வெளியிடப்பட்ட நேரம்: 28-May-2018 , 11:32 AM

கடைசி தொடர்பு: 28-May-2018 , 11:45 AM

நடுநாட்டில் வன்னியர்கள்

images (4)யாவருக்குமாக என கண்மணி குணசேகரன் ஒரு தன்னிலை விளக்கத்தை முகநூலில் தந்துள்ளார். யார்? யார்? அவரின் குருவுக்கான இரங்கல் பதிவிற்கு எதிர்வினையாற்றினார்கள் எனத் தெரியவில்லை. இருப்பின் கலக்கல் ட்ரீம்ஸ் இணைய பக்கத்தில் "வெட்டியது போதும் உறங்குங்கள் குரு" என ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் அவரைப் பற்றியும் அவர் சாதிப் பற்று குறித்தும் எழுதியிருந்தேன். அதற்கான விளக்கமாகவே எடுத்துக்கொள்கிறேன்.

மறுநாளே புறந்தள்ளி விடக்கூடிய சாவு வீட்டின் "வாழ்ந்தான் பாட்டுக்கு" ஒப்பான இரங்கற் பாவை பார்த்து அதிர்ச்சியடைந்தேனென்பது என்ன மனநிலை? என எழுதியிருக்கிறார்.  நீங்கள் ஒரு எழுத்தாளன். நீங்கள் ஒரு செய்தியை சொல்கிறீர்கள். அதுவும் சமூக வலைதளத்தில் குறிப்பாக எந்த நேரத்தில் எங்கு சேரிகள் எரியுமோ? எத்தனை தலித்துகள் வெட்டப்படுவார்களோ? என்ற அச்சத்தில் உள்ள மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளீர். அதை எப்படி பார்த்ததும் கடக்க முடியும்.

நீ விதைத்த வீரம் விதைக்கப்பட்டுள்ளது என்றே இரங்கலை ஆரம்பிக்கிறார் கண்மணி.

அரசு பேருந்துகளை அடித்து நொறுக்குவது, தலித்துகள் சார்ந்திருக்கிற வி.சி.கட்சியின் கொடியை கம்பத்திலிருந்து இறக்கி கிழிப்பது என தன் மஞ்சள் படைக்கு இந்த வீரத்தைத்தான் விதைத்துச் சென்றாரா? அரசு போக்குவரத்துக் கழக பனிமணையில் பணிபுரியும் நீங்களே அரசு பேருந்துகளை உடைப்பதை ஆதரிப்பது போல் ஆகாதா?

நீங்கள் உங்கள் சாதியை, தலைவரை தாராளமாக பேசுங்கள் எழுதுங்கள். ஆனால் நடுநாட்டு இலக்கியத்துக்கே தான்தான் இறைத்தூதன் என்ற பொய்யான கட்டமைப்பை வெளியில் பேசாதீர்கள். நடுநாட்டில் வன்னியர்கள் மட்டுமில்லை. "நடுநாட்டு வன்னிய இலக்கியம்" என அடுத்தடுத்த பேட்டிகளில் குறிப்பிடுங்கள். ஏனெனில் தங்களின் பதிவை பார்க்கிறவர்கள் நீங்கள் எழுத்தாளர் என்று அறியாதவர்கள் இவர் வன்னியர் சங்க உறுப்பினரா? பா.ம.க உறுப்பினரா? எனவும் கேட்கின்றனர்.

"கடங்குடியாய் விவசாயத்தில் உழன்று" என குறிப்பிடுகிறீர்கள். மனசாட்சியோடும் நெஞ்சுரத்தோடும் சொல்லுங்கள் எத்தனை வன்னியர்கள் நேரடியாக ஏர் கலப்பை பிடித்தார்கள்?. நாற்று நட்டார்கள்? களை பறித்தார்கள்? ஆண்டைகளாக அமர்ந்துக்கொண்டு தனது நிலத்தில் தலித்துகளை வைத்து விவசாயம் செய்து ஏகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். மிகச் சொற்பமான வன்னியர்கள் நீங்கள் சொல்வதுபோல் "உழன்று" கொண்டிருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கல்வி, வேலை வாய்ப்பில் பின்னணியான வன்னியர்கள் என்பதெல்லாம் அடிப்படை ஆதாரமற்ற கருத்து. மேலும் பல வன்னிய இளைஞர்களை படிக்கவிடாமல் சாதி வெறியோடும், அடி உதை, கட்ட பஞ்சாயத்து எனவும் சுற்ற வைத்ததில் பெரும்பங்கு குருவுக்கு உண்டு.

உலக மக்கள் ஒற்றுமைக்காகவும், முதலாளித்துவ சிந்தனைகளை தகர்த்தெரியும் கம்யூனிச படைப்புகளை நீங்கள் எழுதப் போவதாக சொல்கிற குறிப்பிட்ட ஒரு சாதி படைப்போடு ஒப்பிடுவது அபத்தமாக இருக்கிறது. மேலும் தலித் இலக்கியம் தலித்துகள் ஆண்ட பரம்பரை பெருமை பேசவோ ஆளப்போறோம் பெருமை பேசவோ அல்ல. அது ஒடுக்கப்பட்டவர்களின் குரல். ஒடுக்கப்பட்டதை உலகுக்கு சொல்லும் பார்வை.

அறிவு நிலையில் எழுதாமல் உணர்வு நிலையில் எழுதப்படும் எதுவுமே அபத்தவாத சிந்தனைதான்.
.#சேங்கணத்தான்

Related Articles