வெளியிடப்பட்ட நேரம்: 31-May-2019 , 02:50 PM

கடைசி தொடர்பு: 31-May-2019 , 02:50 PM

NGK - சினிமா விமர்சனம்

ngk1

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெரும்பாய்ச்சலில் வரும் புலின்னு எல்லோரும் எதிர்பார்த்தால் பாய்ச்சலே இல்லையாமாம். என்னடான்னு திரும்பி பார்த்தா புலி பூனையாய் நின்னுச்சாமாம் அந்த கதையாய் தான் இருக்கிறது செல்வராகவன் - சூர்யா - யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் வந்த NGK..

தமிழ்நாட்டோட சமகால அரசியலை பேசப்போறாரு. கடந்தகால அரசியல் வரலாற்றைப் பேசப்போறாரு. இல்லையின்னா இப்படியெல்லாம் பண்ணுனா எதிர்காலத்துல ஆட்சியப் பிடிச்சுடலாம்ன்றதைப் பேசப்போறாருன்னு பார்த்தா எதுவுமே பேசாம அமைதியா இருந்துடுறாரு இயக்குனரு. 

நாட்டு மக்களுக்கு எதாச்சும் நல்லது செய்ய ஆசைப்படுகிற பட்டதாரி நந்த கோபால குமரனை செய்ய விடாம தடுக்குறாங்க. அப்ப எப்புடித்தான் நல்லது செய்யுறதுன்னு கேட்கிறவரை பவர் பாலிடிக்ஸ்குள்ள தள்ளி விடப்படுறாரு. எழுந்தாரா வீழ்ந்தாரா என்பதே கதை.

கமர்சியல் கதையின் நாயகன் தான் காலம்காலமாக கவுரவே மாட்டாரு. எந்தப் பக்கம் விழுந்தாலும் எந்திரிச்சு நிப்பாரே அப்படி ஏதேதோ அடி வாங்கி எழுகிறார். யார் அடிக்கிறாங்கன்னும் தெரியல. இவரை இவரே அடிச்சுக்கிறாரான்னும் புரியல

திரைக்கதை ஆங்காங்கே தொங்கி தொங்கி முடிவு பெறாமலேயே நிற்கிறது. முதல்வரையே அமைதியாக தன் அருகே உட்கார வைக்கிற ஆளுமையான பெண், எம்எல்ஏ வின் அல்லக்கையிடம் காதல் கொள்வது? வாசத்தின் தூரம் வைத்தே கணவன் உடலின் மேல் எப்படி வாசம் வந்தது என்பதை சந்தேகப்படும் மனைவி கணவர் உறுதிபடுத்தியதும் அமைதியாவது எல்லாம் லாஜிக்கில் விழும் அனகோண்டா சைஸ் ஓட்டை..

கட்சிக்குள் புதிதாக வருபவர்களை நடத்தும் விதத்தை பார்த்ததும் யதார்த்தமாக எவ்வளவு விசயத்தை காண்பிக்கிறார். இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ என்று பார்த்தால் அதற்கு பிறகு வேறொரு ஜானரில் கதை பயணப்பட வைத்து விடுகிறது..

கவிஞர் உமாவின் வரிகளில் இணையத்தை கலக்கிய பாடல் இரண்டாம் நடிகைக்கானது. கட்டுன பொண்டாட்டிக்கு டூயட் இல்லை கள்ள காதலிக்கு டூயட். பிண்ணனி இசையில் யுவன் இருக்கிறார். ஆனால் நண்பன் இறந்த பிறகு யோசித்து கதறுகிறார் பார்வையாளர்களுக்குத்தான் பரிதாபமே வராது.ஏற்கனவே வந்திருந்த தமிழ் சினிமாக்களான ராணா நடித்த "நான் ஆணையிட்டால்", பாலாஜி நடித்த LKG, இயக்குனர் பார்க்கவில்லை போலும். NGK-ல் சொல்ல முயற்சிக்கிற எல்லா விசயத்தையுமே இந்த படங்கள் பேசி விட்டன.

சூர்யா படத்துக்குள்ளும் நடிக்கிறார் என்பது படத்திற்கு வெளியேவும் தெரிய வந்துவிடுகிறது. அழகு பதுமையாய் வலம் வந்த சாய் பல்லவியின் உடம்புக்குள் செல்வா புகுந்தே நடிப்பது போல் சகிக்கல. ராகுல் பீரீத்தியே தேவையற்ற திணிப்பே.

மொத்தத்தில் ஆரம்ப பத்தியில் சொன்னது தான் புலி பாயாவில்லை. பூனையாக கூட கத்தவில்லை. நந்ந குமாரா......... நொந்த குமாரா..

- கருத்த கிளி

Related Articles