வெளியிடப்பட்ட நேரம்: 01-Jun-2019 , 07:02 AM

கடைசி தொடர்பு: 01-Jun-2019 , 07:02 AM

நீட் தேர்வும் அதிமுக அரசின் பொய்யும்

neet


நீட் தேர்வு (National Eligiboility Cum Entrance Test - NEET) என்பது ஹைட்ரோகார்பன், ஜல்லிக்கட்டு போலவே மிக முக்கியமான பிரச்சனை. இந்த பிரச்சனையில் நமக்கு போதுமான புரிதல் இல்லாமல் இருப்பதால் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றியோ, நாளைய மாணவ/மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலைகளை பற்றிய புரிதல் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறோம்.

சட்டம் என்ன தான் சொல்கிறது?
1952ல் இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட பொழுது மாநில அரசுக்கான அதிகாரங்களும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அதில் பட்டியல் எண் 11ல் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விகள், பல்கல்லைக் கழகங்களின் உரிமைகள் பற்றி தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. 1976ம் ஆண்டு இந்திரகாந்தி அம்மையார் தான் பிரதமர். அதே ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி 42வது சட்ட திருத்ததின் மூலம் சில முடிவுகளை எடுக்கிறார். இந்த சட்ட திருத்தங்களை அதன் பிறகு வந்த ஜனதா அரசு அரையும்குறையுமாக மாற்றி அமைக்கிறது. ஜனதா அரசு 42வது சட்டதிருத்தங்களை பெரும்பாலனவற்றை மாற்றி அமைக்கிறது. இந்த விசயத்தில் சிக்கி சின்னாபின்னமானது தான் மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்ட உயர்கல்வி படிப்புகள் மீதான உரிமை.

2013ம் ஆண்டு மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வரப் போவதாக அறிவிக்கிறது. அதற்கு சொல்லப்பட்ட காரணம் படுமொக்கைதனமானது. மருத்துவ கல்லூரிகளின் தரம் கட்டுக்குள் வைத்திருக்கவும், அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ கல்வி அளித்திரும் வகையில் தேர்வு இருக்குமெனவும் சொல்லப்பட்டது. உண்மையை சொல்வதாக இருந்தால் தமிழகத்தின் மருத்துவ அறிவை கண்டு பொறாமைப்பட்ட மத்திய அரசு அதை வடகத்திய மாணவர்களுக்கு கொடுக்கவே நீட் தேர்வை அறிமுகப்படுத்துகிறது. இதன் பின் விளைவுகளை அறிந்த பழமையானதும், மருத்துவ கல்லூரியில் சிறந்ததுமான வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது. சிறுபானமையினர் நடத்தும் கல்லூரி என்பதால் மருத்துவ மாணவர் சேர்க்கை, கல்லூரி தரம், மத்திய அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்ட விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என ஒதுங்கி கொண்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தான் இந்த வழக்கை விசாரித்தது. நீதிபதிகள் அனில் தவே, அல்டாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென் ஆகியோர் தான் அந்த நீதியரசர்கள். இதில் அனில் தவே மட்டும் மருத்துவ கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்றார். மற்ற இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை கொண்டு இருந்ததால் மெஜாரிட்டி அடிப்படையில் நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது என்று கைகழுவி விட்டது.


மூன்று நீதியரசர்களில் அல்டாமஸ் கபீரும், விக்ரம்ஜித்தும் ஓய்வு பெறுகின்றனர். தற்போது மருத்துவ கவுன்சில் நீதிமன்ற உத்தரவை காட்டி மேலும் ஒரு வழக்கு தொடர்கிறது. இதில் நீதியரசர் அனில் தவே தலைமையில் 5நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து அனைத்து மாநிலத்திலும் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டுமெனவும், இந்த கல்வியாண்டே அமல்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிடுகிறது. இந்த சம்பவம் நடந்தது ஏப்ரல் 11ம் நாள் 2016ம் ஆண்டு.


கோட்டை விட்டுவிட்டோமென உணர்ந்த தமிழக அரசு தூக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு ஓராண்டு விலக்கு அளித்தால் போதுமானது என நீதிமன்றத்தில் கெஞ்சியது. நாம் தங்கை அனிதாக்களை பலிகொடுத்தது மட்டும் தான் மிச்சம்.


மக்களின் எதிர்ப்பால் வேறுவழி இல்லாமல் தூங்கும் அதிமுக அரசு சட்டசபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறது. அதை குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைக்கிறது. இந்திய அரசியல் சட்டம் 251ம் அட்டவணையில், மாநில அரசின் உத்தரவுகளும், சட்டங்களும் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டதே என்ற விதியை காட்டி அந்த தீர்மானம் கிடப்பில் போடப்படுகிறது.
வேடிக்கை என்னவென்றால் வடகத்திய மாணவர்களுக்கு உதவும் வகையில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது என்பதை யாரும் ஒப்புக் கொள்வதில்லை. அம்மாநில மக்கள் அவர்கள் மொழியில் தேர்வு எழுதலாம். தமிழகத்திற்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது. அதே சமயம், வட மாநில மக்கள் இங்கு வந்து படிக்கும் பொழுது மிகவும் பாதுகாப்பாய் இருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் வடக்கே சென்று படிக்கும் போது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு வெளியே வராத வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். தமிழக மாணவர்கள் வடக்கில் செய்துக் கொள்ளும் தற்கொலைகளே இதற்கு சாட்சி. (குறிப்பாக மருத்துவம், உயர்கல்வி பயிலும் மாணவர்கள்)


இந்த ஆண்டு சித்தா மற்றும் யுனானி மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். மத்திய அரசின் கெடுபிடிக்கு எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் மாநில உரிமைகளை அடகு வைத்துவிட்டோமென கூவிக் கொண்டு இருக்கிறார்கள்.


இந்த லட்சணத்தில் தான் கடந்த பாராளுமன்ற தேர்தல்களிலும், 22 சட்டமன்ற தேர்தல்களிலும் மைனாரிட்டியான அதிமுக அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்போமென தேர்தல் அறிக்கையாக(ஏப்ரல் 8ம் தேதி) கொடுத்திருந்தது.


 - தனுஷ் M.குமார் B.E., M.B.A., M.S., LLB


Related Articles