.

இது சரியல்ல. இது ஒரு மோசமான பழக்கம். மற்றவர்களுக்காக மட்டும் வாழ்ந்தால் எப்படி? நமக்கான முடிவுகளை எடுக்கையில் மற்றவர்களைப் பற்றி எதற்கு யோசிக்க வேண்டும்? என முற்றிலுமாக இதை புறம்தள்ளிவிட முடியாது. ஏனென்றால் சில நேரங்களில் இந்த சமூகத்திற்கு பயப்படும் குணம் தான் மனிதனை பல குற்றங்களை செய்யாமல் தடுக்கிறது.

யோசித்து பாருங்கள். எனக்கும் ஒருவனுக்கும் பிரச்சனை. ஒருமுறை வசமாக சிக்குகிறான். வண்டியில் அடித்து தீர்த்து விட்டு, பிரேக் பிடிக்கவில்லை என ஃபைன் கட்ட முடியும். செய்ய முடியவில்லை. இந்த இடத்தில் என்னை தடுப்பது சட்டமா? சமூகத்தின் வைக்கப்போகும் விமர்சனத்தின் மீதான பயமா? மற்றவர்களின் விமர்சனங்கள் மீதான பயம் இருக்கும் வரைதான் மக்களாட்சிக்கு ஆயுள் இருக்கும். என் மீதான எந்த விமர்சனத்திற்கும் நான் அஞ்ச போவதில்லை என நினைப்பவர்களால் தானே நாட்டில் சர்வாதிகாரம் உருவாக துவங்குகிறது.

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற அச்சம் தேவை தான். அது இருப்பதால் தான் யாருக்கும் தெரியாமல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் கூட உள்ளுக்குள் சுற்றத்தாருக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்ற பதட்டத்துடன் இருக்கிறார்கள்.

சுற்றத்தாரை குறித்து, அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதனை குறித்து குழப்பமும் அச்சமும், நடுத்தர வர்க்கத்தினருக்குத்தான் அதிகம் இருக்கும் என சொல்வார்கள். உண்மையில் யாருக்கு அதிகம் இருக்கும் என்றால் அதிகம் பேருக்கு அறிமுகமானவர்களுக்குத்தான் இந்த பயம் இருக்கும். நேரடியாக சொல்வதென்றால் பிரபலங்களுக்கு, அதிலும் ஊராரால் பாராட்டப்படுவோர்களுக்கு.

எதற்கு இப்படி சொல்கிறேன் என்றால் மற்றவர்களால் அதிகம் திட்டப்படுபவர்களும் பிரபலங்கள் தானே? இன்றைய தேதிக்கு மக்கள் சாய் பல்லவியையும், காயத்ரி ரகுராமையும் ஒரே தட்டிலா வைத்து பார்ப்பார்கள்? இருவரும் சினிமாவில் அறிமுகமான நடனம் சம்பந்தப் பட்டவர்கள் தானே? வெறுமனே மக்களுக்கு அறிமுகமானவர்களாக இருந்தால் மட்டும் போதுமா? அவர்கள் பாராட்டும் படி நடந்து கொள்ள வேண்டாமா?

ஊர் போற்றும் அளவிற்கு புகழ் பெற்ற ஒருவர் ஏதேனும் தவறிழைத்து, அது யாருக்கும் தெரியாமல் இரகசியமாகவே இருந்தாலும், ஒவ்வொரு நிமிடமும் "அது வெளியே தெரிந்தால் என்னாகுமோ?" என்று தன் மனமே தன்னைக் கேள்விக் கேட்டு நிம்மதி இழக்க செய்துக் கொண்டிருக்கும். அது போன்ற சமயங்களில் ஊர் புகழும் உத்தமர் என்ற பெயர் இருந்து என்ன செய்து விடப்போகிறது?

அதிகாரம்:கூடாவொழுக்கம்          குறள்: 272

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் 
தான்அறி குற்றம் படின்.

உரை:

வானளவும் உயர்ந்த பெருமையுண்டாயினும் அஃதியாதினைச் செய்யவற்று; தன்னெஞ்சறியக் குற்ற முண்டாயின். தான்- அசை. இஃது இக்கூடா ஒழுக்கத்தானைப் பிறரறிந்து இகழாராயினும் அவன் செய்கின்ற தவத்தினாற் பயனுண்டாகாது என்றது.

-கதிர் ராத்

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்: https://kalakkals.com/kathir-kural-271/

Related Articles