வெளியிடப்பட்ட நேரம்: 23-Aug-2017 , 07:46 AM

கடைசி தொடர்பு: 23-Aug-2017 , 07:46 AM

கதிர் குறள் - 279

kural1


மத்த நாடுகள் எவ்வளவோ முன்னேறி இருக்கலாம், ஆனால் கூடி வாழும் பழக்கம் சுத்தமா அங்கே இருக்காது. பக்கத்து அபார்ட்மெண்ட் பற்றி இங்கே நகரத்தில்  இருப்போர்களே கண்டுக் கொள்வதில்லை, அங்கே எப்படி இருக்கும் என யோசித்துக் கொள்ளுங்க்கள். இன்னமும் இந்தியாவில் நகரங்கள் உட்பட, சில மேட்டுக்குடியினரைத் தவிர, அனைவரும் சக மனிதருக்கு ஒன்றென்றால் பிரதிபலன் பாராமல் ஓடி வருவார்கள். அதனால் தான் எனக்கு சுத்தமான நாடுகள் என சொல்லிக் கொள்பவர்களை காட்டிலும், இந்த அழுக்கு தேசத்தை மிகவும் பிடித்திருக்கிறது.

மேற்காணும் வாக்கியங்களை சொன்னது சுஜாதா. முழுவதும் சரியாக இருக்காது, ஆனால் அவர் சொன்ன விசயம் இதுதான். இந்தியர்களுக்கு மற்ற தேசத்தவர்களை காட்டிலும் மனிதாபிமானம் அதிகம்.  என்ன மூட நம்பிக்கைகளும் அதிகம், அது மட்டும் தான் பிரச்சனை. முக்கியமாக இதில் கவனிக்க வேண்டியது வாத்தியார் இறுதியாக சொன்னது "அழுக்கு இந்தியா". ஆமாடா, இங்கே சுத்தம் கொஞ்சம் கம்மிதான், அதுக்கு என்ன இப்ப? என கேட்கும் தொனி.

ஏன் வெளித் தோற்றத்தையே வைத்து மதிப்பிடுகிறாய்? மனிதர்களின் குணத்தைப் பார். அவனது செய்கையை வைத்து மதிப்பிடு என்கிறார். இந்தியாவில் மட்டும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அரசு அமைந்தால் மக்கள் தேசத்தை எப்படி வடிவமைப்பார்கள் என யோசித்துப் பாருங்கள். குப்தர்கள் ஆட்சி காலத்தில் திருட்டு என்பதே சுத்தமாக இல்லாத தேசமாக இருந்ததாக வெளி நாட்டு பயணிகளின் குறிப்புகள் சொல்கின்றன.

தன் தேவை தீர்கையில் எதற்கு ஒருவன் அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்பட போகிறான்? திருட்டை விடுங்கள். தீவிரவாதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நல்ல, வேண்டாம் சுமாரான வேலையில் இருப்பவன் எவனாவது அதை விட்டு வெளியேறி, ஆயுதத்தை கையில் எடுக்கிறானா? இளைஞர்களுக்கு வேலை கொடுத்தால் அவன் ஏன் அரசுக்கு எதிராக போராட போகிறான்? தவறு யார் மீது இருக்கிறது?

ஓருவன் வாழ்வதற்கான குறைந்த பட்ச தேவை பூர்த்தியடைகையில், அந்த பாதுகாப்பான சூழலை விடுத்து வெளியேறி போரடுபவர்கள் மிகவும் குறைவு. இந்தியர்களின் பலமும் இந்த சகிப்புத்தன்மை தான், பல்வீனமும் இதுதான். நாட்டிற்குள் தான் வடக்கே இருக்கும் சில அறிவாளிகள் தெற்கில் இருப்போரை கருப்பு என சொல்லிக் கொள்வது. வெளிநாட்டிற்கு சென்றால் இந்தியர்கள் என்றாலே ஒரே வசனம் தான். "அதுக்குலாம் ஒரு தகுதி வேணும்டா கருவாப்பயலே" தான்.

காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு போன பிறகுதான் இதை தெரிந்துக் கொண்டார். அங்கு இந்தியன் என்றாலே அவனை "கூலி" என்று அழைப்பது தான் வழக்கம். சில பல அவமானங்களை கண்டு, 4 இடத்தில் மிதி வாங்கிய பிறகுதான் காந்திக்கு புத்தியே வந்தது. அதன் பிறகுதான் ஒருவரை பிறப்பு, நிறம், உருவம் காரணமாக ஒதுக்கக் கூடாது என முடிவு செய்கிறார். அது வரை சமையலுக்கு என்றால் கூட பிராமணர் தான் வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தவர் தான்.

ஆனால் இது போன்று பிறரால் அவமான படுத்தப் படாமல், வள்ளுவர் எங்கு இருந்து சமத்துவத்தை கற்றிருப்பார் என்று தெரியவில்லை. அதிலும் உருவத்தை வைத்து ஒருவர் குணத்தை முடிவு செய்யக் கூடாது என பல இடத்தில் சொல்லி இருக்கிறார்.

பொதுவாக ஒரு பொருளை தேர்ந்தெடுக்கையில் அதன் வடிவத்தை வைத்துத்தான் முடிவெடுப்போம். பொது புத்தி நேராக இருக்கும் பொருளை நல்லது என்றும், கோணலானதை கெட்டது என்றும் சொல்லும். ஆனால் அம்பு - நேரானது. கொலை செய்ய வல்லது. யாழ் வளைந்தது. இனிமையான இசையை தர வல்லது. எனவே எந்த இடத்திலும் புறத்தோற்றத்தை வைத்து முடிவு எடுக்காமல், செயல்களை கொண்டு முடிவெடுக்க சொல்கிறார் வள்ளுவர்.

அதிகாரம்: கூடாவொழுக்கம்                  குறள்: 279

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன 
வினைபடு பாலால் கொளல்.

உரை:

நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது; மக்களின் பண்புகளையும் செயல் வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Related Articles