வெளியிடப்பட்ட நேரம்: 06-Jun-2019 , 05:41 AM

கடைசி தொடர்பு: 06-Jun-2019 , 05:42 AM

நீட் தேர்வு முடிவு - தொடரும் தற்கொலைகள்

neet

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில், தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ, கடந்தமாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்றார். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அவர் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தது தெரியவந்தது. இதன் விரக்தி அடைந்த ரிதுஸ்ரீ, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்  600-க்கு 490 மதிப்பெண்கள் பெற்ற ரிதுஸ்ரீ, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் தற்கொலை செய்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசன் நகரை சேர்ந்தவர் நம்பிராஜன். இவர் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் சைக்கிள் ஸ்டாண்ட்டை ஏலம் எடுத்து நடத்தி வருகிறார்.  மேலும் சொந்த படகுகளை வாடகைக்கு விட்டு வருகிறார். இவரது மகள் வைஸ்யா (17). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார். இதையடுத்து  மருத்துவராகும் கனவில் நீட் தேர்வை எழுதினார்.

நேற்று நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் 720 மதிப்பெண்ணுக்கு 230 மதிப்பெண் பெற்று தோல்வியடைந்தார். இதனால் மனமுடைந்த வைஸ்யா, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவர் அலறும் சத்தம் கேட்டு, வீட்டில் உள்ளவர்கள் ஓடி சென்று தீயை அணைத்தனர். அவரை ஆபத்தான நிலையில் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்தார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர் கனவு தகர்ந்த வேதனையில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டும் ஹைதராபாத் கொச்சிகோடா பகுதியை சேர்ந்த ஸ்ரீசைதான்யா ஜூனியர் கல்லூரியில் படித்து வந்த ஜாஸ்லின்(வயது 18) நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் வர்த்தக கட்டிடம் ஒன்றில் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். தமிழகத்தில் செஞ்சியை சேர்ந்த பிரதீபா என்ற பெண்ணும் தற்கொலை செய்துக் கொண்டது நினைவிருக்கலாம்.

2017ம் ஆண்டு அரியலூரை சேர்ந்த அனிதா உயிரிழந்து தமிழகம் முழுவதும் சோகமானது நினைவு இருக்கலாம்.

Related Articles