வெளியிடப்பட்ட நேரம்: 29-May-2019 , 01:04 PM

கடைசி தொடர்பு: 29-May-2019 , 01:04 PM

தொண்டர்களுக்கு இராமதாஸ் கடிதம்

images (5)

பாமக நிறுவனர் இராமதாசு தொண்டர்களுக்கு மடல்:

தமிழ்நாட்டில் பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்து விட்டதாகவும், இனி அக்கட்சியால் எழ முடியாது என்றும் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல். யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற உண்மையை அறியாதது தான் அக்கூட்டம்.

பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட 7 இடங்களில் மொத்தம் 23 லட்சம் வாக்குகளை பா.ம.க பெற்றுள்ளது. இது 5.40 % ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் பா.ம.க. வாங்கிய வாக்குகளை விட இது அதிகம் ஆகும்.

தேர்தலில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. ஒரு தேர்தலில் வெற்றியடைந்த கட்சி, அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததையும், அந்த தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சி அதற்கு அடுத்த தேர்தலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெற்றி பெற்றதையும் பார்த்திருக்கிறோம். தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை கூற முடியும்.

மக்களின் நம்பிக்கையைப் பெற்றால் அடுத்த சில மாதங்களிலேயே தமிழக அரசியல் சூழலை தலைகீழாக மாற்றிவிட முடியும் என்ற சாத்தியமான நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

‘‘விழுவதல்ல தோல்வி. வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி’’ என்பது நம்பிக்கை மொழி. எவ்வளவு வேகமாக விழுந்தாலும், விழுந்த வேகத்தில் எழுந்து ஓடி வெற்றிக்கோட்டைக் கடப்பது பாட்டாளிகளின், குறிப்பாக பாட்டாளி இளைஞர்களின் இரத்தத்தில் ஊறிக் கிடக்கும் வழக்கமாகும். இதற்கு கடந்த காலங்களில் ஏராளமான உதாரணங்களைக் கூற முடியும்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று பாட்டாளி இளைஞர்கள் தீர்மானித்து விட்டால், அடுத்த மாதமே தேர்தல் வந்தாலும் அதில் எதிரணிகளை வீழ்த்தி வெற்றிகளை குவிக்க முடியும். இது சாத்தியமானது தான்.

பாட்டாளி மக்கள் கட்சி சரிவுகளை சந்திக்கவே சந்திக்காத கட்சி அல்ல. கடந்த காலங்களில் இதைவிட மிக மோசமான தோல்விகளை பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்திருக்கிறது. சாதாரண வேகத்தில் பயணித்து சரிவுகளை சந்திக்கும் போது, உடனடியாக அதிக வேகத்தில் மீண்டும் பயணித்து இலக்குகளை எளிதாக கடக்கும் திறன் பா.ம.க.வுக்கு உண்டு. இதற்கு காரணம் பா.ம.க.வை உந்தித் தள்ளும் சக்தியாக இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள்.

கடந்த காலத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அடைந்த தோல்விகளின் ஈரம் காயும் முன்பே நமது வாக்கு வலிமையை நிரூபித்துக் காட்டிய தருணங்கள் ஏராளம். இப்போதும் நமது வலிமையையும், செல்வாக்கையும் நிரூபித்துக் காட்ட இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள், இரு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் என வாய்ப்புகள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன.

பாட்டாளி இளைஞர்களும் போருக்காக காத்திருக்கும் புறநானூற்று வீரர்களைப் போல, மக்கள் சந்திப்பு, கொள்கைப் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் நமது வலிமையை பெருக்கிக் கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். புதிய வரலாறுகளை படைக்க வேண்டும்.

இளைஞர் படையை புதிய எழுச்சியுடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமை ஏற்று நடத்துவார். உங்களை வழி நடத்த நான் எப்போதும் களத்தில் காத்துக் கொண்டிருப்பேன்.

Related Articles