வெளியிடப்பட்ட நேரம்: 18-Aug-2017 , 08:06 AM

கடைசி தொடர்பு: 19-Aug-2017 , 02:25 PM

கதிர் குறள் - 276

kural1

"சத்யம்" படத்தில் ஒரு காட்சி வரும். மந்திரிகளை கொலை செய்து மாட்டிக் கொள்ளும் உபேந்திரா, விஷாலிடம் சிறைச்சாலையில் பேசும் காட்சி "பிரார்த்தல் பன்னவ, அதையே பண்ணிட்டு இருந்துருந்தா சுட்டுருக்க மாட்டேன், ஐட்டமா இருந்தவ அறநிலையத்துறை மந்திரி ஆனா, அதான் சுட்டேன். கள்ளச்சாராயம் காய்ச்சுனவன் கல்வித்தந்தை, இவங்ககிட்ட நம்ம பிள்ளைங்க படிக்கனும், கருமம், கருமம்". இதில் அந்த "கருமம், கருமம்" என சொல்வது நிஜத்தை சொல்வது போலவே இருக்கிறது இப்போது. யார் நம்மை ஆள்கிறார்கள் என அப்படியே பொறுமையாக பார்த்தால் வரும் எரிச்சலுக்கு அளவே இல்லை.

என்னடா, சினிமாவில் வருவதை வைத்து பேசுகிறானே, என நினைக்க வேண்டாம். "மான்புமிகு மாணவன்" என்று ஒரு விஜய் படம். கல்லூரிக்குள் அரசியல் ரவுடிகள் வந்து தாக்குவது போல் காட்டிவிட்டு, வாய்ஸ் ஓவரில் எஸ்.ஏ.சி பேசுவார். அந்த படம் வந்த போது இப்படி எங்காவது நடக்குமா என்று யோசித்தேன். அடுத்த சில வருடங்களில் ஒரு சட்டக் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களை கொடுரமாக தாக்கிய காட்சியை விடாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை பார்த்து நொந்துக் கொள்வதை தவிர்த்து வேறு வழியில்லாமல் போனது.

வெறுமனே ஆள்கிறவர்கள், கொள்ளையடித்துக் கொண்டு போனால் கூட பரவாயில்லை. துறவிகள் என அவர்களது அடிவருடிகளை விட்டு புகழ்ந்துக் கொள்வது தான் கடுப்பேற்றுவதில் உச்சக்கட்டம். துறவறம் என்றால் திருமணம், செய்து கொள்ளாமல் இருப்பதோ, அல்லது கட்டிய மனைவியை நட்டாற்றில் விட்டு ஓடுவதோ மட்டுமல்ல. சமுதாயத்தில் மக்கள் அனைவருக்காகவும் சிந்திப்பது தான் துறவறம். தன் குடும்பம், தன் வீடு என்று இருந்தவர்கள் மொத்தமாக என் மக்கள், என் உலகம் என யோசிப்பது தான் துறவின் உண்மை நிலை.

எனக்கு நன்குத் தெரிந்த துறவி என்றால் ராமலிங்க அடிகளார் தான். வள்ளலார் என அழைக்கப் படுபவர், பாரதியாரால் "புது நெறிக் கண்ட புலவர்" என அழைக்கப்பட்டார். காரணம் வள்ளாலார் எடுத்த நிலைப்பாடு அப்படி "சங்கடம் தரும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேனே" என பாடிய துறவிகள் வேறு யாரையாவது காட்டுங்கள் பார்க்கலாம்? தமிழின் வளர்ச்சிக்கு வள்ளலார் ஆற்றிய பங்கினை பேசினால் பெரிதாக போகும்.

சாதி, பேதங்களை தவிர்த்ததை விட பெரிய விஷயமாக படுவது அவர் துவங்கிய மூன்று இயக்கங்கள்.
1. சத்திய தரும சாலை - பசி போக்கும்
2. சத்திய சன்மார்க்க சங்கம் - பாகுபாட்டை போக்கும்
3. சத்திய ஞான சபை - அறிவை வளர்க்கும்

யோசித்து பாருங்கள். 19ம் நூற்றாண்டில் மட்டும் எத்தனை பஞ்சங்கள்? இயற்கையோ, செயற்கையோ, அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகள் மட்டும் எத்தனை? மக்கள் மனதில் இருக்கும் தர்ம சிந்தனையை நம்பி ஒரு அடுப்பை பற்ற வைக்கிறார். வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் பசித்தீயை அனைக்க, அடுப்பில் தீ மூட்டுகையில் அவர் சொன்ன வார்த்தை "இந்த உலகில் தர்மம் இருக்கும் வரை இந்த நெருப்பு எரியும். இந்த நெருப்பு எரியும் வரை உலகில் தர்மம் இருக்கும்" அவர் ஏற்றி 150 ஆண்டுகளாக அனையாமல் எரியும் அந்த ஜோதி தானே தர்மம்?

என் நண்பர்களுக்கும் சொல்வதுண்டு. பிள்ளைகளை ஊட்டி, கொடைக்கானல், திருப்பதி, பழனி என அழைத்து செல்வதற்கு முன் வடலூர் சத்திய தருமசாலைக்கு அழைத்து செல்ல சொல்வேன். பசி என்றால் என்ன என புரியாமல், உணவை மதிக்காத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. அதை தவிர்க்க இது உதவும் என்பேன். வெறுமனே தான் சார்ந்த மதத்தை பிடித்து தொங்காமல், மொழிக்காக, சமத்துவத்துக்காக, மக்களுக்காக வாழ்ந்த துறவியினால் தான் "வாடிய பயிரை கண்ட பொழுது வாடினேன்" பாட முடியும்.

இப்படிப்பட்ட மாமனிதர்கள் வாழ்ந்த மண்ணில், அவரைப் பற்றி படித்து தெரிந்துக் கொண்டு விட்டு, ஆடம்பரமாக திரியும் முட்டாள்களையும், மூடர்களையும், வன்முறையாளர்களையும், நேரடியாக சொன்னால் தீவிரவாதிகளை துறவி என சொல்வதைக் கேட்கையில் மனம் எவ்வளவு குளுகுளுவென்று இருக்கும்?

கொடுமையிலும் பெருங்கொடுமை, அனைத்தையும் துறந்த துறவி என சொல்லிக் கொண்டு, மக்களை ஏமாற்றுவதுதான். அது நித்தியானந்தாவோ, சத்குருவோ, பாபா ராம்ததேவோ, ஆதித்யனாத்தோ, மோடியோ, இவர்களுக்கெல்லாம் அப்போதே எழுதி வைத்திருக்கிறார் வள்ளுவர்.

அதிகாரம்: கூடாவொழுக்கம் குறள்: 276

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

உரை:
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவர் போல் இரக்கமற்றவர் வேறு எவரும் இல்லை.

-கதிர் ராத்

Related Articles