வெளியிடப்பட்ட நேரம்: 02-May-2017 , 07:20 AM

கடைசி தொடர்பு: 02-May-2017 , 07:20 AM

கட்டா - புத்தக விமர்சனம்

katta image

கடந்த சனிக்கிழமை இரவு எட்டு மணிக்கு ஒரு நண்பர் கிட்ட இருந்து அழைப்பு, பிசியாக இல்லாவிடில் பக்கத்தில் உள்ள கவிக்கோ மன்றம் வரவும். ஒரு புத்தக வெளியீட்டு விழா நடந்துக் கொண்டு இருக்கிறது என்ற ஒரு குறுஞ்செய்தி. விழா அழைப்பிதழ் பார்த்தால் நம்ம தோழியின் இரண்டு புத்தகங்கள் வெளியீட்டு விழா. சரி இந்த நேரத்திற்கு விழா முடிந்து இருக்கும், போய் புத்தகம் மட்டும் வாங்கி விட்டு வருவோம் என்ற நினைப்புடன் , அந்த விழாவிற்கு சென்ற போது, அப்போது தான் அந்த புத்தகம் பற்றி பேச ஆரம்பித்து இருந்தார்கள்.


இரண்டு பேர் அந்த புத்தகம் பற்றி இன்னும் முழுமையாக படிக்கவில்லை, இருந்தாலும் இது ஆன்ட்டி ஹீரோ சப்ஜெக்ட், இந்த உலகம் சித்தார்த் அபிமன்யூகளை மட்டுமே நினைவில் கொள்ளும், அந்த வகையில் இந்த கதையின் நாயகன் எப்போதும் நினைவில் இருப்பான் என்று வாழ்த்துரை வழங்கி சென்றார்கள். அதற்கு பின் அவர்கள் அதிகமாக கவலைப்பட்ட ஒரு விசயம், மொழி நடை, வட சென்னையின் பேச்சு வழக்கில் வரும் சர்வ சாதாரணமாக கெட்ட வார்த்தை புத்தகம் முழுவதும் வருகின்றது, ஒரு பெண்ணாக, அதுவும் மத நம்பிக்கையில் ஈடுபாடு உள்ள பெண் பொது வெளியில் இத்தகைய விமர்சனங்களை எவ்வாறு எதிர்க்கொள்ள போகிறாள்? என்று அவரது நண்பர்கள் கருத்துக்கள் தெரிவித்த போது, ஏன் இந்த கவலை இவர்களுக்கு என்ற எண்ணம் எழுந்தது.

எப்போதும் ஒரு புதிய புத்தகம் வாங்கிய கையுடன் அதனை படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த நாவலும் அப்படித் தான். நிறைய நாட்கள் புத்தகத்தை வாசிக்காத போது திரும்ப படிக்க ஆரம்பிக்கும் போது , முதலில் எடுப்பது ரமணி சந்திரன் அவர்களின் புத்தகங்கள் மட்டும் தான். காரணம் இரண்டு விசயங்கள் 1. நாவலின் மைய இழை எப்போதும் ஒன்று தான். ஒரு கம்பீரமான இளம் தொழில் அதிசயம் அதிபர் நாயகன், ஒரு அன்பான நாயகி, இவர்கள் நடுவில் நடக்கும் காதல், கடைசியில் சுபம். அதனால் பெரியதாக எதுவும் யோசிக்க அவசியம் இல்லை, இலகுவாக வாசித்துக் கொண்டே சென்றால் போதும். 2. அவர்களின் சரளமாக மொழி நடை, தொய்வில்லாமல் தொடர்ந்து செல்ல வைக்கும்.

கட்டாவை படித்ததும் எனக்கு தோன்றியது இது தான்,  இது இது வரை உருவாக்கி வைத்து இருந்த நாயகன்  நாயகி பிம்பங்களுக்கு எதிரானது. சம கால கட்டத்தில் நடக்கும் இதற்கும் காதல் மட்டுமே மைய இழை. இங்கும் நாயகன் ஆண்மை மிக்கவனாக வருகிறான். அது நாம் வழக்கமாக காணும் பிறர் மனை நோக்கா பேராண்மை இல்லை, ஒரு மூத்திரச் சந்தில், இருளில், ஒரு பெண்ணை ஆளுமை செய்யும் ஆண்மை, அதை எதிர் நோக்கும் நாயகி கண்ணை, குற்ற உணர்வு இல்லாமல் நேருக்கு நேர் பார்த்து சிந்தும் அந்த புன்னகை, நாயகியை அவன் மீது காதல் கொள்ள வைக்கிறது. ஹீரோவை தனுஷ் சாயலில் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று ஆசிரியர் சொல்லும் முன்பே, புதுப்பேட்டை படம் நமக்கு நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை.

நாயகி, படித்து கை நிறைய சம்பளம் வாங்கும் ஐடி துறையில் வேலை பார்க்கும் ஒரு பெண், காதல் மற்றும் காதல் சார்ந்த இடம் நாயகன் தவிர வேற யாருக்கும் கிடையாது, அந்த அளவிற்கு அளவில்லா, எதிர் பார்ப்பு இல்லாத, முடிவு தெரிந்தே உள்ள காதலை , அது தரும்  அந்த கணத்தில் உள்ள போதையை அனுபவிக்கும் பெண். அந்த காதல் போதைக்கு என்ன என்றாலும் செய்யத் தயாராக உள்ள பெண்.

நாயகன் வேலை நிழல் உலகத்தில், அதனால் வரும் வெறுப்புகள்- வளர்த்து விட்ட ஆளை மதிக்கவில்லை என்ற சுரேகா ,டெல்லியில் எம் பி யின் உதவியாளர் டிராய்யின் நட்பு, துரோகம்- சிறு வயதில் இருந்தே கூட இருந்து,  உற்ற நண்பன் என்று சொல்லிக் கொள்ளும், எப்போதும் இரண்டாம் நிலையில் உள்ளதாக கருதும் மிண்ட் , வளர்ப்பு தந்தை ரகுமான் பாய் , எதிரியாக பாவிக்கும் சோனம் என்று மிக குறைந்த அளவில் உள்ள பாத்திரங்கள் எல்லாம் காதலுக்கு பக்க வாத்தியங்கள் போல் உள்ளது.

வாட்ஸ் அப் உரையாடல்கள், இரண்டு  தடவையும் சம காலத்தை கண்ணுக்கு முன் கொண்டு வருகின்றது.


முதல் ஏழு அத்தியாயங்கள் வரை கதையின் ஆரம்பம் இழுத்து சொல்லப்பட்டாலும் , கடைசி இரண்டு அத்தியாயங்களில் டக் கென்று முடிந்து விடுகின்ற உணர்வு. அவைகளை விரிவாக எழுதி இருக்கலாம்.


அமேசான் காட்டு அரிய வகை மூளிகை என்று ள ,ல பிழைகள் எல்லாம் இந்த அளவு பெரிய பதிப்பகத்தில் வெளி வரும் புத்தகத்தில் எதிர் பார்க்கவில்லை.

கெட்ட வார்த்தைகள் இங்க முகநூலில் சர்வ சாதாரணமாக புழங்கும் வார்த்தைகள் தான். ஒரு எட்டு பத்து வார்த்தைகள் மட்டும் தான் ஒரு ஐந்து பக்கங்களில் மட்டுமே வருகின்றது. இதற்கா இத்தனை பேர் கவலைப்பட்டு பேசியது என்ற எண்ணம் எழுந்தது.

சில  இடங்களில் 70களில் என்று சொல்லப் பட்டாலும் கதை, தள்ளிப் போகாதே, என்னை தள்ளிப் போக சொல்லாதே என்ற பாடல் வெளி வந்த கால கட்டத்தில் தான் நடக்கிறது என்பதையும் வித்தியாசப்படுத்த முடிவதில்லை. இருப்பினும்

ஒரு அழகான காதல் கவிதை பாராட்டுக்கள் சாரா.....


- Dr. இராதாகுமார் M.D.,D.M

Related Articles