வெளியிடப்பட்ட நேரம்: 22-May-2019 , 10:00 AM

கடைசி தொடர்பு: 22-May-2019 , 06:23 PM

லாகிரி - புத்தக விமர்சனம்

FB_IMG_1558462430342

மனிதன் தனக்கான நிம்மதியை ஏதாவதொரு போதையில் பெற்றுக்கொள்கிறான் என்பதில் ஐயமில்லை. பசித்த குழதைக்கு தாய்ப்பால் போதை, வளர்ந்த சிறுவர்களுக்கு விளையாட்டின் மீது போதை, பள்ளி பருவத்தில் விடுமுறைகளின் மீது போதை, கல்லூரி காலத்தில் காதல் மீது போதை, பருவ வயதில் காமத்தின் மீது போதை, என எதிலாவது எப்படியாவது தேடி தனக்கான போதையில் தன்னை மறந்து தன்னையே தேடிக்கொண்டு இருக்கிறோம். போதையை அளவோடு வைத்துகொண்டால் அழகான ஒன்று தான்.

ஆனால் நரன் தந்திருக்கும் இந்த "லாகிரி" போதையின் உச்சம் என்பேன். எத்தனை முறை உபயோகித்த பின்பு தீரவேயில்லை. தீரவும் வேண்டாம்.

என் இரவுகளை பெரும்பாலும் கற்பனைகளையோ அல்லது கனவுகளையோ மேய்த்துக்கொண்டு கடத்திக்கொண்டிருப்பேன்.முதன்முறையாக ஒரு போதை பொருள் கொண்டு கடத்தியிருக்கிறேன். இதுவும் மகிழ்வையே தருகிறது.

"லாகிரி"- ஓர் 71 பக்க கஞ்சா பொட்டளம். இதை கசக்க வேண்டாம், தீ குளிப்பாட்ட வேண்டாம், இழுத்து ரசிக்க வேண்டாம், தன்னாலே போதை தரும்.

🌿🌿🌿
இந்த சுவரை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கையில்
அதன் உள்ளே செங்கற்கள் தெரிகிறது.
இன்னமும் உற்றுப் பார்க்கப்பார்க்க
சூளை தெரிகிறது.
குழைக்கும் மண் தெரிகிறது.
அதன்மேல் மண்ணை மிதிக்கும் சூளைச் சிறுவனின் பாதங்கள்
தெரிகிறது.
அந்தப் பாதத்தின் மேல்தான் நீங்கள் ஆணி
அடித்திருக்கிறிர்கள்.
மேலும்.....
இயேசு நாதர் சிலுவையில் தொங்கும் புகைப்படம்.
🌿🌿🌿

இந்த கவிதை தொகுப்பு குறிப்பாக இதை மட்டுமே தந்திருக்கிறது என்பதைவிட சமூகத்தில் பரவி கிடக்கும் குறைகளை குறி வைத்து கொண்டு... இருக்கிறது. மனிதன் எத்தகைய பச்சோத்தி என்பதை இந்த கவிதை லேசான இறகால் அடித்து சொல்லிக்கொடுக்கிறது.

🌿🌿🌿
மூன்று குற்றங்களால் என்னை நிரூபித்தார்கள்
அரசுக்கு 'ஆதரவாய்' ஒட்டப்பட்ட சுவரொட்டிகளின் பின்னால்
என் எச்சிலும், என் நாவின் தடமிருந்தது
அரசுக்கு 'எதிராய்' ஒட்டப்பட்ட சுவரொட்டிகளின் பின்னால்
என் எச்சிலும், என் நாவின் தடமிருந்தது
மற்றும்
அரசு இனாமாய்க் கொடுத்த பணத்தை எண்ண
என் எச்சிலும், என் நாவின் தடமுமிருந்தது.
🌿🌿🌿

🌿🌿🌿
அவ்வளவு கிலோ மீட்டர்கள் உற்பத்தியாகும்
நைலான் கயிற்று தொழிற்சாலையில்
எந்த மூன்று முழமோ...
சுழலும் கோடி மின்விசிறிகளில்
எந்த மின்விசிறி சட்டென நிறுத்தப்படுகிறதோ...
விளைந்த அவ்வளவு மரங்களில்
எது தாழிடப்படும் கதவோ...
எது உதைந்து கீழே தள்ளப்படும் நாற்காலியோ...
உச்சரிக்கப்பட்ட அவ்வளவு வார்த்தைகளில்
எந்த ஒரு வார்த்தையோ...
🌿🌿🌿

கவனம் இந்த தொகுப்பில் நீங்கள் கண்டிபாக மனதை தொலைத்து தேடிக்கொண்டு இருக்கும் பகுதிகளாக சில இருக்கிறது. "சிசு", "உடை", "வெதுப்பகம்", "மற்றபடி நாங்கள் காதலிக்கிறோம்", "பூட்டு", "கொலாஜ்" - பார்த்து கடந்து வாருங்கள்.

🌿🌿🌿
மேய்ச்சலில் என் ஆடுகளுக்கு
தினமும் கஞ்சா செடிகளை உண்ணக் கொடுப்பேன்.
ஒரு நாளில் அவ்வாடு வேக வைக்கப்பட்டு என்னால்
சுவைக்கப்படும்...
இப்படியும் கஞ்சா புகைக்கலாம்.

🌿🌿🌿

நீ எதுவரை வாழவிரும்புகிறாய்.?
இக்கஞ்சாத் தோட்டத்தின் கடைசி செடி வரை

🌿🌿🌿

நான் விதைக்கவுமில்லை: அறுக்கவுமில்லை: வெறுமனே புகைக்கிறேன்.
மல்லாந்து... ஏகாதிபத்தியக்காரனைப் போல.
🌿🌿🌿

இரவில் லாகிரிக்குள் தொலைந்துவிட ஆசைபட்டேன், அதற்குள் தொலைந்தும்விட்டேன் இப்போது தேட மனமில்லை இருந்தும் தேடிக்கொண்டு இருக்கிறேன் லாகிரியைபோல் வேறொன்றை "நரன்" தருவார் இதைவிட அதிகமாக நான் தொலைந்துபோவதற்கு.

நன்றி 🙏"நரன்" சகோதரரே

- அருண் ராஜ்

Related Articles