வெளியிடப்பட்ட நேரம்: 22-Aug-2017 , 08:34 AM

கடைசி தொடர்பு: 22-Aug-2017 , 09:11 AM

கதிர் குறள் -278

kural1

"அவனை எவ்வளவு நம்புனேன், என்னை இப்படி நம்ப வச்சு ஏமாத்திட்டானே"

பொதுவாக யாரிடமாவது ஏமாறுகையில் அனைவரும் சொல்லும் வசனம் தான். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஏமாற்றப் போகும் எவனும் "என்னை நம்புங்கள், நான் ஏமாற்ற மாட்டேன்" என உத்திரவாதம் தந்திருக்க மாட்டான். பின் எதை வைத்து ஒருவரை நம்புகிறோம்.

முதலில் எந்தெந்த விசயங்க்களுக்கு ஒருவரை நம்ப வேண்டி இருக்கிறது? அப்படி எல்லாம் பட்டியல் இடுவது மிக கடினம். பேருந்தில் நம்முடன் இரவு பயணிப்பவர் மீது சந்தேகம் வந்தாலே உறங்க இயலாது. எங்கே போனை தூக்கிச் சென்று விடுவானோ என்ற பயம் இருக்கும். முதலில் ஒருவரை பார்த்த உடனே மனம் அவரை ஆராய துவங்குகிறது. நமக்கென சில கற்பிதங்கள் இருக்கும். நேரடியாக சொல்ல வேண்டுமென்றால் "நிறம்".

கருப்பான ஒருவரை மனம் எளிதில் நம்ப மறுக்கிறது. அடிமை புத்தியின் நீட்சி இது. நாம் மட்டுமல்ல, உலகமே இந்த நிற பேதைமையில் சிக்கி உழல்கிறது. சமீபத்தில் ஒரு வித்தியாசமான அழகிப் போட்டி நடத்தப் பட்டது. என்ன வித்தியாசம் என்றால் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் அவர்களது புகைப்படங்களை அனுப்ப வேண்டும். நடுவர்களாக புரோகிராம் செய்யப்பட்ட ரோபோக்கள் தேர்வு செய்யும். 3000 பேர் கலந்துக் கொண்டார்கள். போட்டி முடிந்து வெற்றி பெற்றவர்களும் பரிசு வாங்கி சென்ற பின், 2 வருடங்களுக்கு பிறகுதான் கவனித்திருக்கிறார்கள், போட்டியில் கலந்துக் கொண்ட கருப்பான பெண்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் இருந்த பாகுபாட்டை.

ரோபோக்களின் தவறல்ல, அதை புரோகிராம் செய்தவரின் தவறு. ஆனால் என்ன கொடுமை பாருங்கள். கருப்பாக இருந்தால் அழகு இல்லை. கருப்பாக இருந்தால் நல்லவர்களாக இருக்க வாய்ப்பு குறைவு என புதிதாய் முன்னேறிக் கொண்டிருக்கும் ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜெண்ட் துறையில் புரோகிராம்கள் எழுதப்படுவதாக நாளிதழில் படித்தேன்.

கபாலி படத்தில் ஒரு காட்சி வரும். ராதிகா ஆப்தேவை தேடி சென்னை வருகையில் தங்களுக்கு உதவ வரும் ஒருவரை தன்சிகா சந்தேகமாகவே பார்த்துக் கொண்டிருப்பார். காரணம் அவரது முகம். அதை இரஜினி அழகாக எடுத்து சொல்வார் "முகத்துல என்னம்மா இருக்கு?" என்று. வெறும் நிறத்தையும் முகத்தையும் உருவத்தையும் பார்த்து ஒருவரது குணத்தை மதிப்பிட முடியும் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?

அன்பே சிவம் படத்தில் கமலஹாசன் அறிமுகமே இப்படித்தான் நடக்கும். அவரது அவலட்சணமான முகத்தை பார்த்து அழகான மாதவன் அவர் தீவிரவாதி என முடிவு செய்து விடுவார். ஆனால் அவர் கண்ணுக்கு இலட்சணமாக, நாகரீகமாக தெரியும் யூகிசேது தான் திருடனாக இருப்பார்.

நடிகர் நாசர் இயக்கியது மொத்தம் 3 படங்கள். அதில் இரண்டாவது படம் "முகம்". எத்தனை பேர் பார்த்ததுண்டு எனத் தெரியவில்லை. அப்படத்தில் அருமையாக வெறும் நிறத்தையும் முகத்தையும் பார்த்து ஒருவரை மக்கள் தங்கள் தலைவனாக ஏற்றுக் கொள்வதன் அபத்தத்தை சுட்டிக் காட்டி இருப்பார். அவர் எம்ஜியாரைத்தான் குறிப்பிடுவதாக எனக்குத் தோன்றியது.

ஒருவரின் நிறத்தை, உருவத்தை பார்த்து அவரை நம்பாமல் இருப்பதை விட அபத்தமானது வெறுமனே புறத்தோற்றத்தை வைத்து ஒருவரை நம்பி விடுவது. யாரும் இதை திட்டமிட்டு செய்வதில்லை. நம் மனமே முதலில் நம்பி விட்டுத்தான் நம்மிடம் சொல்லும். ஆனால் இதை யாருமே நமக்கு சொல்லித் தருவதில்லையே! பின் எப்படி? எந்த வீட்டிலாவது, அழகாக இருப்போரிடம், சிகப்பாக இருப்போரிடம் மட்டும் பழக சொல்லிச் சொல்கிறார்களா என்ன? எங்கிருந்து இந்த புத்தி வந்து சேர்கிறது?

எப்படியோ வந்து விட்டது. அடுத்த தலைமுறையையாவது இது போன்ற எண்ணங்கள் ஏதுமின்றி வளர்க்க வேண்டும். விழிப்போடு இருக்க வேண்டுமெனில் யாரையுமே முழுவதும் நம்ப வேண்டியதில்லை. சொல்வார்களே? "கண்ணால் காண்பதை பாதி நம்பு, காதால் கேட்பதை சுத்தமாக நம்பாதே" என்று. அதை சொல்லி வளர்த்தாலே போதுமானதாக இருக்கும் என நம்புகிறேன்.

ஏனென்றால் நம் கண்களால் அனைத்தையும் பார்த்து விட முடியாது என்பதே உண்மை. ஒருவரை பார்க்கிறோம் என்றால் கூட அவர் முதுகில் கத்தி வைத்திருந்தால் நம் கண்களுக்கு தெரியவா போகிறது? ஒவ்வொருவருக்கும் இருக்கும் மறுபக்கம் எவ்வளவு மோசமானதாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீருக்குள் ஒருவர் அமர்ந்திருந்தால் நமக்கு அவர் தலை மட்டும் தான் தெரியும். கீழே அவர் உடல் எவ்வளவு அசுத்தமாக இருக்கிறது என்பது தெரியவா போகிறது? அது போல வெளி உலகில் ஒருவர் நல்லவர் போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் எவ்வளவு மோசமானவராக இருப்பார் என்பதை கண்டறிந்து விட முடியும் என்பது சாத்தியமா? இது போன்றவர்கள் நிறைந்து வாழும் இவ்வுலகில் எச்சரிக்கையாக இருக்க சொல்கிறார் வள்ளுவர்.

அதிகாரம்: கூடாவொழுக்கம் குறள்: 278

மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்

உரை:
மனத்தில் மாசு இருக்கத் தவத்தால் மாண்பு பெற்றவரைப் போல நீரில் மூழ்கி மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.

முந்தைய குறளை வாசிக்க இங்கே சொடுக்கவும் : https://kalakkaldreams.com/kathir-kural-277/

Related Articles