வெளியிடப்பட்ட நேரம்: 14-Aug-2017 , 07:21 AM

கடைசி தொடர்பு: 14-Aug-2017 , 07:21 AM

கதிர் குறள் - 274

kural1


"காந்தளூர் வசந்தகுமாரன்" படித்ததுண்டா? சுஜாதா எழுதியதில் மொத்தம் இரண்டு நாவல்கள் தான் வரலாறு தொடர்பானது. ஒன்னு "இரத்தம் ஒரே நிறம்". சிப்பாய் கலகத்தை பற்றி எழுதி இருப்பார். மற்றொன்று "கா.வசந்தகுமாரன்". அதிலேயும் அவரது டிரெட்மார்க் பாத்திரங்களான கனேஷ் - வசந்த் ஐ பயன்படுத்தி இருப்பார். கதைக்காலம் கி.பி 1000. இராஜராஜ சோழன் காலக்கதை. அவரோட அதிகாரிகளில், கிட்டத்தட்ட அமைச்சர் மாதிரி வரவர் கனேச பட்டர்( நம்ம கனேஷ்). அவருடைய சிஷ்யனா வசந்தகுமாரன். பெண்களை பார்த்தா கவிதை சொல்ற அதே வசந்த் தான். இங்கே ஜீனியர் வக்கீல், அங்கே சிஷ்யன்.

மன்னர் காலத்து கதையில் , இங்கே உபயோகிப்படுத்திய இரண்டு பாத்திரங்களை அறிமுகப்படுத்துகையில் இப்படி சொல்வார். "எந்த காலமாக இருந்தாலும் கட்டாயம் எந்த விஷயத்தையும் பொறுமையாக யோசித்து, நிதானமாக பேசும் குணமுடைய ஒருவரும், அதற்கு எதிர்மறையாக எதற்கெடுப்பினும் அவசரப்பட்டு யோசிக்காமல் முந்திக் காரியமாற்றும் குணமுடைய ஒருவரும் இருக்கத்தானே செய்வார்கள்? அந்த இருவர்தான் கனேச பட்டர் - வசந்தகுமாரன்" என்று அறிமுகப் படுத்துவார்.

வாத்தியார் சொன்னபடி பார்த்தால் இப்போது இருக்கும் அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகள் வேண்டுமானால் அப்போது, அதாவது சங்க காலத்தில் என்று வைத்துக் கொள்ளுங்கள், இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் விதவிதமான மனிதர்கள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். நல்லவன், கெட்டவன், முரடன், முட்டாள், அறிவாளி என விசித்திரமான அனைத்து வகை கதாபாத்திரங்களும் இப்போது இருப்பது போல அப்போதும் இருந்திருக்கிறார்கள். எப்போதும் இருப்பார்கள்.

ஆனால் பாருங்கள், மூத்தோர்கள் சொல்லும் போது, இந்த காலம் கெட்டு போய்விட்டது, அப்போதெல்லாம் இப்படி ஏமாற்றும் குணம் மக்களிடையே இல்லை என்பார்கள். அது அப்படியில்லை. இப்போது ஊடகங்களின் வளர்ச்சி காரணமாக மக்களுக்கு தகவல்கள் அதிகம் போய் சேர்கிறது. உதாரணத்திற்கு ஊழலை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த 20 வருடமாகத்தான் இருக்கிறதா? அதற்கு முன்பு இல்லையா? ஆனால் இப்போது போன்றா அப்போது பேசிக் கொண்டிருந்தோம்?

எந்த அளவு நற்குணங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறதோ, அந்தளவு தீய குணம் படைத்தோரும் இருந்திருக்கிறார்கள். தெளிவாக சொல்கிறேனே? நம் நித்தியானந்தா இருக்கிறார் அல்லவா? பாவிகள் கூட்டத்தில் மாட்டிக் கொண்ட ஒரே அப்பாவியான அவரைப் போல போலிச் சாமியார்கள் அந்த காலத்தில் இருந்திருப்பார்கள் என நான் சொல்கிறேன். இல்லை என மறுக்க முடியுமா உங்களால்?

ஏதோ ஒரு காரணத்தினால் தவ வாழ்விற்குள் நுழைந்து விட்டு, முழுமையாக மனதை அடக்க முடியாமல், குறிப்பாக பெண்களிடம் கவிழ்ந்த தவமுனிவர்கள் எத்தனை பேர்? விசுவாமித்தரர் போல சோதனையில் இந்திரலோக பெண்களிடம் தோற்ற முனிவர்கள் கதைகளாக சொல்லப்படுவதை சொல்லவில்லை.

நடப்பு வாழ்க்கையில், அனைத்து மதங்களிலும் அதாவது சைவம், வைணவம், புத்தம், சமணம் அனைத்திலும் தவவாழ்வினுள், துறவறத்தில் நுழைந்து விட்டு, மனதை கட்டுப்படுத்த இயலாமல், பெண்களிடம், குறிப்பாக மாற்றான் மனைவிகளிடம் தவறான உறவை வளர்த்தவர்கள் இருந்திருக்கிறார்கள். இல்லை என்றால் எதற்காக வள்ளுவர் தான் எழுதிய "கூடாவொழுக்கம்" அதிகாரத்தை "துறவறவியல்"லில் கொண்டு வைத்து வைத்திருக்க வேண்டும். "இல்லறவியல்"லில் வைத்திருக்கலாமே?

அதுவும் எப்படி? நேரடியாக "தவம்" என்ற வார்த்தை சொல்லி சொல்கிறார். என்ன சொல்கிறார் என்றால் அனைத்தையும் துறந்த முனிவர் போல் தவவேடம் பூண்டு, தம்மை நல்லவர் என நம்பி, பணிவிடை புரிந்து, ஆசி பெற விரும்பி வரும் பெண்களை, குறிப்பாக அடுத்தவரின் மனைவியை ஏமாற்றி தம் வலையில் விழச் செய்வது எப்படி இருக்கிறது என்றால், புதருக்கு பின் அமைதியாக ஒளிந்துக் கொண்டு, இரை பொறுக்க வரும் பறவைகளை குறி வைத்து வேட்டையாடும்  செயலை போல் உள்ளது. அதாவது "இதுக்கு எதுக்குடா ஊருக்குள்ள காவியும் கமண்டலுமுமா சுத்தறிங்க? அதுக்கு 4 பேர்கிட்ட..." என துப்புகிறார் வள்ளுவர்.

அதிகாரம்: கூடாவொழுக்கம் குறள்: 274

தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து 
வேட்டுவன் புள்சிமிழ்த்து அற்று.

உரை:

தவம் மறைந்து அல்லவை செய்தல் - அவ் வலிஇல் நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல், வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று - வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிணித்தாற்போலும். ¢( 'தவம்' ஆகுபெயர்.தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தன்வயத்தாக்குதல், இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.)

-கதிர் ராத்

Related Articles