வெளியிடப்பட்ட நேரம்: 05-Aug-2020 , 07:28 AM

கடைசி தொடர்பு: 05-Aug-2020 , 07:28 AM

மோடியும் ராமர் கோயில் பூமிபூஜையும்

ramar1

ராமர் கோயில் பணிகளில் மோடி தவறாமல் பங்கேற்பார். பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி 1990-ல் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு நடத்திய ரத யாத்திரையில் முக்கிய பங்கு வகித்தார்.

1991-ல் பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் ஒற்றுமை யாத்திரையின் போது அயோத்திக்கு உடன் சென்றார். அங்கு நிருபர்களிடம் மோடியை காட்டி இவர் தான் குஜராத் பா.ஜ. தலைவர் என ஜோஷி அறிமுகம் செய்து வைத்தார்.
மோடியிடம் நிருபர்கள் அடுத்த முறை அயோத்திக்கு எப்போது வருவீர்கள் எனக் கேட்டனர். அதற்கு அவர் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருவேன் என்றார். இன்று அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

ராமர் கோவில்:

நமது நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கும் கோவிலை பார்த்து வியந்திருக்கிறோம். கோவில்களையும் சிற்பங்களையும் கட்டிடக்கலை சிறப்பையும் பார்க்கவே சுற்றுலா பயணிகள் பலரும் வருகிறார்கள். இப்போது கடப்படப்போகும் ராமர் கோவில் இனி காலம் காலமாக பேசப்படப்போகிறது. சந்திரகாந்த் பாய் சோம்புரா என்பவரின் கை வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ராமர் கோவில் நாகரா பாணி கட்டிடக்கலையில் அம்சத்தில் கட்டப்பட உள்ளது.ராமர் கோயில் பூமி பூஜை விழா இன்று நடைபெறுவதை முன்னிட்டு, சரயு நதிக் கரையில் அமைந்துள்ள அயோத்தி நகரம் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. ராமரின் பிறந்த நாளான ராம நவமி அன்று ஏராளமான பக்தர்கள் அயோத்தியின் சரயு நதியில் இறங்கி நீராடுவது வழக்கம். இப்போது கொரோனா காலம் என்பதால் மக்கள் வரத்து இன்றி சரயு நதிக்கரை அமைதியாக இருக்கிறது.

இந்த புனித நதிக்கரையில் ராமர் பிறந்த இடமான ராமஜென்ம பூமியில் கட்டப்படப்போகும் கோவில் வரலாற்று சிறப்பு மிக்கதாக அமையப்போகிறது. இன்று பூமி பூஜை நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இதற்காக பல லட்சக்கணக்கான செங்கற்கள் பல ஆண்டு காலமாக தவமிருந்து . கற்தூண்களும் காலம் காலமாக காத்துக்கொண்டிருக்கின்றன.


அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலின் வடிவமைப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கோபுரங்கள், தூண்கள் மற்றும் குவிமாடங்களுடன் கூடிய மூன்று மாடி அமைப்பு கொண்டதாக பிரம்மாண்மான அமைப்பில் கோயில் உள்ளது. நாகரா பாணி கட்டிடக்கலையில் இந்த கோயில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ராமர் கோவில் பிரம்மாண்டம் மட்டுமல்லாது தெய்வீகத்தையும், ஆன்மீக சக்தியையும் பரப்பும் இடமாக அயோத்தி ராம ஜென்ம பூமி அமையும் என்று இந்த கோவில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர். இந்த கோயில் 161 அடி உயரத்தில் கட்டப்படும் என்று, முதலில் திட்டமிடப்பட்டதை விட இரு மடங்கு பெரியதாக இருக்கும் என்று அதன் கட்டிடக் கலைஞர் தெரிவித்துள்ளார்.

ராமஜென்ம பூமியில் கோவில் கட்ட வேண்டும் என்று பேச்சு எழுந்த போது 1990களிலேயே இந்த கோவிலுக்கான மாதிரியை வடிவமைக்க ஆரம்பித்து விட்டாராம் தலைமை வடிவமைப்பாளர் சந்திரகாந்த் சோம்புரா. இப்போது இவருக்கு 77 வயதாகிறது. இவர் பிரபல கட்டிட கலைஞர் பிரபாகர் சோம்புராவின் பேரன். சந்திரகாந்த் சோம்புராவின் அப்பா பிரபாஷங்கர் சோம்புரா சோம்நாத் கோயிலின் புனரமைப்பை வடிவமைத்து மேற்பார்வையிட்டவர்.


முதலில் இரண்டு கோபுரங்கள் மட்டுமே அமைக்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 5 கோபுரங்களுடன் பிரம்மாண்டமாக அமையவிருக்கிறது ராமர் கோவில். அதிக பக்தர்களுக்கு இடமளிக்க இரண்டுக்கு பதிலாக ஐந்து குவிமாடங்களைக் கொண்டதாக வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. கருவறைக்கு மேல் ஒரு ஷிகாரா அல்லது கோபுரம் கட்டப்படும்.


இந்திய கட்டிடக்கலையின் சிறந்த உதாரணமாக ராமர் கோவில் அமையவிருப்பதாக ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியுள்ளனர். இந்த கோவில் 2025ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ராமர் கோவில் கட்டுமானப்பணிக்காக நாடு முழுவதிலும் இருந்தும் பூஜை செய்து செங்கற்கள் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இருந்து ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், வைகை உள்ளிட்ட புனித ஆறுகளில் இருந்து எடுத்து பூஜை செய்யப்பட்ட மணல், புனித நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தீர்த்தங்களும் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இன்று நடைபெறும் பூமி பூஜை விழாவும் கோவில் கட்டப்பட்ட பின்னர் நடைபெற இருக்கும் கும்பாபிஷேக விழாவில் இந்திய வரலாற்றில் இடம்பெறும் என்பது நிச்சயம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை பணிகள் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளன. இன்று பிரதமர் மோடி ராமர்கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுகிறார். கொரோனா பரவல் அச்சம் காரணமாக குறைவான நபர்களுக்கு மட்டுமே விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles