வெளியிடப்பட்ட நேரம்: 11-Aug-2017 , 09:28 AM

கடைசி தொடர்பு: 11-Aug-2017 , 09:28 AM

கதிர் குறள் - 273

kural1

வேங்கை" படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி வரும். கஞ்சா கருப்பு ஒரு பக்கம் விரைப்பாக நின்றுக் கொண்டு வீராப்பாக பேசிக் கொண்டு இருப்பார். காட்சி இறுதியில் தனுஷ் கேட்பார் "நீ உண்மையிலேயே வீரமா நிக்கறியா? இல்லை மோஷன் போய்ட்டு மூவ் பண்ண முடியாம நிக்கறியா?"

தற்போது இந்தியா, சீனா விவகாரத்தில் காக்கும் அமைதி, விடுக்கும் எச்சரிக்கைகளை பார்க்கையில் இந்த காட்சிதான் நினைவுக்கு வருகிறது. பாகிஷ்தான் எல்லை மீறும் போது காட்டும் வீரம், சீனாவிடம் குறைவது போல் தெரியவில்லையா? உண்மைதான். உலகத்தில் பாதி நாடுகள் பயப்படும் அளவிற்கு வளர்ந்த நாடு மீது எடுக்கும் நடவடிக்கையை யோசிக்காமல் எடுக்க முடியாது தான்.

தற்போது யார் முதலில் கை  ஓங்குகிறார்களோ, அவர்களுக்கு எதிராக மற்ற நாடுகள் ஒன்று சேரக்கூடும் என்பதால் தான் இரு நாடுகளும் அமைதியாக இருக்கின்றன. அதனால் தான் போர் மூளாமல் இருக்கிறது என்றும் சொல்லலாம். ஆனால் சீன ஊடகங்களின் சத்தம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது.

இந்த சமயத்தில் "பட்டு சாலை"யில் பங்கேற்காமல் இருப்பதுடன், நேரடியாக எதிர்ப்பை காட்டும் இந்தியாவின் துணிச்சல் பாராட்டுக்குரியதுதான். சில நேரங்களில் கத்தி, கூச்சல் போடுவதைக் காட்டிலும், எதிர்ப்பை தெரிவித்து விட்டு நேருக்கு நேர் அமைதியாய் இருப்பது தான் வலிமையான எதிர்ப்பாக இருக்கும்.

அனைத்து நேரங்களிலும் சொல்லவில்லை, சில நேரங்களில் அஹிம்சை தான் மிகப்பெரிய எதிர்ப்பை காட்டும். மற்ற போராட்டங்களுக்கும், இதற்கும் உள்ள வித்தியாசம் அஹிம்சையில் தான் நாளுக்கு நாள் உடன் போராடுபவர்களின் எண்ணிக்கை கூடும். அதற்கு சமீபத்திய உதாரணமாக ஜல்லிக்கட்டு போராட்டத்தை சொல்லலாம்.

அது தைரியமில்லாதவர்களின் போராட்டமுறை என்று சொல்வார்கள். உண்மையில் அதற்குத்தான் மனதிடம் நிரம்ப வேண்டும். "மன்மதன் அம்பு" படத்தில் த்ரிஷா மன்னிப்பு கேட்கையில் கமல் சொல்லுவார் "வாழ்க்கைல ரொம்ப நாள் ஆயுதம் ஏந்தி போராடறதுக்குத்தான் அதிகம் தைரியம் தேவைன்னு நம்பிட்டுருந்தேன். சமீபத்துலதான் அஹிம்சைக்கு அதை விட தைரியம் அதிகம் தேவைங்கறதை புரிஞ்சுகிட்டேன்". இதை கமல் மட்டும் சொல்லவில்லை. வள்ளுவரும் சொல்லி இருக்கிறார்.

பல குறள்களில் சொல்ல வரும் கருத்துக்களை உவமிக்கும் உவமையின் வழியாக சொல்வது வள்ளுவரின் சிறப்புகளில் ஒன்று. வழக்கமாக நாம் கூட இந்த உதாரணத்தை சொல்லி ஒருவரின் குணத்தை சொல்வோம் "பசுந்தோல் போர்த்திய புலி" என்று. யாரை அப்படி சொல்வோம்? மனதிற்குள் புலியளவு கோபமும், குரோதமும் வைத்துக் கொண்டு, மற்றவர்களை ஏமாற்றுவதற்காக சாந்த சொரூபியாய் வேடமிடுபவர்களை இப்படி சொல்வோம். வள்ளுவர் இதை மாற்றி சொல்கிறார்.

"புலித்தோல் போர்த்திய பசு" என்று. யாரை அப்படி சொல்லலாம்? உள்ளுக்குள் குலை நடுங்கினாலும் "தைரியமிருந்தா என் ஏரியாவுக்கு வாடா" என்று சிம்முபவர்களை சொல்லலாம். அதாவது வீரத்தை புலியின் அடையாளமாக சொல்லலாம் என்கிறேன். வள்ளுவர் புலியின் அடையாளமாக சொல்வது "மனதை கட்டுப்படுத்துவதை".

அதாவது "தவம்" என்பதை புலியின் அடையாளமாக சொல்கிறார். எதன் மீதும் பெரிதாய் விருப்பம் கொள்ளாமல், எதைக் கண்டும் அஞ்சாதவர்களால் தான் தவம் செய்ய முடியும். எதையும் இழக்க துணிந்த குணம் அஹிம்சை வழிப்போராட்டத்திற்கு மட்டுமல்ல, தவ வாழ்விற்கும் அவசியம். அது இல்லாதவர்கள் செய்யும் தவம் எப்படி இருக்கும் தெரியுமா? ஊர் தன்னை வீரன் என நம்ப வேண்டும் என்பதற்காக, புலித்தோலைப் போர்த்திக் கொண்ட பசு, பசி வந்ததும் வயலில் மேய்ந்தால் எப்படி இருக்கும்? அப்படி வேடிக்கையாக இருக்கும் என்கிறார் வள்ளுவர்.

அதிகாரம்: கூடாவொழுக்கம்             குறள்: 273

வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் 
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

உரை:

வலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகிய தவவுருவங் கோடல், பெற்றமானது பிறர் பயப்படும்படி புலியினது தோலைப் போர்த்துப் பைங்கூழ் மேய்ந்த தன்மைத்து.

-கதிர் ராத்

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்: https://kalakkaldreams.com/kathir-kural-272/

Related Articles