வெளியிடப்பட்ட நேரம்: 16-Aug-2017 , 07:22 AM

கடைசி தொடர்பு: 16-Aug-2017 , 10:01 AM

கதிர் குறள் - 275

kural1

"சோதனைகளை கடந்தால் தான் சாதனை" அதனால் எப்போதும் வாழ்வில் பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடாமல், எதிர்த்து போராடி வென்றிட வேண்டும். மேடையில் பலர் இப்படி பேசி கேட்டு இருப்போம். இதில் ஒரு பெரிய குழப்பம் இருக்கிறது. சொல்பவர்கள் அனைவரும் நம் பிரச்சனைகளை எப்படி கையாளுவது என்றுதான் சொல்லித் தருகிறார்களே ஒழிய, யாரும் மற்றவர்களின் பிரச்சனைகளை காண நேரிடுகையில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதில்லை.

எனக்கு ஒரு பிரச்சனை, மனம் தளராமல் போராடுகிறேன். சரி. என் நண்பனுக்கு பிரச்சனை. என்னாலும் உதவ முடியாத நிலை. என்ன செய்ய? முடிந்த வரை உடன் இருந்து ஆறுதலாக இருக்கலாம். இது ஒரு பெரிய விஷயமா? ஆம், சிலருக்கு இது பெரிய விஷயம். யாருக்கு தெரியுமா?

ஓரு புத்தகம் வாசிக்க துவங்கும் போதோ, அல்லது பாதியிலோ கடைசி பக்கம் திருப்பி பார்த்து சோகமான முடிவு என்றவுடன், படிக்க பிடிக்காமல் மூடி வைப்பவர்களை பார்த்ததுண்டா? ஒரு திரைப்படத்தை பார்க்க செல்கையில் எதிர்மறை முடிவு எதுவும் இல்லைதானே என உறுதிபடுத்திக் கொண்டு செல்பவர்களை பற்றி சொல்கிறேன். உடன் பழகுவோருக்கு அனைத்து வகையிலும் உதவும் குணம் இருந்தாலும், பிரச்சனையான நேரத்தில் உடன் இருந்து ஆறுதல் சொல்ல பயப்படுவோர்களைப் பற்றி சொல்கிறேன்.

சிலருக்கு மற்றவர்கள் வாந்தி எடுப்பதை பார்த்தால் வாந்தி வரும், பார்த்ததுண்டா? அதே போல் சிலர் மற்றவர்கள் கதறி அழுவதை பார்த்தால் மயக்கம் வரும். வளர்ந்தவர்களில் சிலர் தான் அப்படி. குழந்தைகளில் அனைவரும் அப்படித்தான். என் அண்ணன் மகன் பள்ளியில் சேர்த்த முதல் நாள் பயங்கர அழுகை. அவன் அப்படி அழுபவன் அல்ல. ஏன் என்று விசாரித்தால் பக்கத்தில் ஒரு பையன் அழுகிறான் என காரணம் சொன்னான். சிலர் வளர்கையில் இப்பழக்கத்தினை மாற்றிக் கொள்கிறார்கள். சிலர் அப்படியே விட்டு விடுகிறார்கள். தவறில்லை. ஆனால் இப்படியும் இருக்கிறார்கள் என்கிறேன்.

பிரச்சனைகளை கையாளும் விதத்தில் மனிதர்கள் நூறு விதம் என்றால், பிரச்சனைகள் ஆயிரம் விதம். பல காரணிகளை வைத்து பிரித்து விளக்கினால் போய்க் கொண்டே இருக்கும். ஒரு வகையை சொல்கிறேன். அதற்கு முன்பு ஒரு கேள்வி. வாழ்வில் கஷ்டம் வரும் போது அனைவரும் சொல்லும் வசனம் ஒன்று இருக்கிறது. என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

"கடவுளே, நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்? எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை?"

இதுதான் அந்த வசனம். இதை மீண்டும் ஒரு முறை வாசித்து பாருங்கள். கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டுமல்ல, இல்லாதவர்களும் இக்கட்டான சூழலில் இதை பொதுவாக சொல்லி கேட்டதுண்டு. ஆக எல்லோருக்கும் நியுட்டன் 3ம் விதி மேல் அபார நம்பிக்கை இருக்கிறது. ஒருவருக்கு கெடுதல் செய்தால், நமக்கு அதே அளவில் பிரச்சனை வரும் என உள்ளுக்குள் நம்புகிறார்கள். இது சற்று விசித்திரமாக இருக்கிறது இல்லையா?

படத்தில் எல்லாம் வருமே? சமீபத்தில் "தனி ஒருவன்" படத்தில் கூட வருமே? " நான் யாரோட மிச்சமும் கிடையாது. எதுக்காக இப்படி ஒருத்தன் வந்து எதிர்க்கிறான்னு அவன் குழம்பி சாகனும்" என்று. கிட்டத்தட்ட எல்லோருக்கும் இருக்கும் பொதுவான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று என்பதைத்தானே இது காட்டுகிறது. இதை கவனிக்க வைத்தவர் வள்ளுவர் தான்.

அவர் தான் தவறு செய்தவர்கள் வாழ்வில் சோதனை வரும். அதுவும் எந்த அளவிலான சோதனை என்றால் " எனக்கு எதனால் இந்த கஷ்டம்?" என யோசித்து குழம்பும் அளவிலாம கஷ்டம் வரும் என்கிறார். யோசிப்பதில் என்ன கஷ்டம் என கேட்கிறீர்களா? சோதனையான காலத்தில் மன உறுதியை மட்டும் இழக்க கூடாது என்பார்கள். அத்தகைய உறுதியை இத்தகைய குழப்பம் எளிதாக உடைத்து எறிந்து விடும். அதன் பின் எங்கு எதிர்த்து நின்று போராடுவது?

எந்த தவறுக்கு இத்தகைய தண்டனை என சொல்கிறார் தெரியுமா? "நான் அனைத்து ஆசைகளையும் விட்டு விட்டேன்" என பகிரங்கமாக சொல்லி விட்டு, துறவறம் மேற்கொள்பவர்கள், பொது வாழ்வில் இருப்பவர்கள், அதாங்க அரசியல்வாதிகள், அதை கடைபிடிக்காமல் ஏமாற்றினால் இப்படி நொந்து அழிந்து போவார்கள் என்கிறார் வள்ளுவர்.

அதிகாரம்: கூடாவொழுக்கம்                    குறள்: 275

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று 
ஏதம் பலவும் தரும்..

உரை:

'பற்றுக்களைத் துறந்தோம்’ என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம், என்ன செய்தோம் என்ன செய்தோம்’ என்று வருந்தும்படியான துன்பம் பலவும் தரும்.

-கதிர் ராத்

 

Related Articles