வெளியிடப்பட்ட நேரம்: 21-Aug-2017 , 09:09 AM

கடைசி தொடர்பு: 22-Aug-2017 , 11:39 AM

கதிர் குறள் - 277

kural1

ஒருவரை நல்லவர், கெட்டவர் என எதை வைத்து சொல்வோம்? அவரது செயல்களை வைத்துத்தானே? உண்மையில் செயல்களை வைத்து மட்டும் தானா? உதாரணத்திற்கு காதலிப்பது தவறா? இல்லை என்பீர்கள். திருமணத்திற்கு பின் மனைவி விடுத்து வேறு பெண்ணை காதலிப்பது? ஒரே செயல், வெவ்வேறு இடங்களில் வேறுபட்ட குணத்தை சொல்கிறது அல்லவா?

காதல் மட்டுமல்ல, வாழ்வில் அனைத்து செயல்களும் ஒவ்வொரு இடத்தை பொறுத்து மாறும். ஏனெனில் ஒழுக்க விதிகள் ஒவ்வொரு இடத்திலும் மாறும். கேரளாவில் கள்ளுக்கு தடையில்லை. குடிக்கலாம், அதையே கொஞ்சம் தள்ளி வந்து கோயமுத்தூரில் குடித்தால்? அப்படி என்றால் ஒரு அரசாங்கம் பார்த்து சொல்வதை கேட்டு நடப்பது தான் ஒழுக்கமா? அவர்கள் பார்த்து சரி என்றால் அனைத்தும் சரி, தவறென்றால் அனைத்தும் தவறு.

இல்லை. அப்படி இல்லை. நமக்கென்று, நம் மனதினுள் சில கட்டுப்பாடுகள் வேண்டும். அது இயல்பாக வரலாம், அல்லது வளர்த்த விதத்தில் மாறுபடலாம். சட்டம் தண்டிக்கிறதோ, இல்லையோ, நம்மை நம்பியவர்களை ஏமாற்றுவது தவறு, இதை எந்த சட்டமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அப்படித்தான் அனைவரும் வளர்க்கப் படுகிறோம்.

ஏதேனும் ஒரு கட்டத்தில் நம் நடவடிக்கைகள் மாறி, கெட்டுப் போக துவங்குகிறோம் என்றால், முதலில் நம் வீட்டில் விழும் திட்டு நம் நண்பனுக்குத்தான் இருக்கும். அது எந்த வயதாயினும் சரி, சிறு வயதில் பெற்றோரும், வளர்ந்த பின் வாழ்க்கைத் துணையும் திட்டுவார்கள். அவர்கள் உபயோகிக்கும் வசனம் "அவன் செய்வான், அவங்க வீட்ல அப்படி, நீ செய்யலாமா?"

இதை மறுமுறை வாசித்தால் புரியும். அவர்கள் சொல்வதும் ஒன்றுதான். அதாவது நண்பன் இடத்தில் இருந்து பார்த்தால் அது தவறில்லை, அவன் செய்யலாம், நம் வீட்டை பொறுத்த வரை அது தவறு. நீ செய்யக்கூடாது. நம் சூழ்நிலைகளே நம் செயல்களை வரையறுக்கிறது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் களவானி படத்தில் வருமே, "ரெண்டு பொம்பள புள்ளைங்களை பெத்து வச்சுட்டு, பால்டாயிலா குடிக்கற பால்டாயிலு, ராஸ்கல், த்தூ"

பொதுவாக தற்கொலை முயற்சி தவறுதான் என்றாலும், பெண் குழந்தை இருப்பவன் முயற்சித்தது பெரும் தவறாகிறது. ஒவ்வொருவரும் இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு அவர்கள் செய்யும் தவறின் அளவு மாறுபடுகிறது. இந்திய அரசியலமைப்பின் படி, வயது வந்த இருவர் உடலுறவு வைத்துக் கொள்வது குற்றமாகாது. திருமணமானவர் என்றாலும் அதைக் காரணம் காட்டி விவாகரத்து வாங்கிக் கொள்ளலாம் அவ்வளவு தான்.

எதற்காக தேவனாதனை கைது செய்தார்கள்? தவறிழைத்த இடம். அது மட்டுமா? நித்யானந்தா மீது அனைவரும் வெறுப்பைக் காட்ட காரணம் என்ன? புனிதமாக பலரால் மதிக்கப்படும் ஒருவன் செய்யும் தவறினால், அவனைப் போன்று இருக்கும் மற்றவர்களின் மதிப்பு குறைகிறதல்லவா? நித்யானந்தா படம் வந்த பொழுது அவருக்கு மட்டுமா சிக்கலாயிருந்தது? காவி கட்டி, ஆசிரமம் நடத்திய அனைவருக்கும் தான்.

ஒரு இடத்தில், ஒருவர் செய்யும் தவறினால், அங்கிருக்கும்  அனைவருக்கும் சிக்கல் வருகிறது. இது தவிர்க்க இயலாதது. இறைவி படத்தில் கமலினி முகர்ஜி திருமணம் செய்கையில் சொல்வாரே? "சினிமால மட்டும் தான் தப்பு நடக்குதா என்ன, சினிமாக்காரனை குறை சொல்றதுக்கு? எங்கே நடக்கலை? ஏன்? நம்ம சாஃப்ட்வேர்ல நடக்கறதில்லையா?" என்று.

அது போலத்தான், எந்த துறை எடுத்துக் கொண்டாலும் அங்கு நல்லவர்கள் 4 பேர் இருந்தால், கழிசடை ஒருவனாவது இருப்பான். அது தவிர்க்க இயலாது. நாம் அப்படி இருக்கக் கூடாது என எதிர்பார்த்தாலும் அதுதான் நிதர்சனம்.வள்ளவர் அதற்கு உதாரணமாக "குன்றிமணி"யை சொல்கிறார். திருக்குறளில் வரும் ஒரே விதை இந்த விதைதான். சிறுவயதில் கிராமத்தில் வளர்ந்த அனிவரும் இதை வைத்து விளையாடியிருப்போம். நாங்கள் இதை திமுக விதை என்று சொல்வோம். காரணம் சொல்ல தேவையில்லை. நாட்டில் அழியும் தருவாயில் இருக்கும் மரங்க்களில் இதுவும் ஒன்று என்பது வருந்தத்தக்கது.

அதிகாரம்: கூடாவொழுக்கம்           குறள்: 277

புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி 
மூக்கின் கரியார் உடைத்து.

உரை:

புறத்தில் குன்றிமணிபோல் செம்மையானவராய்க் காணப்பட்டாராயினும், அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உண்டு.

Related Articles