வெளியிடப்பட்ட நேரம்: 29-Mar-2017 , 06:58 AM

கடைசி தொடர்பு: 27-Apr-2017 , 10:11 AM

முதுகெலும்பி - புத்தக விமர்சனம்

muthukelumbi

 இது நாவலா, சிறுகதைத் தொகுப்பா என்றால் இரண்டுமே இல்லை. ஒரு கிராமத்தின் வாழ்வியலை பதினைந்து அத்தியாங்கள் கொண்ட எழுத்தின் மூலம் நமக்குக் கடத்தியிருக்கிறார், எழுத்தாளர் ஜெ.சரவணா. முழுக்க முழுக்க கிராமத்து சொலவடையின் மூலம் கதை சொல்லியிருப்பது நாம் அந்த கிராமத்துக்குள்ளேயே சென்று வந்த உணர்வு.


 நூறு, நூற்றைம்பது குடும்பங்கள் கொண்ட ஒரு கிராமம் அது. அங்கு வாழும் முதுகெலும்பி என்ற முப்பது வயதுக்குட்பட்ட இளைஞரின் பார்வையில் விரிகிறது கதை. கதையென்றால் அது முதுகெலும்பியின் கதை மட்டுமல்ல. அந்த ஊரில் வாழும் மனிதர்கள் குறிப்பாக – பத்தாண்டுகள் வெளிநாட்டில் வசித்து அதன்பிறகு மனைவி, மக்களைப்  பறிகொடுத்து, ஊரிலேயே டீக்கடை நடத்திவரும் சின்னச்சாமி அண்ணன், முத்தாயி அம்மச்சி, இருவருக்குள் இருக்கும் இத்தலைமுறைக்குத் தெரியாத ரத்த உறவு, முத்தாயி அம்மச்சியி கணவரின் லீலைகள், முதுகெலும்பி காதலிக்கும் நீர்க்குழலி, ஓடுநண்டு சின்னான், நாற்பத்தைந்து வயதாகியும் திருமணமாகாத மாரி சித்தப்பா, ஓடுநண்டு சின்னானின் காதலி நீலாத்தா, கிராமத்தில் கம்யூனிசம் பேசும் ஒரே நபரான மயிலன் என பலப்பல மனிதர்களை நேரில் கண்டது போன்ற உணர்வு.


 ஓடுநண்டு சின்னான். சிறுவன். எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பவன். எதேச்சையாக பள்ளியில் நடக்கும் ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வர, அதன்பிறகு பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறுகிறான். மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தான் அணிந்துகொள்வதற்கு ஷூ இல்லாமல் தவிக்கும்போது, ஊர் மக்கள் ஆளாளுக்கு பத்து, இருபது என்று பணம் கொடுத்து அவனை ஊக்கப்படுத்துதலும், அதன்பிறகு அவன் மேலும் மேலும் ஓடி பரிசுகளை வென்று அதன்மூலம் கிடைத்த இடஒதுக்கீட்டின்மூலம் கல்லூரியில் சேர்வதும் நெகிழ வைக்கின்றன. பின்னர் வரும் அத்தியாங்களில், நகரப் பகுதியிலிருந்து வந்திருக்கும் மாணவர்களின் செயல்பாடுகளை ‘அழுக்கு’ என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவதும் நடக்கிறது.


 மயிலன். ஊரில் கம்யூனிசம் பேசும் ஒரே நபர். நெல்லுக்கான விதையை தாங்களே நிர்ணயிக்க வேண்டும் என்று ஊர் மக்களிடம் பேசி, தோற்று, பின் முதுகெலும்பியும் சேர்ந்து மில்லுக்காரரிடம் வாதாடி ஜெயிக்கிறார். அதன்பிறகு, ஊர் மக்களே ‘இத்தனை நாட்களாக ஏமாந்திருக்கிறோம்’ என்று உணர்கிறார்கள்.


முதுகெலும்பி காதலிக்கும் நீர்க்குழலி வேறு ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு, ஆறு மாதங்களிலேயே பிரிந்து சொந்த ஊருக்கே வர, முதுகெலும்பிக்கு தீராக்காதல். நீர்க்குழலியைத் தானே திருமணம் செய்துகொள்ள தீர்மானித்து, எதேச்சையாக ஒரு பிரச்சனை வரும்போது கைகொடுக்கிறார். அதாவது, தை பிறப்பதற்கு முன், முதல் கதிரை அறுப்பதற்கு யாராவது ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வில் இவளைத் தேர்ந்தெடுத்துவிட, அங்கிருக்கும் யாரோ ஒருவர் வாழாவெட்டியாக வந்திருக்கும் இவள் முதல் கதிரை அறுப்பதா என்று கேள்வி வைக்க, அந்த இடத்தில் முதுகெலும்பி தான் திருமணம் செய்துகொள்வதாகக் கூறுகிறார்.


நீலாத்தாள் வளர்க்கும் ஆடு நல்லான். ஒவ்வொரு முறையும், தான் வளர்க்கும் ஆட்டுக்குட்டி மீது பரிவும் பாசமும் வைத்திருக்க, ஏதேனும் ஒரு வேண்டுதலில் அந்த ஆடு கடவுளுக்கு பலியாவதும், அதன்பிறகான அவளுடைய அழுகையும் கண்ணில் நீர் வரச் செய்கின்றன. குறிப்பாக, அவள் கேட்கும் கேள்வி. “நாமள படைச்ச... பாத்துக்கிற சாமிக்கி நாம ஆடு குடுக்குறோம். கோழி குடுக்குறோம். அப்பா ஆட்டையும் கோழியையும் அவர்தான படைச்சாரு. அவரே படைச்சி அவரே திம்பாரா? அப்புறம் ஏண்ணே உசுரா போனது கறியா வருது? இந்த சினிமாவுல சடக்குன்னு காணாம போயிரும்ல, அந்த மாதிரி சாமி வந்து எடுத்திக்கிட்டு போக மாட்டாரா?”


கிராமியப் பாடல்கள். சொந்த மெட்டில், எழுதாமல் அப்போது வரும் பாடல். ஒருவரை இடித்துப் பேசுவதோ, பழித்துப் பேசுவதோ, குறிப்பால் உணர்த்துவதோ எதுவாகினும் பாடல்கள் மூலம் உணர்த்தும் பாங்கு. இதிலும் இருக்கிறது.


மாடு ஓட்டுதல், ஏர் உழவு, புளியமரத்தடியில் ஊர்ப்பேச்சு, கள்ளு குடித்தல் உள்ளிட்ட ஒரு கிராமத்துக்கே உரித்தான பல விஷயங்களை சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் சரவணா. அனைத்து விஷயங்களையும் கிராமத்துப் பேச்சு வழக்கில் முதுகெலும்பி எனும் இளைஞர் சொல்வதுபோல் இருந்தாலும், எந்த இடத்திலும் புரியவில்லை என்ற பிரச்சனையே இல்லை. மேலும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் மண்மணக்கும் கவிதை ஒன்றையும் கொடுத்திருக்கிறார். தைப் பொங்கல் கொண்டாடும் விதம், திருமண நிகழ்வு போன்றவை ஒரு கிராமத்தில் எப்படி இருக்கும் என்பதை இந்த நூலில் உணரலாம். இவற்றையெல்லாம் பதிவு செய்யவேண்டும் என்ற தன்முனைப்புக்காக நூலாசிரியரை நிச்சயம் பாராட்டவேண்டும்.


-கார்த்திக் சரவணன்

Related Articles