வெளியிடப்பட்ட நேரம்: 21-Feb-2017 , 06:26 AM

கடைசி தொடர்பு: 21-Feb-2017 , 06:26 AM

ரோலக்ஸ் வாட்ச் - புத்தக விமர்சனம்

rolex watch

நம்ம எல்லாருக்கும் ஒரு பழக்கம் இருக்கிறது. திடீர் என்று ஒரு புது ஆள் கூட நட்பில் இணையும் போது ஒரு சின்ன சந்தோசம் வரும். அதுவும் அந்த நட்பு ஒரு ஏதாவது ஒரு பிரபலமாக இருக்கும் போது ஒரு எக்சைட்மெண்ட் வரும். அதுவும் அந்த நட்பு நம்ம டைம் லைனில் வந்து கமெண்ட் போட்டு பதிவு நல்லா இருக்கிறது என்று பாராட்டும் போது ஒரு மிதமான போதை ஏற்படும். அந்த போதை நிலையில் நீடிக்க அந்த நட்பு சொல்வது எல்லாம் கேட்க வேண்டும் என்று பின்னாலே see first notification போட்டு வைத்து ஒவ்வொரு பதிவும் மனப் பாடமாக தெரியும் அளவிற்கு பாலோ பண்ணி இருப்போம். இதனால் அந்த பிரபல நட்பு நம்ம கூட சகஜ நிலைக்கு உரையாட கூடிய நிலைக்கு வந்து இருப்பாங்க.


இந்த நிலையில் அவங்களுக்கு உங்களை அறிமுகப் படுத்திய நண்பன் நடுவில் வரும் போது உங்களுக்கு ஒரு சொல்ல முடியாத வெறுப்பு நிலை அந்த நண்பன் கூட உருவாகும். அந்த நண்பன் இல்லா விட்டால் இந்த நட்பு உருவாக சாத்தியம் இல்லை. அந்த நண்பன் உங்களிடம் உள்ள ஏதோ ஒரு திறமை இந்த நட்பால் பலப்படும். அது உங்களுக்கு உதவி ஆக இருக்கும் என்ற நல்ல எண்ணத்தில் தான் இந்த பிரபல நட்போடு உங்களை கோர்த்து விட்டு இருப்பார். இப்ப அந்த நண்பனுக்கும் பிரபல நட்புக்கும் உள்ள நெருக்கம் உங்களை அருகே அமைதி இல்லாமல் இருக்கச் செய்யும். இதை உங்களது நண்பன் கண்டு பிடித்து விடுவான். சரி இதனால் இவன் தடுமாறுகிறான் என்று உணர்ந்து தள்ளி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடுகிறான். இதுவே அவனது மதிப்பை உயர்த்துவது.


சரி இதற்கும் இந்த நாவலுக்கும் என்ன சம்பந்தம்?


கதையின் நாயகன், அவனது நண்பன் சந்திரன், அந்த பிரபல நட்பு இன்னொரு நண்பன் மனைவி திவ்யா இவங்க மூன்று பேர் நடுவில் இருக்கும் , நட்பு, காதல், காமம் தான் இந்த நூலின் மைய இழை.


நாயகன் இளங்கலை பட்டப்படிப்பு படிப்பதற்கு சென்னை வருகிறான். அங்கே அவன் கூட படிக்கும் நண்பன் சந்திரன் அறிமுகம் ஆகிறான். சந்திரன் வசதியான வீட்டுப் பையன். வாழ்க்கையில் தன் உழைப்பால், நேர்மையாக முன்னேற வேண்டும் என்ற குறிக்கோள் உடையவன். காதலியின் மேல் விரல் நகம் கூட படாமல் காதல் செய்பவன். ஒரு நல்ல நிலையை சொந்தமாக அடைந்த பின் கல்யாணம் என்ற கோட்பாடு உடையவன்.


அவனுக்கு கதை நாயகன் மேல் ஒரு ஈடுபாடு வருகின்றது. அறிவுடன் கூடிய வளர வேண்டிய பிள்ளை என்ற எண்ணம் வருகின்றது. இதனால் தனது மேல் மட்ட வர்க்க நண்பர்களுக்கு நாயகனை அறிமுகம் செய்து வைக்கின்றான். அவர்களும் சந்திரன் நண்பன் என்பதால் வித்தியாசம் காட்டாமல் பழகி வருகின்றனர். இரவு நேர பார்ட்டிகள், மது, சிகரெட், தாய்லாந்து பயணம் என்று ஒரு கொண்டாட்டமான வாழ்க்கையை அனுபவிக்கிறான். ஒரு நாள் நண்பனின் மனைவி கூட உறவு ஏற்படுகின்றது. அவளும் இவன் நடை உடை பாவனைகளை மாற்றி ஸ்பூனால் சாப்பிட சொல்லி கொடுத்து ப்ளேசர், மற்றும் மாருதி ஸ்விப்ட் வரை வாங்கித் தருகிறாள். திருவல்லிக்கேணி மேன்சனுக்கு மூன்று மாத வாடகை பாக்கி வைத்திருக்கும் ஒருவன், ஆந்திர மெஸ்சில் நாளைக்கு ஒரு தடவை மட்டும் உணவு சாப்பிடும் ஒருவனுக்கு இந்த உறவு முறை பற்றி எந்த தவறும் தெரியவில்லை. வாழ்க்கையை கொண்டாட பணம் அவசியம் , அது எந்த நிலையில் இருந்து கிடைத்தால் சரி தான் என்ற ஒரு மன நிலையில் இருக்கும் அவனுக்கு நல்லது, கெட்டது என்ற பாகுபாடு பார்ப்பது அவசியம் இல்லாத ஒன்றாக தெரிகிறது. இந்த உறவு அந்த தோழியின் கணவனுக்கு தெரிய வரும் போது, அதை இவனை மிரட்டும் ஒரு காரணியாக தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற ஒரு செக் இவனிடம் வைக்கப்படுகிறது. இருந்தாலும் இவனுக்கு திவ்யாவின் உறவு, உடம்பு தேவைப்படுகின்றது. இந்த மேல் மட்ட நண்பர்களின் தொடர்பு பயன்படுத்தி மத்திய அரசு விருது வாங்கித் தரும் அளவிற்கு கமிசனுக்கு வேலை பார்க்க முடிகிறது.


விருது குறுக்கு வழியில் வாங்கித் தருவதற்கு டெல்லி செல்லும் போது அங்கே ஜே என் யூ மாணவர்களின் ஆழமான சிந்தனை இவனுக்கு ஒரு மாறுதலை, ஆழ்ந்த சிந்தனைகள் ஏற்படுத்தும் போதையை உணர வைக்கின்றது.


அதற்கு அப்புறம் அவன் தனியாக பட்டாயா பயணம் மேற் கொள்கிறான். அங்கு ஒரு விலை மாது இவனுக்கு வாழ்வின் வேறு வண்ணங்களை காட்டிக் கொடுக்கிறாள்.


இந்த பின்வாசல் வழியாக வேலை பார்க்கும் வேலை நிரந்திரம் இல்லை என்று ஒரு கால கட்டத்தில் உணர்கிறான். அப்புறம் அவன் என்ன செய்கிறான் , இவன் நண்பன் சந்திரன் கிட்ட எந்த மாதிரி நட்பு இருக்கின்றது, அது காலத்திற்கு தகுந்தால் போல் எப்படி மாறுபாடு அடைகின்றது , என்பதை சீரான நடையில் சொல்லிக் கொண்டு செல்லும் நாவல் இது.


நமது அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்கள், வாசிக்கும் எல்லாரும் தங்களை ஏதாவது ஒரு கேரக்டரில் பொறுத்தி பார்த்துக் கொள்ளும் அளவிற்கு சம கால வாழ்வின் அழகியல் பதியப்பட்ட நாவல் இது. நேர்மை, துரோகம் செய்ய கூடாது, நட்பை மதிக்க வேண்டும், வாழ்வில் உயர உயர நமது இமேஜ் எப்படி காப்பாற்ற வேண்டும், என்ற கருத்தை மறைமுகமாக நாவலின் எல்லா இடங்களிலும் எதிர் மறை நிகழ்ச்சிகளின் மூலம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே செல்கிறார்.


விரும்பமானது விட்டாலும் தப்பு
விருப்பம் இல்லாததை தொட்டாலும் தப்பு.


மனம் போல வாழுங்கள் என்று வாழ்ந்து கொண்டு இருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்


-மருத்துவர் இராதாகுமார்

Related Articles