வெளியிடப்பட்ட நேரம்: 10-Aug-2020 , 04:33 PM

கடைசி தொடர்பு: 10-Aug-2020 , 04:33 PM

லஷ்மி மூவி மேக்கர்ஸ் சுவாமிநாதன் மறைவு

swaminathan

கோகுலத்தில் சீதை, பிரியமுடன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை நினைத்து, பகவதி, அன்பே சிவம், புதுப்பேட்டை, உள்ளிட்ட பல படங்களை 90கள் முதல் தயாரித்து வருகிறது லட்சுமி மூவி மேக்கர்ஸ் திரைப்பட நிறுவனம். இந்த நிறுவனத்தின் 3 உரிமையாளர்களில் ஒருவர் வி. சுவாமிநாதன். சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் சுவாமிநாதன் சமீபத்தில் பாதிக்கப்பட்டார் இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுவாமிநாதன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் சுவாமிநாதனின் மறைவு திரையுலகினருக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

வி சுவாமிநாதனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அஸ்வின் ராஜா கும்கி படத்தில் காமெடியனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் முன்பே அவர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மொட்டை ராஜேந்திரனின் மகனாக நடித்து இருந்தார். ஆர்யா, சந்தானம் உடன் அவர் செய்த காமெடி நல்ல வரவேற்பை பெற்றது. கும்கி அஸ்வினுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாமிநாதன் தொண்ணூறுகளில் இருந்து பல முன்னணி ஹீரோக்களுடன் படங்கள் தயாரித்து வந்திருக்கிறார். சரத்குமார் நடித்த அரண்மனை காவலன் என்ற படம் தான் இவரது முதல் படம். அதற்கு பிறகு கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் படத்தையும் அவர் தயாரித்திருந்தார். சுந்தர் சி தான் அந்த படத்தை இயக்கியிருந்தார்.

சுந்தர் சி உடன் அவர் தொடர்ந்து 5 படங்களில் பணியாற்றி இருக்கிறார். உனக்காக எல்லாம் உனக்காக, உன்னை தேடி, கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளை போகுதே என தொடர்ந்து சுந்தர் சி படங்களை அவர் தயாரித்து இருக்கிறார்.

மேலும் தளபதி விஜய் நடித்த பிரியமுடன் மற்றும் பகவதி ஆகிய படங்களையும் தயாரித்தது சுவாமிநாதன் தான். பகவதி படத்தில் ஒரு காட்சியிலும் சுவாமிநாதன் நடித்து இருந்தார்.

அஜித்துடன் இரண்டு படங்களில் அவர் பணியாற்றி இருக்கிறார். உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் மற்றும் உன்னை தேடி ஆகிய படங்களை அவர் தயாரித்து இருக்கிறார். மேலும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய படம் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படம், அதையும் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கடைசியாக சுவாமிநாதன் தயாரித்திருந்த படம் ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடித்த சகலகலா வல்லவன் படம். அதனை சுராஜ் இயக்கி இருந்தார்.

சுவாமிநாதன் மறைவுக்கு முன்னணி சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.





Related Articles