வெளியிடப்பட்ட நேரம்: 14-Jun-2019 , 02:25 PM

கடைசி தொடர்பு: 14-Jun-2019 , 02:25 PM

எதிர்ப்புக்கு பணிந்தது ரயில்வே துறை

railway

ரயில்வே கட்டுப்பாட்டு அறை மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் இடையிலான உரையாடலின் போது , தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பேச தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பழைய நடைமுறையே தொடரும் என ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் இடையிலான ஆலோசனையின் போது ஆங்கிலம் அல்லது ஹிந்தியை தான் பயன்படுத்த வேண்டும். அப்போது, பிராந்திய மொழிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிராந்திய மொழியை பயன்படுத்தும் போது, ஒருவர் கூறுவது மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இரு தரப்பிற்கு இடையிலான ஆலோசனையை மேம்படுத்தவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு பிறப்பிக்கப்படும் உத்தரவு, அவர்களுக்கு தெளிவாகவும், முழுமையாகவும், புரியும் வகையில் இருப்பதை கட்டுப்பாட்டு அறை உறுதி செய்ய வேண்டும். இதே போல், ஸ்டேசன் மாஸ்டர்கள் விடுக்கும் கோரிக்கை அல்லது எடுக்கும் நடவடிக்கையை, கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் முழுமையாக புரிந்து கொள்வதை, ஸ்டேசன் மாஸ்டர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவு செயல்படுத்தப்படுவதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றகையிட்டு போராட்டம் நடத்தினர். பொது மேலாளரிடம் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த ரயில்வே அதிகாரிகள், ரயில்வேத்துறையில், பழைய நடைமுறையே தொடரும். புதிய உத்தரவு அனைத்து சப் டிவிஷன்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

ரயில்வேயின் சுற்றறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ரயில் நிலைய ஊழியர்கள் தமிழில் பேசக்கூடாது எனக்கூறி தமிழர்களின் உணர்வுகளை சீண்டி பார்க்கின்றனர். இது போன்ற சில்லரைத்தனமான உத்தரவுகளுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், நாங்கள் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Articles