வெளியிடப்பட்ட நேரம்: 05-Mar-2018 , 12:44 PM

கடைசி தொடர்பு: 05-Mar-2018 , 01:03 PM

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்-புத்தக விமர்சனம்

FB_IMG_1520233706335

அன்பின் பெயரால் ஆக்கிரமிப்புகளை சந்திக்கும் உலகத்திற்கு இந்நூல் சமர்ப்பணம். அதே சமயம், அன்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போகும் உலகத்திற்கும் இந்நூல் சமர்ப்பணம்.

அன்பையும் ஆக்கிரமிப்பையும் குழப்பிக் கொண்டு அன்பை ஆக்கிரமிப்பின் சம்மதத்திலும் சம்மதமின்மையிலும் அன்பை எதிர்பார்க்கும் விசித்திர நடைமுறைக்குள் உழன்று கொண்டிருக்கிறோம். வியப்பு மேலிடும் படி, தனிமையில் இந்த முரண்பாட்டுக்குள் சிக்காத சிலரும் உறவு என்ற ஒன்று ஏற்படும் பொழுது தானும் சிக்கி, உடன் இருபவரும் அதனுள் பயணிக்க வேண்டுமென ஆவல் கொண்டு செய்யும் செயல்கள், எந்த ஒரு குழப்பத்திற்கும் மேலான குழப்பம்.

இரு பக்க நியாயங்களோடு ஒருவரோடு ஒருவர் முரண்படும் பொழுது தான், பிரிவுகள் நேர்கின்றன. இங்கும் கல்யாணி, ரங்காவின் பிரிவு அத்தகைய முரண்பாட்டு மோதலில் தான். ஆனால், இதில் ரங்காவிற்கு இல்லாத முதிர்ச்சி கல்யாணிக்கு இருப்பதில் தான் பிரிவு கூட ஒரு புதிய இணக்கமாய் உருவெடுத்திருக்கிறது. கசப்பான, அப்பட்டமான, லாஜிக்கல் உண்மைகள் அதற்கே உரித்தான கூர்மையுடன் உடையும் குத்தலில் தொடங்கும் மனஸ்தாபங்கள், முதிர்வான புரிதலிலும் தெளிவான எற்றுக்கொள்ளளிலும் நிறைவடைவது, உறவில் யாரோ ஒருவரின் பக்குவத்தால் தான். ஆனால், அதே பக்குவமும் முதிர்ச்சியும் எந்த உறவையும் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியைப் பாதிப்பதோடு, பிடிவாதம் இல்லாத காரணத்தினால் பல நன்மைகளை இழக்கவும் வைக்கும்.

பிடிவாதம் பற்றி என்ன தான் குறை கூறினாலும், பிடிவாதம் இல்லாமல், கை நழுவிப் போகக்கூடிய எதுவும் நம்மோடு நிலைப்பதில்லை. அத்தகைய துறவு நிலையில் தான் கல்யாணி வாழ்கிறாள். ரங்கா தன்னோடு திருமண உறவில் வாழ்ந்தாலும் பேரின்பம், பிரிந்தாலும் ஒன்றும் வருத்தம் இல்லை என்னும் மனோநிலை, கல்யாணிக்கு வேண்டுமானால் நிம்மதியைத் தரலாம். ஆனால், நம்மிடமிருந்து நியாயமான அன்பைத் தேடும் எவரும் நிம்மதி அடைய முடியாது. அன்பை பரிசோதிக்க விஷப் பரிட்சைகளில் இறங்க நேரிடும். பரிட்சையில் தோற்றால் விஷத்தையே அவர் மீது காக்கும் மனோநிலை வளரும். ஆனால், இக்கதியில் ரங்கா தன்னை கல்யாணியின் பக்குவத்திற்கு ஏற்றிக்கொண்டான் என்று தான் சொல்ல வேண்டும். காதல் என்ற ஒன்றைப் பற்றி கல்யாணிக்கும் ரங்காவிற்கும் நடக்கும் விவாதத்தில் அன்பின் அனுமதியோடு உரிமையோடு நடக்கும் சிறு ஆக்கிராமிப்புகள் சரியா? அல்லது அன்பே அர்த்தமற்று போகும் பக்குவம் சரியாய் என்று முடிவு செய்வது கடினம். அன்பின் உணர்ச்சியற்று, ஆவலற்று, அவசியமும் உரிமையும் அற்று வாழும் வெறுமையான வாழ்க்கைக்கு, சிறு ஆக்கிரமிப்புகள் மேல் என்று ரங்கா பக்கம் சாய்ந்தாலும், காதலே ஆக்கிரமிப்பு எதிர்பார்ப்புகளுக்கு தியாகம் செய்வது தான், உயிரை மாய்ப்பது தான், கனவையும் சுயத்தையும் தொலைப்பது தான் என்ற பைத்தியக்கார விளக்கத்திற்கு அடங்க மறுக்கும் கல்யாணியிடம் தான் மனம் போய் நிலைக்கிறது.

கடைசியில் கல்யாணியின் காலை உடைத்து ஒரு நடிகைக்கு நிரந்தரமாய் “ரசிகை” வேடம் போட்டு விட்ட ஜெயகாந்தன், குடும்பத்தால் ஆண் உலகத்தால் சிறகொடிக்கப்பட்ட பல நடிகைகளை நினைவு படுத்துகிறார். “ஒரு நடிகை நாடகம் பார்ப்பதைப்” படிக்கும் எத்தனை நடிகைகள் சக்கர நாற்காலியில் சிறகு முறிய கிடக்கிறார்களோ!

-நாக சியாமளா

Related Articles