வெளியிடப்பட்ட நேரம்: 15-Oct-2018 , 02:57 AM

கடைசி தொடர்பு: 15-Oct-2018 , 02:57 AM

மனுசங்கடா - திரை விமர்சனம்

FB_IMG_1539551575927

“மனுசங்கடா...”

தமிழ்த் திரையுலகில் புதிய அலை எழுச்சி தொடங்கி விட்டதை மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், 96 உள்ளிட்ட சமீப கால படங்கள் காட்டுகின்றன. அந்த வரிசையில் இதோ இயக்குநர் அம்ஷன் குமாரின் “மனுசங்கடா”...

இந்த திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது.

“சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே,
சாதியில் மேலோர் என்றும்,
தாழ்ந்தவர் கீழோர் என்றும் பேதமில்லாது,
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு,
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு,
உலகினிலே இதுதான்
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே.”

“... புகழ்பெற்ற இந்த திரைப்படப் பாடலை, ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2008, 2009-ல் இரண்டு வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். பொது சுடுகாடு, இடுகாடு அமைத்து சாதி பாகுபாடுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.

“அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகள் ஆகியும் தீண்டாமை இன்னும் முழுமையாக ஒழிந்தபாடில்லை.

“தமிழ்நாட்டில் ஏறக்குறைய 1 கோடி தலித் மக்கள் வாழ்கிறார்கள். அரசமைப்பு சட்டத்தின் 17-வது விதி, அனைத்து வகையான தீண்டாமைகளுக்கும் முடிவு கட்டிய போதிலும் பொது சுடுகாடு, இடுகாடு என்பதும், அவற்றில் புதைப்பதும் எரிப்பதும், இறந்துபோன தலித்தின் உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்வது என்பதும் இன்னும் கனவாகவே இருக்கிறது.

“தமிழகத்தில் உள்ள 30 ஆயிரம் கிராமங்களில் 75 சதவீத கிராமங்களில் சுடுகாடு, இடுகாடு சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளன...” என்பதை எல்லாம் விரிவாகவும் ஆழமாகவும் சுட்டிக் காட்டி, கடந்த 2011 மார்ச்- ஏப்ரல் பிரன்ட்லைன் ஆங்கில இதழில் “தொட்டிலில் இருந்து சுடுகாடு வரை” (Cradle to Grave ) என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் தோழர் எஸ்.துரைராஜ் எழுதிய கட்டுரை எழுப்பிய பல செய்திகள் நினைவுக்கு வந்தன.

இது வரையிலும், எழுத்திலும் பேச்சிலும், பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும், கூட்டங்களிலும், மேடைகளிலும் மட்டுமே எழுப்பப்பட்டு வந்த, இன்றைக்கும் பற்றி எரியும் பிரச்சினையான சுடுகாட்டுப் பாதை, பொது சுடுகாடு பிரச்சினையை கதைக் கருவாக க் கொண்டு, முதன் முதலாக இயக்குநர் அம்ஷன் குமார் திரை வடிவம் கொடுத்திருக்கிறார்.

தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய தடம் பதித்திருக்கிறார்.

யதார்த்தமான படம்

படம் இப்படி ஆரம்பிக்கிறது. நகரத்தில் வேலை செய்யும் கிராமத்து தலித் இளைஞன் கோலப்பனுக்கு ஒரு நாள் நள்ளிரவில் தந்தை இறந்த செய்தி வருகிறது. கிராமத்துக்கு திரும்புகிறான். இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யும்போதுதான், தந்தையின் சடலத்தை ஊர் பொதுப் பாதை வழியாக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல ஆதிக்க சாதியினரால் அனுமதி மறுக்கப்படும் நிலை அச்சுறுத்துகிறது.

2, 3 நாட்கள் சடலத்தை வீட்டிலேயே வைத்துக் கொண்டு, உயர் நீதிமன்றம் வரையில் சென்று போராடி நீதிமன்ற உத்தரவும் பெற்று வருகிறான்.

ஆனால், வஞ்சகமாக செயல்படும் அரசு நிர்வாகமும் போலீசும், சடலத்தை பொதுப் பாதை வழியாக எடுத்துச் செல்ல அனுமதிப்பதுபோல் நடித்து அந்த அப்பாவி மக்களை ஏமாற்றி, சவ ஊர்வலம் பொதுப் பாதையை நெருங்கும்போது, என்ன நடக்கிறது? ஆதிக்க சாதியினரும், காவல் துறையினரும் என்ன செய்தார்கள்? கோலப்பனின் தந்தையின் சவ ஊர்வலம் முழுமை பெற்றதா? சவ ஊர்வலத்தின் தாக்கமென்ன என்பதை எந்தவொரு வணிக சமரமும் இல்லாமல் இயக்குனர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படமாக்கி இருக்கிறார்.

2016ம் ஆண்டு நாகப்பட்டிணத்தில் நடைப்பெற்ற உண்மை சம்பவமொன்றை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

வாழ்வில் மட்டுமல்ல சாவிலும் சமரசத்தைக் காண முடியவில்லை என்பதை இந்தப் படம் அழுத்தந் திருத்தமாக, யதார்த்த மொழியில், யதார்த்தமான காட்சிகள் மூலம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் வகையில் சித்தரிக்கிறது.

போராட்டம் தோற்றுப் போவதாக படம் முடிந்தாலும், தோல்வி நிரந்தரம் இல்லை என்பதையும், போராட்டம் தொடரும் என்பதையும் எதிரொலிக்கும் வகையில் முற்போக்கு கவிஞர் இன்குலாப் எழுதி ஒரு காலத்தில் போராட்டக் களங்களிலும், மேடைகளிலும் முற்போக்கு கலைஞர் கே.ஏ.குணசேகரன் முழங்கிய “மனுசங்கடா “ பாடல் இறுதியில் போர் முழக்கமாக ஒலிக்கிறது. படத்தின் தலைப்பும் இதுவே. .இந்தப் படத்துக்காக கவிஞர் இன்குலாபே சற்றே திருத்தம் செய்து எழுதிய பாடலை கே.ஏ.குணசேகரனின் புதல்வரும், புதல்வியும் கம்பீரமான குரலில் பாடியிருக்கிறார்கள். இசை அரவிந்த் – சங்கர். ஒளிப்பதிவு பி.எஸ். தரன்.

துடிப்பான நடிகர்கள்
நவீன நாடகங்களில் நம்பிக்கை நட்சத்திரமாக பிரகாசிக்க தொடங்கி இருக்கும் ராஜீவ் ஆனந்த் கோலப்பனாக நடித்திருக்கிறார். கணவனைப் பறிகொடுத்து ஒப்பாரி வைத்து அழும் கோலப்பனின் அம்மாவாக நடிக்கும் மணிமேகலை, கோலப்பனின் கிராமத்து தோழர்களாக பாத்திரம் ஏற்றுள்ள விதுர் ராஜன் உள்ளிட்ட நண்பர்கள் , மனிதநேயம் மிக்க உயர் நீதிமன்ற வழக்கறிஞராக நடிக்கும் கருணா பிரசாத் என ஒவ்வொருவரும் பாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வு.

அம்ஷன் குமார்

இயக்குநர், எழுத்தாளர், சமூகப் போராளி எனப் பன்முக ஆற்றல் படைத்த கலைஞர் அம்ஷன் குமார். அலையாத்திக் காடுகள், பாதல் சர்க்காரின் தர்டு தியேட்டர். நோபல் பரிசாளர் சர் சிவி ராமன், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், மகாகவி பாரதியார் உள்பட 25-க்கும் மேற்பட்ட ஆவணப் படங்களை எடுத்தவர். தவில் கலைஞரான யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி குறித்த இவரது ஆவணப் படம் தேசிய விருது வென்றது.

எழுத்தாளர் கி.ராஜநாராயணின் கிடை நாவலை ஒருத்தி என்ற பெயரில் படமாக்கியவர். அதுதான் இவரது முதல் கதைப் படம்.. இத்தகைய புகழ்மிகு சாதனையாளர் அம்ஷன் குமார் இயக்கி வெளிவரும் இரண்டாவது feature film “மனுசங்கடா.”

- நடராஜன் ரெங்கராஜ்.

Related Articles