வெளியிடப்பட்ட நேரம்: 07-Aug-2020 , 08:58 AM

கடைசி தொடர்பு: 07-Aug-2020 , 10:20 AM

தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியாக முர்மு நியமனம்

murmu

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த கிரிஷ் சந்திர முர்மு, தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியாக நியமித்து மத்திய அரசு நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது.

தற்போது தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக இருக்கும் ராஜீவ் மெஹ்ரிஷியின் பதவிக்காலம் இன்று முடிகிறது. இதையடுத்து, அந்தப் பதவிக்கு முர்மு நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி பதவி என்பது அரசியலமைப்புச் சட்ட பதவியாகும். அதாவது, மத்திய அரசு, மாநில அரசுகளின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்யும் பொறுப்பு உள்ள பதவியாகும். தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் அனைத்தும் மாநில சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

இதுகுறித்து பொருளதாார விவகாரத்துறை நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில் “தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியாக கிரிஷ் சந்திர முர்முவை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். அவர் அந்த பதவி ஏற்கும் நாளிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி பதவியில் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவடையும் வரை முர்மு பதவியில் இருப்பார். இதில் எது முதலில் வருகிறதோ அதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் . தற்போது முர்முவுக்கு 61 வயதாகிறது.

முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டபின், முதல் துணை நிலை ஆளுநராக முர்மு நியமிக்கப்பட்டார். துணை நிலை ஆளுநராக பதவி ஏற்று ஓர் ஆண்டு நிறைவடைவதற்குள், நேற்று முர்மு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அந்த ராஜினாமாவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1985-ம் ஆண்டு குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஜி.சி.முர்மு பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதும், அமித் ஷா அமைச்சராக இருந்தபோதும் அவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றியவர்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் மத்திய பணிக்கு அழைக்கப்பட்ட முர்மு, மத்திய அரசின் செலவினத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அதன்பின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரி்க்கப்பட்டபின் அங்கு முதல் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்

மத்திய அரசின் தலைமை தணிக்கைக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த ராஜீவ் மெஹரிஷியின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அந்த பதவியில் முர்மு நியமிக்கப்பட இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Related Articles