வெளியிடப்பட்ட நேரம்: 25-May-2019 , 05:31 AM

கடைசி தொடர்பு: 25-May-2019 , 05:31 AM

ராக்கெட் தாதா - புத்தக விமர்சனம்

rocket

ராக்கெட் தாதா : ஜி. கார்ல் மார்க்ஸ்

படுகை முதல் பிரார்த்தனை வரை மொத்தம் பதினோரு சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பில் “ராக்கெட் தாதா” என்கிற புத்தகத்தின் தலைப்பைத் தாங்கிய சிறுகதை தான் முதன்மை பெறுகிறது(என்னளவில்). அதற்கு முன்னும் பின்னுமான சிறுகதைகளை சின்னச் சிணுங்கலோடு சலனங்களோடு கடந்து விட முடிந்தது.

படிக்கும் எல்லாக் கதைகளுமே விமர்சனம் எழுதத் தூண்டுவதில்லை. சில கதைகள் தான் மனதுக்குள் தங்கி தொந்தரவு செய்யும், முன்னும் பின்னும் கதையைப் புரட்டி அலசி பார்க்கச் சொல்லும், தன்னை வெளியே எடுத்து வைக்கச் சொல்லி முரண்டும், பல நாவல்களாகக் கூடக் கிளைக்கும்.

இந்த ராக்கெட் தாதா சிறுகதை அப்படியான ஒன்றாகிப்போனது.

தாவூத் இப்ராஹிம் என்கிற ராக்கெட் தாதா. ராக்கெட் தாதா என்பது காரணப்பெயர் தான். அந்தக் காரணம் அவரது மனைவி மெஹ்ருன்னிஸா... என்றைக்குமான தாவூத்தின் காதல் தேவதை.

வாழ்க்கையில் முழுமையடைய முடியாத ஒரு தவிப்பு தாவூத்தின் கதை. எல்லாம் இருக்கு ஆனா இல்லை.

மனைவி, குழந்தை, வீடு, உறவு, வாழ்க்கை எல்லாம் இருக்கிறது அதோடு அவசியமாகிற பொருளாதாரத் தேவையும் தாவூத்தை நகரும் கேரட்டை நோக்கி செல்லும் முயலாக்கிவிடுகிறது. அந்தக் கேரட்டை அவரால் என்றுமே அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அது தேவையின் அவசியத்தைப் பொருட்டுத் திட்டமிட்டு நகர்த்தப்படுகிறது தாவூத்தின் அன்னை பாத்திமாவால்.

இரண்டு தங்கைகள் ஒரு அண்ணனோடு பிறந்த தாவூத் கொஞ்சம் விவரமாக இருந்து அதிகப் பிழை செய்துவிட்டார். அது, குடும்பத்தைக் கரை சேர்ப்பதற்காக அவரைச் சவூதிக்குத் துரத்திவிட்டது.

கல்யாணமான இரண்டு மாதத்தில் மெஹ்ருன்னிஸா உண்டாகி விட வெளிநாட்டில் வேலையிலிருந்தாலும் தாவூத்தை குடும்பத்தோடு அது பிணைக்கும் என அன்னை பாத்திமாவுக்கு ஏக மகிழ்ச்சி.

மருமகள் மெஹ்ருன்னிஸாவை வீட்டில், அவ்வூரில், என அவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கடிதங்களாக எழுதச் சொல்வதாகட்டும், கணவனுக்கான அந்தரங்க கடிதம் எழுதச் சொல்வது, நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மகன் ஊருக்கு வரும்போது கணவன் மனைவிக்கான தனிமையை நாசுக்காக ஏற்படுத்திக் கொடுப்பதாகட்டும்… மேலாண்மையில் படிக்காமலே பட்டம் பெற்றவர் பாத்திமா.

மனைவி கருவுற்று செய்தியோடு சவூதி செல்கிற தாவூத் தனது மகனுக்கு நாலு வயதாகும்போது தான் விடுமுறைக்கு வருகிறார். திரும்ப அடுத்த மகன், இப்படியே அடுத்தடுத்து நான்காண்டு திட்டம் கம்பெனியில் பல வருடங்கள் அனுபவத்தால் ரெண்டாண்டுக்கு ஒருமுறை வருகை என மாற... அதற்குள் வீடு, வசதி, பிள்ளைகளுக்குக் கல்யாணம் அம்மாவின் இறப்பு பேரன் பேத்திகளின் வருகை எனத் தாவூத் அறுபத்தாறு வயதை எட்டிவிடுகிறார்.

ஆனாலும், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை என அவர் அள்ளி வந்த மெஹ்ருன்னிஸ்ஸாவின் இளமையும், ஆசையும், காதலும் அப்படியே அந்தக் காலத்துடனே வயது ஏறாமல் உறைந்துவிடுகிறது அவரது மனதில்.

விடுமுறைக்குச் செல்லும்போது அவர் எடுத்து வரும் மெஹ்ருன்னிஸாவின் நினைவுகள் தான் சவூதியின் தனிமையில் தாவூத்தின் கற்பனை உலகம். அதனால் தாவூத்தை பொறுத்தவரை மெஹ்ருன்னிஸா என்றும் ஒரு காதல் தேவதை. ஆனால், மெஹ்ருன்னிஸாவிற்கு…?

அனைத்தையும் கடிதத்தில் தெரிவிப்பது உரையாடலாகாதே… இருவருக்கும் ஒருவரைப் பற்றி ஒருவருக்குத் தெரியாது. தேவைகள் என்ன அவரவர் பிரச்சனைகள், இன்பங்கள், விருப்பங்கள் என்ன புரியாது. தாவூத்திற்கு மெஹ்ருன்னிஸா என்றும் புதுப் பொண்டாட்டி தான்.

மெஹ்ருன்னிஸாவிற்கு அப்படியல்ல அவளைச் சுற்றி இருப்பவர் அவளுக்குக் காலத்தை உணர்த்திவிடுவார்கள். அம்மா அத்தை பாட்டி என்று அவளது அடையாளங்கள் மாறும்.

Perimenopause, Premenopause, Postmenopause என அத்தனையும் வந்து pause போட்டுவிடும்.

தாவூத், அறுபத்தாறு வயதில் விடுமுறைக்கு ஊருக்கு வருகிறார் மகன் தன்னைத் திரும்பச் சவூதிக்கு அனுப்பமாட்டான் என்கிற நப்பாசையோடு, மனைவி தன்னை எதிர்பார்த்திருப்பாள் என்கிற நம்பிக்கையோடு.

ஆனால், விடுமுறைக்கு வருபவரை வியந்து பார்த்து கதை கேட்கும் ஊர் மக்கள், வீட்டினரின் ஆவல், பரிசுக்காகச் சுற்றி வரும் பிள்ளைகள், பார்த்துப் பார்த்து கவனிக்கும் மனைவி என அவரைச் சுற்றி இயங்கி வந்த உலகம் அலுங்காமல் கைமாறிவிட்டிருக்கிறது.

மாதக்கணக்கில் தங்கும் விருந்தாளியினால் ஏற்படும் சௌகரியமின்மையை அனுசரித்துச் செல்வதைப் போல் வீட்டில் உள்ளவர்கள் மெஹ்ருன்னிஸா உட்பட அவரது இருப்பைத் தற்காலிகமானதாக மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள்.

தாவூத் இல்லாத சௌகரியத்திற்கு அவர்கள் பல வருடங்களாகப் பழகியிருக்கிறார்கள். அவரது இருப்புத் தேவைப்படாத கட்டத்திற்குத் தாவூத்தின் குடும்பத்தினர் நகர்ந்துவிட்டார்கள்.

தாவூத் அவரது வீட்டையே அந்நியமாக உணர்கிறார். அவரால் அங்கே பொருந்த முடியவில்லை. மெஹ்ருன்னிஸாவின் அன்றாட வாழ்க்கையிலோ தாவூத்தின் இடத்தைத் தொலைக்காட்சிப் பெட்டி ஆக்கிரமித்துப் பல வருடங்கள் கடந்துவிட்டன.

தனது ஏக்கங்களையெல்லாம் கொட்டி எப்படியும் மனைவியோடு முழுமையாக வாழ்ந்துவிடுவோம் என்கிற நம்பிக்கை முட்டுச்சந்தில் முட்டிக்கொள்கிறது. நிதர்சனத்தில் நடக்க வாய்ப்பேயில்லாத முட்டுச்சந்து.

ஆனாலும் தாவூத் இந்த முறையும் விடுமுறை முடிந்து செல்லும்போது தான் முதன் முதலாகச் சவூதிக்குப் பயணம் போன அதே இளமையான தாவூத் தான் என்று நிரூபித்துவிட்டே செல்கிறார்.

மகன் பேரன் மருமகள் என யாரையும் பொறுப்படுத்தாது காதலிக்கு முத்தமிடும் சாகசம் இளமைக்குத் தானே உண்டு.

****

//மணலை சீய்த்து தனது யோனியின் மீது நிறைத்துக் கொள்கிறாள்// முதல் கதையான படுகையில் வரும் இந்த வரி நிச்சயம் ஒரு அதிர்வைத் தருகிறது. உயிர் போராட்டம் போன்ற அந்தச் செயல். உயிர் போராட்டம் என்பது தன்னிச்சையான ஒரு செயல் அல்லவா… அப்படித் தன்னிச்சையாக அவள் மேற்கொள்ளும் போராட்டம்

அதிகாரத்திற்கு முன் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையிலும் அவள் காட்டும் எதிர்ப்பு

தனது கூட்டாளியைக் கைது செய்ய வந்த காவலர்களின் மேல் பாய்ந்து இன்ஸ்பெக்டரின் தோளில் ஆழமாகக் கத்தியைச் சொருகிய மூர்க்கமும் துல்லியமான கணிப்பும்… அவளது பல வருடப் போராட்ட வாழ்வின் தன்னியல்புகளோடு அவர்களது உறவின் நெருக்கத்தையும் பதிவு செய்கிறது படுகை என்றால்… சுமித்ரா சிறுகதை வேறு விதமானது.

சுமித்ராவின் தாய் ராசம் பதினெட்டு வயதில் மணமாகி வந்து நாலு குழந்தைகள் பெற்று போட்டுவிட்டாள் அந்தச் சாதனை கூட மகள் சுமித்ராவிற்கு வாய்க்கவில்லை. தன்னால் தான் என ராசத்தின் குற்றவுணர்வு மகளைப் பார்க்கும்போதெல்லாம் சீறலாக வெளிப்பட ஒதுங்கி போகும் சுமித்ரா கிணற்றோடு மட்டுமே உறவாடுகிறாள்... தனிமையில்.

சுமித்ராவின் அமைதி ஒரு அமானுஷ்ய அமைதி. அந்த அமைதி ராசத்துக்கு அப்படியொரு பயத்தைத் தருகிறது. அந்தப் பயம் தான் சுமித்ராவின் மேல் நாளுக்குநாள் கோபமாக வளர்கிறது. சுமித்ரா ராசத்துக்கு ஒரு சுமை… தவறுதலாகக் கைவிடப்பட்ட குற்றவுணர்வின் சுமை.

ராசத்தைப் போலத் தான் நிழல் சிறுகதையில் வரும் சந்திராவும்…

அறியாப்பருவத்தில் ஏற்பட்டுவிட்ட தவறு. தொட்டாலே தீட்டு என்கிற ஆண்டையோடான உறவு சந்திராவுக்குப் பதினாறு வயதில் ஒரு fantasy. கற்பனை நிஜமாகும் போது தானாகவே அவளுக்குக் கர்வமும் பெருமிதமும் ஏற்படுகிறது.

ஆனால் சமூகத்தாலும் குடும்பத்தினராலும் நிதர்சன வாழ்க்கையில் அடிபட்ட பின்பு எதார்த்தம் புரிகிறது. அவளை விட இந்த எதார்த்தத்தில் அதிகம் அடிபடுவது அவளது மகன் நாணாவாகத் தான் இருக்கும்.

அந்தக் குற்ற உணர்வு கூட அவளுக்கு நாணாவை ஒரு சுமையாக்கியிருக்கலாம். அந்தச் சுமையை இறக்கி வைத்துவிடுகிறாள். முற்றிலுமாகத் தெரிந்தே எந்தச் சலனமும் இல்லாமல் நாணாவை கைவிடுகிறாள்.

அந்த மனநிலைக்குச் சந்திரா வருவதற்குச் சட்டநாதனின் மேல் அவளுக்கு இருக்கும் வன்மமும் ஒரு சாக்கு. நாணாவின் பிறப்புக்குச் சந்திரா சட்டநாதன் இருவரும் தான் காரணம்.

ஆனால் சட்டநாதனுக்கு அதில் எந்தப் பாதிப்பும் இல்லையே… சட்டநாதனின் திருமண வாழ்க்கையையோ சமூகத்தில் அவனுக்கான அந்தஸ்தையோ அது மாற்றவில்லையே…

ஏன் சந்திராவுக்கு மட்டும் அத்தனை அடி உதை, வசவு, பழி… இது தான் சந்திராவால் நாணாவை எளிதாகக் கைவிட முடிகிறது. பின்பு நாணாவை பற்றி விசாரித்துக் கூட அந்தச் சுமையை மனதில் ஏற்ற அவள் முயலவில்லை.

சந்திராவைப் போலத்தான் சுமை சிறுகதையில் வரும் ஜெயந்தியும். அறியாமை குற்றங்களுக்குத் தோற்றுவாய்.

இளம் வயது, முதிர்ச்சியின்மை, தவறுதலான கருத்தரிப்பு, காதல் தோல்வி, நம்பிக்கை மோசடி என இவற்றோடு குழந்தை பிறப்பிற்குப் பின்னான மனச்சோர்வுக்கும் மனநிலை மாற்றத்திற்கும் (postpartum depression) அதிகத் தொடர்பு இருக்கிறது.

அது குழந்தையைக் கொலை செய்யும் அளவுக்குத் தீவிரத்தில் கொண்டுவிடும்.

தாயாக, சித்தியாக, அத்தையாக , அண்ணியாக நம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் பெண்களில் ஒருத்தி தான் சித்திரங்கள் சிறுகதையில் வரும் திவ்யா.

பொருளீட்டலில் ஆணுக்குச் சமமாக இருந்தாலும், உன் எல்லை இது தான், நான் அனுமதித்தால் தான், எனக்குக் கீழ் தான் நீ என்றும் என்கிற சுந்தரின் அடக்குமுறையால் திவ்யாவுக்கு ஏற்படும் பாதுகாப்பின்மை… அது தரும் பயம்… குயுக்தியாக மகன் அஸ்வினை சுந்தருக்கு எதிராகத் திருப்புகிறாள்.

அது ஒரு தற்காலிக நிலை தான். பல டாடியின் லிட்டில் பிரின்சஸ்கள் பருவ வயதில் அன்னைக்கு ஆதரவாக மாறுவது இப்படித்தான்.

அஸ்வினுக்கு விவரம் புரியும்போது அவனது மனதில் அன்னையின் பிம்பம் சரிந்துவிடும். இப்படியான குயுக்திகள் கட்டுடையும் போது தான்… “என் முந்தானையைப் புடிச்சிட்டு திரிஞ்ச பய இன்னைக்குப் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு ஆடுறான்” “வயசான காலத்துல கஞ்சி ஊத்த கூடக் கணக்குப் பார்க்கறான்” என்கிற ஒப்பாரிகள் எதிரொலிக்கிறது. சென்டிமெண்ட்டை வைத்து முடக்க நினைக்கும் எல்லா உறவுக்கும் இது பொருந்தும்.

கற்படிகள் சிறுகதையில் வரும் ராமமூர்த்தி… இந்தத் தொகுப்பிலிருக்கும் எல்லாச் சிறுகதைகளில் வரும் பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதைப் போல் ஆண்களுக்கும் ஒரு ஒற்றுமையிருக்கிறது.

வயது, குடும்பப் பிரச்சனைகள், வறுமை, அந்தஸ்து, இக்கட்டான நிலை என எதுவுமே அவர்களின் காமத்தை அது தரும் சிலிர்ப்பை அழிப்பதில்லை… அவர்களால் இயலாத போதும்.

ராமமூர்த்தித் தனது பால்யத்தின் காதலி வசந்தாவிடம் பண உதவி கேட்க வருகிறார். முன்னாள் காதலி என்கிற உறவை மாற்றத் தயங்கிக் கேட்காமலே விடைபெறுகிறார்.

விடைபெறும் முன்பு வசந்தாவின் வீட்டில் உரிமையாக அவர் செய்த வேலைக்குக் கூலியாக ராமமூர்த்தியின் தேவையை உணர்ந்து வசந்தா தரும் ஒரு மூட்டை அரிசி, அதுவரை ராமமூர்த்தியின் மனதில் இழையாக ஒட்டிக்கொண்டிருந்த அவ்வுறவுக்கு வாய்க்கரிசியாகிவிடுகிறது.

கிறக்கம் சிறுகதை நகைச்சுவையாக டாஸ்மாக்கின் தரத்தைப் பற்றிய கருத்தை முன்வைக்கிறது. ஆட்டுக்கறி பொதியில் அப்பும் ஈக்களின் கால்களின் ஈரத்தை உணரக்கூடிய அளவுக்கு நுணுக்கமான விவரணைகள்.

இந்தக் கதையில் மட்டுமல்ல தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளிலும் கதையை நெருங்கி ஸ்பரிசிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது அதன் விவரிப்புகள்.

கடைசிக் கதையான பிரார்த்தனை… கதைக்குப் பொருத்தமான தலைப்பு. பிரார்த்தனையும், புரட்சியும், கனிவும் தேவையின் பொருட்டே…

-அனிதா சரவணன்

Related Articles