வெளியிடப்பட்ட நேரம்: 28-Nov-2018 , 10:01 AM

கடைசி தொடர்பு: 28-Nov-2018 , 10:02 AM

சார்க் மாநாடு - நிராகரித்த இந்தியா

images (35)

சார்க் மாநாட்டில் பங்கேற்க, பாகிஸ்தான் வருமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று விடுத்திருந்த அழைப்பை இந்தியா நிராகரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீர் மாநிலம் யூரியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து, 2016 சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்தது. இதனால் அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பாக்.,ல் நடக்க உள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள பாக்., வருமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக பாக்., வெளியுறவு அமைச்சகம் நேற்று அறிவித்திருந்தது.

சார்க் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களிடம் ஆலோசித்த பிறகு சார்க் மாநாடு நடைபெறும் தேதி குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாகவும், தேதி இறுதி செய்யப்பட்ட பிறகு மோடிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படும் எனவும் பாக்., கூறி இருந்தது. அதே சமயம் இந்த மாநாட்டிற்காக இந்தியாவிற்கு சிறப்பு அழைப்பு ஏதும் விடுக்கப்படவில்லை எனவும், உறுப்பு நாடு என்ற முறையில் அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும் விளக்கம் அளித்திருந்தது.


இந்நிலையில், பாக்., அழைப்பு தொடர்பாக டில்லி வட்டார தகவல்கள் கூறுகையில், சார்க் அமைப்பின் உறுப்பினரான வங்கதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. ஆப்கானிஸ்தானும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஒப்புதல் அளிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் பாக்., அழைப்பை ஏற்க இந்தியா விரும்பவில்லை என தெரிவித்துள்ளது. சார்க் மாநாடு கடைசியாக, 2014ம் ஆண்டில் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.Related Articles