வெளியிடப்பட்ட நேரம்: 27-Jan-2017 , 06:38 PM

கடைசி தொடர்பு: 27-Jan-2017 , 06:38 PM

பால் அரசியல் - புத்தக விமர்சனம்

milk politics book review

பால் என்பது இன்று உணவுப் பொருள் மட்டுமே அல்ல. அது பங்குச் சந்தை குறியீட்டு எண்களுள் ஒன்று. பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரைக்கும் பால் நுகர்வைத் திணித்தால் தான் அந்தக் குறியீட்டு எண் உயரும். அதாவது பெண்மாடு பால் கறந்தால் தான் பங்குச்சந்தை ஏற்றத்தின் குறியீடான காளை மாடு சீறும். அப்படி அதை சீறச் செய்வதற்கு நாட்டின் உணவு பண்பாட்டின் மீது கையை வைக்க வேண்டும். இங்கு அது திறம்பட செய்து முடிக்கப்பட்டிருக்கிறது.


பால் என்பது முதன்மையான வணிகப் பொருளாக உருவெடுத்தப் பின்னர், நம் அன்றாட வாழ்வில் அது மிகை நுகர்வுப் பொருளாக மாற்றப்படுகிறது. இறுதியில் நம் வாழ்வின் மீது ‘பால் அதிகாரம்’ ஆக உருவெடுக்கிறது. நாம் அனைவரும் அதன் அடிமைகளாக மாற்றப்படுகிறோம். இது எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதே நாம் அறிய வேண்டிய அரசியல். தாய்ப்பாலில் இருந்தே பால் வணிக அரசியல் தொடங்கி விடுகிறது.

தாய்மார்கள் இயன்ற வரை தம் குழந்தைகளுக்குத் தொடர்ந்து தாய் பாலூட்ட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதன் வழி ஒரு புரட்சியை தூண்ட முடியும்.


தாய் பாலூட்டல் என்பது ஒரு இயற்கை நிகழ்வு. அதில் என்ன புரட்சி இருக்கிறது என்று கேட்கலாம். இதற்கான பதில் நம்மை விட பன்னாட்டு நிறுவனங்களுக்கு நன்கு தெரியும். அத்தகைய புரட்சி ஏற்பட்டு விடக்கூடாது என்று தான் அவை தவிக்கின்றன. ஒரு தாய் தன் குழந்தைக்கு முறையாக தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கினால் பன்னாட்டு பெரு நிறுவனங்கள் பதற்றமடைய தொடங்குகின்றன. பங்குச் சந்தையின் வீழ்ச்சியின் அடையாளமான கரடி உருவம் எதிரில் வந்து அவற்றை அச்சுறுத்துகிறது. தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை நிறுத்தியாக வேண்டுமென்று அவை துடிக்கின்றன. இதற்காக பற்பல “வெள்ளைப் பொய்களை’ கட்டவிழ்த்து விட்டு வெற்றியை ஈட்டுகின்றன. இதனால் எவ்வளவு டாலர்கள் செலவழித்தாயினும் இவ்வெற்றி பால்மாவு விற்பனைக்கு மட்டும் உதவுவதில்லை. இதர பால்படுப் பொருட்களான பனிக்கூழ், பாலாடைக்கட்டி, சாக்லேட் என நீட்சியடைந்துக் கொண்டே செல்கின்றன.


இதற்காகவே பால் உற்பத்தி செயற்கையாக பெருக்கப்படுகிறது. அதற்கிசைவாக பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் செயற்கை ஹார்மோன் உருவாக்கப்படுகிறது. அமேசான் போன்ற மழைக்காடுகள் அழிக்கப்பட்டு மாடுகளுக்கான மேய்ச்சல் நிலம் உருவாக்கப்படுகிறது. இப்படி இயற்கையை அழிப்பதால் உருவாகும் சூழல் சீர்கேடுகள் நிகழ்கால தலைமுறையை மட்டுமின்றி எதிர்கால தலைமுறையினர் மீதும் தான் வீழ்கிறது. இச்சீர்கேடுகளே பால் என்பதை இன்று மாசு நிறைந்த உணவுப் பொருளாக மாற்றிவிட்டன. இந்நூல் பால் உற்பத்திக்குப் பின்னுள்ள அரசியலைப் பற்றி மட்டுமே பேசுகிறது. பாலின் நிறம் வேண்டுமானால் வெண்மையாக இருக்கலாம். ஆனால் அதன் பின்னணி கறைப் படிந்தது என்பதை விளக்கி மேலும் பல அரசியலை அம்பலமாக்கும் சிறுமுயற்சியே இந்நூல்.


எதிர் வெளியீடு

பால் அரசியல்

தாய்ப்பால் - புட்டிப்பால் – மாட்டுப்பால்

பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள் - விலை ரூ : 60


புத்தகம் வேண்டுவோர் எதிர் வெளியீடு பதிப்பகத்தையோ அல்லது 98409 67484 என்ற எண்ணிற்கோ அழைக்கலாம்.

Related Articles