வெளியிடப்பட்ட நேரம்: 18-Nov-2017 , 10:30 AM

கடைசி தொடர்பு: 18-Nov-2017 , 10:33 AM

ஒரு நாயகி மிளிர்கிறாள்

images (10)

அவர் முதல் படத்தில் வழக்கமான நடிகையாகத்தான் தெரிந்தார். இரண்டாம் படத்தில் தன்னை இருத்திக்கொள்ள விரும்பும் ஒரு நடிகையின் போராட்டம் தெரிந்தது. கவர்ச்சியில் இறங்கியிருந்தார். ஒன்றிரண்டு படங்கள் நடித்தார். ஒரு தறுதலையுடன் காதல். அந்த காதலனின் இங்கிதமின்மை இணையவாசிகளுக்கும் தெரியும். கோடம்பாக்கம் ராம் தியேட்டரருகே வசிப்பவருக்கும் தெரியும். அப்போதெல்லாம் அவர் பெரியளவு பிரபலமாகாத நடிகை மட்டுமே. அவரின் செய்திகள் கிசுகிசு கிளர்ச்சிகளுக்கு மட்டுமே. எனக்கு மட்டும் ஈ பட நடிப்புக்காக சற்று அதிகமாகவே பிடித்திருந்தது. பின் காணாமல் போனார்.‍‍‍‍‍‍ ‍‍திடுதிப்பென்று பில்லா படத்தில் ஆக்‌ஷன் பெண்ணாக உடம்பை எல்லாம் குறைத்து வந்து நிற்கும்போதுதான் அவர் வழக்கமான நடிகை அல்ல என புரியத் தொடங்கியது. கவர்ச்சியும் நடிப்பும் என கலந்து களமாட தொடங்கினார். பாஸ் என்ற பாஸ்கரன் என்றெல்லாம் மசாலாக்களில் ஒருபுறம் சிக்ஸர்கள் அடித்தாலும் மறுபக்கம் ஸ்ரீராமராஜ்ஜியம் என நடிப்புக்கான களங்களையும் முயன்றிருந்தார். அதற்கு பிறகு நடித்த பல படங்களில் தனி ஒருவன், மாயா, நானும் ரவுடிதான் என வித்தியாசங்கள் பல காட்டி ஆண் மைய படங்கள் வெளிவரும் தமிழ்சினிமாவில் ஒரு பெண்ணாக நின்று, வெற்றியை வென்றெடுத்து வளர்ந்து, தற்போது அறமாகி நிற்கிறார்.

‍‍‍‍‍‍ ‍‍ஈர்ப்பை ஏற்படுத்தும் அறிமுகம் என தொடங்கி, கவர்ச்சி அதன் பின் நடிப்பு, கதாபாத்திரங்கள் என தெளிவாக வளர்ச்சியை அமைத்துக்கொண்ட சிம்ரன், ஜோதிகாவின் வழி இது.

‍‍‍‍‍‍இவற்றையெல்லாம் தாண்டி அவருக்கு நேர்ந்த வாழ்க்கைகள்!முதலில் ஒரு ஈனனுடன் காதல். அதுவும் வெளிப்படுத்தப்பட்டு, முறிந்து, கலக்கிப்போட்டு, பின் ஒருவாறாக தேறி வருகையில் ஒரு தவறான காதல். நிலையற்ற மனம் கொண்ட ஒருவரை நம்பி மனதை பறிகொடுத்து, அதுவும் சிக்கலாகி விழுந்து போனது. தற்போது ஒருவழியாக தனக்கான ஒருவரை தேர்ந்தெடுத்திருக்கிறார். இவையல்லாமல் கிசுகிசுக்கள், நிறைய தோழர்கள் என அவர் பத்திரிகைகளுக்கு ஏற்படுத்தி கொடுத்த வருமானம் அதிகம்.

பொதுவாழ்வில் இருப்போரின் தனிவாழ்க்கைகளை நாம் எப்போதுமே மதிப்பதில்லை. அதிலும் ஒரு பெண்ணின், அதுவும் ஒரு நடிகையின் வாழ்க்கையை மிகவும் ஏளனமாகவே அணுகும் சமூகம்தான் நாம். அவர் நம்மை பொருட்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாம் பேசியவை யாவும் ஏதோ ஒரு இடத்தில் அவர் வாழ்க்கையில் உரசி காயம் கொடுத்திருக்கும். அழுது தவித்திருப்பார். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை தோல்விகளும் அவரை மிக எளிதாக வீழ்த்தக்கூடியவை. நம் சமூகம் அத்தனை விஷம் கொண்டதே.

‍‍‍‍‍‍ ‍‍எல்லாவற்றையும் தாண்டி ஒவ்வொரு வலியையும் தனக்குத்தானே மருந்திட்டு கொண்டு, ஒவ்வொரு துரோகத்தையும் உரமாக்கிக்கொண்டு, ஒவ்வொரு விழுதலிலும் தன்னைத்தானே தூக்கிவிட்டுக் கொண்டு மிகச்சரியான பாதையில் பயணித்து நடிப்பிலும் மெருகேற்றிக் கொண்டு இன்றொரு உதாரணப் பெண்ணாய் வளர்ந்து நிற்கிறார்.‍‍‍‍‍‍ ‍‍நம் வாழ்வுகளை விட பொதுவில் இருக்கும் பெண்களின் தனிப்பட்ட வாழ்வுகள்தான் மிகவும் மெல்லியவை. உடையக்கூடியவை. நம் அந்தரங்கங்கள் சுருங்கியவை. வெளியே தெரியாது. நாமும் சுலபமாக பூட்டி வைத்துக்கொண்டு அடுத்தவரின் அந்தரங்கத்தை பேசி நகையாடிக் கொண்டிருப்போம். அவ்வளவுதான் நாம்.

‍‍‍‍‍‍நம்மையும் தாண்டி ஒருவர் தன்னுடைய தோல்விகளையும் சந்தித்து அவற்றில் இருந்து மீண்டு, சாதிக்கவும் வேண்டுமென்றால் அது எவ்வளவு பெரிய காரியம்? ஒரு பெண்ணுக்கான ஒடுக்குமுறையை தாண்டி, அதுவும் பாலியல் சுரண்டலை அதிகமாக கொண்ட சினிமா உலகில்! அவர் அதை சாதித்திருக்கிறார். அதனால்தான் அவர் மிளிர்கிறார். அதனால்தான் அவர் நாயகி. அதனால்தான் அவர் லேடி சூப்பர்ஸ்டார்.

‍‍‍‍‍‍ ‍‍பிறந்தநாள் வாழ்த்துகள் நயன்!

-Rajasangeethan John

 

Related Articles