வெளியிடப்பட்ட நேரம்: 20-Nov-2018 , 05:28 PM

கடைசி தொடர்பு: 20-Nov-2018 , 05:28 PM

தனிக்காட்டு ராஜாக்கள் - 6

மகாராஷ்டிரத்தில் பிறந்த தன்ராஜ் பிள்ளையின் பெற்றோர் தமிழர். அவருடைய தந்தை நாகலிங்கம், தாய் ஆண்டாளம்மாள். பிழைப்புக்காக மகாராஷ்டிரத்தில் நிரந்தரமாக தங்கிவிட்டபடியால் புனே அருகிலுள்ள கிர்கீயில் 1968-ல் பிறந்தார்.
குடும்பத்தில் நான்காவது மகனாக பிறந்தாலும், குழந்தைகள் ஐவருக்கும் அவருடைய தாய் உணவுடன் விளையாட்டையும் ஊட்டி ஊக்குவித்தார்.

இளமை பருவத்தில் வீட்டுக்கு அருகில் இருந்த மைதானத்தில் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் விளையாடி ஹாக்கியை வளர்த்துக் கொண்டார். இவர் முன்னாள் இந்திய வீரர் முகமது ஷாஹித்தின் ஆட்டத்தை விரும்பியதால், அவரைப் போலவே முன்கள ஆட்டக்காரராக விளங்கினார்.

1980-களில் மும்பைக்கு இடம் பெயர்ந்து மஹிந்திரா மற்றும் மஹிந்திரா அணிக்காக விளையாடினார். இவருடைய சகோதரர் ரமேஷ், இந்திய அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவருடைய தீவிர பயிற்சி காரணமாக 1989ல் முதல் சர்வதேச போட்டிகளில் தன்ராஜ் பிள்ளை பங்கேற்றார். 1989 டிசம்பர் முதல் 2004 ஆகஸ்ட் வரை, இந்திய அணி சார்பில் 339 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த சமயத்தில் எண்ணற்ற கோல்களை அடித்துள்ளார்.

தன்ராஜ் எப்பொழுதும் பாதுகாப்பற்ற மனநிலையில் இருப்பார். அதனால் பல நேரங்களில் கோபமாகப் பேசிவிடுவார். அணி தரும் பயணப்படிகள், தேர்வில் உள்ள அரசியல், சம்பள பாக்கி என்று பல விஷயங்களுக்காக ஹாக்கி சம்மேளனத்தை எதிர்த்து வெளிப்படையாகப் பேசி அதற்காக பழி வாங்கப்பட்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் தன் தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மை இவருக்கு உண்டு. "நான் அழகில்லை, கருப்பானவன். என்னை பெண்களுக்குப் பிடிக்காது என்று எனக்குத் தெரியும். ஆனால், என் தோற்றத்தை விட என் ஆட்டத்தைப் பார்த்து அவர்கள் என்னுடன் பழக வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறி அதை நிகழ்த்தியவர்.

நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் (1992, 1996, 2000, 2004) பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அதேபோல் நான்கு உலகக் கோப்பை போட்டிகள், நான்கு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள், நான்கு ஆசியப் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆசியக் கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவரது தலைமையில் பங்கேற்ற இந்திய அணி கோப்பையை வென்றது. பாங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிக கோல் அடித்த பெருமையை பெற்றுள்ளார். 1994-ல் சிட்னியில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் உலக லெவன் அணியில் இடம்பெற்ற ஒரு இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

பல வெளிநாட்டு கிளப்புகளுக்காக விளையாடியுள்ளார். பிரீமியர் ஹாக்கி லீக் போட்டியில் மராத்தா வாரியர்ஸ் அணிக்காக இரண்டு முறை விளையாடியுள்ளார். ராஜீவ் காந்தி கேல் ரத்னா, பத்மஸ்ரீ உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் இடைக்கால கமிட்டியின் உறுப்பினராக இருந்தவர்.

ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில், 1928ம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டு வரை, தொடர்ந்து 6 முறை தங்கப் பதக்கம் வென்ற பெருமை இந்தியாவுக்கே. அதன்பிறகு, 8 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் 1964, 1980 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. நாளடைவில் தடுமாறி வெற்றியில் இருந்து பின் தங்கியது, இந்திய அணி. அதிலிருந்து மீளும் வாய்ப்பாக 1998 டிசம்பரில் நடைபெற்ற பாங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டி அமைந்தது. அதன் ஹாக்கி இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 5-3 என்ற வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா தங்கம் வென்றது. இதற்குக் காரணம் தன்ராஜ் பிள்ளையின் அபாரமான ஆட்டம். அப்போது 6 போட்டிகளில் 11 கோல்கள் அடித்தார். முதல் 3 போட்டிகளில் 8 கோல்களை அடித்திருந்தார். தனது அபார வேகம், பந்தைக் கடத்தி எடுத்து முன்னேறிச் செல்வது, சுயமாக கோல் அடிப்பது, சிறப்பாகக் கடத்துவது என்று முழுத்திறமையை வெளிப்படுத்தினார். இந்திய ஹாக்கியின் மதிப்பை சர்வதேச அளவில் நிலைநாட்ட, ஹாக்கி மைதானங்களில் சூறாவளியாகச் சுழன்றடித்தார் தன்ராஜ் பிள்ளை.

விளையாட்டின் மீது இருந்த காதலால் திருமணம் கூட செய்துக் கொள்ளாமல் பல பதக்கங்களை வென்ற தன்ராஜ் பிள்ளை, விளையாட்டுத்துறையில் அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக ஹாக்கியில் இருந்து ஓரங்கட்டபட்டார். பிறகு ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

-அம்மு

Related Articles