வெளியிடப்பட்ட நேரம்: 10-May-2019 , 09:16 AM

கடைசி தொடர்பு: 10-May-2019 , 08:12 PM

சாரல்காலம் பகுதி-4

college boys

வனிதா வீடு உண்மையிலேயே பிரம்மாண்டமாக இருந்தது, உதாரணத்துக்கு வேணும்னா கீழே இருக்க படத்தை பார்த்துக்கங்க, 2 நாள்ள கல்யாணம்ங்கறதால் அலங்கார வேலை, பந்தல் போடறதுனு கொஞ்சம் பேர் வேலை செஞ்சுகிட்டே தான் இருந்தாங்க, சூர்யா தான் ஹரிக்கு வழி காட்டி கூட்டி சென்றான்.இவங்க உள்ளே நுழையறப்ப இவங்க தாண்டுன ஒரு ஜன்னல் திறந்தது, ஹரி திரும்ப வந்து எட்டிப் பார்த்தான், பொண்ணுங்க ரூம்னு தெரிஞ்சது, ஆனா லைட் எரியாததால யாரோட முகமும் தெரியலை.

சூர்யா “டேய், என்னடா பார்க்கற? எல்லாம் நம்ம காலேஜ் பொன்னுங்கதான், ரொம்ப பார்த்து அவங்களை ஏத்தி விடாத, வா போலாம்”

பேச்சுக் குரல் கேட்டு ஜன்னலருகில் நின்றிருந்த பெண் லைட்டைப் போட

“டேய் மச்சான், காயத்ரிடா”

படாரென்ற சத்தத்துடன் ஜன்னல் சாத்தியது.

சுரனையே இல்லாமல் ஹரி சூர்யாவை பார்த்து சிரித்தான்.

“மச்சி, காயத்ரி இங்க என்னடா பன்றா?”

“ஹரி, எப்புட்றா? அவ உன்னை பார்த்ததும் டப்னு ஜன்னலை சாத்தனத கூட ஏதோ ஃபிளையிங் கிஸ் வாங்குன மாதிரி சந்தோசமா எடுத்துக்கற?”

“ஏன் மச்சான், இப்ப அவ என்னை அசிங்க படுத்திட்டாளா?”

“ஆமானு சொன்னா மட்டும் என்ன பண்ண போற?”

“அவளுக்கு அந்த உரிமை இருக்கு மச்சான்”

“தெரியும் நாயே, இதைத்தான் சொல்லுவன்னு, வந்து தொலை, போய் தூங்கலாம்.”

சிரித்துக் கொண்டே, வெட்கப் பட்டுக் கொண்டே தூங்குபவனை யாருக்காவது பார்க்க வேண்டுமென்றால் வந்து பார்த்துக் கொள்ளுங்கள். ஒருதலையாய் காதலிக்கும் போதே இப்படி, நாராயணா?????

காலையில் 6 மணிக்கெல்லாம் ஹரி எழுந்து விட்டான், அதை அப்படி சொல்லக் கூடாது, ஹரியின் மொழியில் நள்ளிரவு 6 மணிக்கெல்லாம் ஹரி எழுந்து விட்டான். குளித்து ரெடி ஆகி விட்டாலும் தனியாய் போய் சைட் அடித்து பழக்கமில்லை என்று சூர்யாவை உலுக்கி உலுக்கி எழுப்பினான்.

“எழுப்பிக்க, எனக்கென்ன?” னு சூர்யா 7.30க்கு தான் எழுந்து 9 மணி வரை அங்கு தங்கி இருந்த ஒவ்வொருவருடனும் பேசிக் கொண்டே கிளம்பினான், ஹரிக்கு இருந்த உற்சாகமெல்லாம் வடிந்து விட்டது.

சாப்பிட போகும் போது வனிதாவை சந்தித்தார்கள், சாப்பிட்ட பின் அக்காவை பார்க்க அழைத்து செல்வதாக கூறினாள், சாப்பிட்ட பின் சூர்யா

“அப்புறம்”

“என்ன அப்புறம்”

“பார்க்கலை?”

“யாரைடா?”

“உன் வழித்துணை ய?”

“எங்கே போய் பார்க்கிறது? அதிர்ஷ்டம் வேணும், மச்சான் யார்கிட்டயும் சொல்லிடாதடா”

“நானா சொல்ல மாட்டேன்”

“அப்புறம்”

“நீயா காட்டி குடுத்துருவ”

அதன்பின் வனிதாவின் அக்காவை பார்க்க வனிதாவுடன் சென்றார்கள். அவர்களும் இவர்களது கல்லூரியில் போன வருடம் படித்து முடித்தவர் தான், அவர்கள் இருந்த அறைக்குள் பெண்கள் கூட்டம், ஹரிக்கு ஏதோ தவறு செய்துவிட்டு பிரின்சிபால் அறைக்கு செல்வது போலவே இருந்தது, அந்த பக்கம் இந்த பக்கம் தலையை திருப்பாமல் போனான், சூர்யா தனக்கு தெரிந்த பெண்களிடம் ஹாய் சொல்லிக் கொண்டே போனான். சம்பிரதாயமாக பேசி விட்டு வெளிய வந்தார்கள்.

சூர்யா “என்ன ஹரி, சந்தோசமா?”

“எதுக்கு?”

“எதுக்கா? டேய், நீ காயத்ரிய பார்த்தியா? இல்லையா?”

“காயத்ரியா? எங்கடா?”

“விளங்கும், ஏன்டா நாம அக்கா கூட பேசும் போது வனிதா காயத்ரி கூடத்தானே பேசிகிட்டு இருந்தா? நீ யாரை பார்த்துகிட்டு இருந்த?”

“ச்சே, நான் பார்க்கவே இல்லைடா”

“ஆனா அவ உன்னை நல்லா பார்த்தா, அநேகமா உன்னை பத்திதான் 2 பேரும் பேசிகிட்டு இருந்துருப்பாங்கனு நினைக்கறேன்”

“என்னை பத்தியா? என்னை பத்தி பேச என்ன இருக்கு?”

“தெரியலை, அப்புறம் வனிதாகிட்ட கேட்கலாம், வா மத்த பிராஞ்ச் பசங்ககிட்ட பேசுவோம்”

ஹரி ஒரு பக்கமும் சூர்யா ஒரு பக்கமும் பிரிந்து போய் ஒவ்வொருவனிடமும் பேசினார்கள், ஹரியை கல்லூரியில் நிறைய பேருக்கு தெரியும், ஆனால் ஹரிக்கு நிறைய நண்பர்களின் பெயர் நினைவில்லாத சமயங்களில் “மச்சி” என்றழைத்து சமாளித்து விடுவான். பேச்சுவாக்கில் பெண்கள் கோவிலுக்கு போக திட்டமிட்டது தெரிய வந்தது. காயத்ரியும் வருவாளென்று ஹரியும் போகாலாமென்று முடிவெடுத்து விட்டு சூர்யாவை தேடினான்.

சூர்யா ஹரியை தேடி வந்து வேறு திட்டத்தை கூறினான்.

“மச்சான், பசங்க படத்துக்கு போறாங்க, போலாமா?”

“அவனுங்க போகட்டும், நாம கோயிலுக்கு போறோம்”

“கோயிலுக்கா? ஏன் காயத்ரி போறாளா?”

“ஏன்டா? நாங்களாம் போகக்கூடாதா?”

“டேய், நீ? கோவிலுக்கு போறவன்? நீ போகனும்னா ரெண்டே காரணம் தான் இருக்கும், ஒன்னு உங்கப்பா திட்டி அனுப்புவார், இன்னொன்னு ஏதாவது ஃபிகர் போகனும், உண்மைய சொல்லு”

“இல்லைடா பசங்க போறாங்க, கூப்பிட்டானுங்க”

“அவனுங்க கூப்பிடறது இருக்கட்டும், அந்த பொண்ணு போகுதா இல்லையா?”

“எல்லா பொண்ணுங்களும் வராங்களாண்டா”

“அதான் அந்த பொண்ணும் வருதுங்கற, சரி போலாம்”

உண்மையில் ஹரிக்கு காயத்ரிக்காகத்தான் போகிறோம் என்பதை ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை, ஆனால் அவன் முகம் காயத்ரியை பற்றி பேசும் போது பிரகாசமடைவதை வைத்து சூர்யா கண்டுபிடித்து விட்டான். மற்றவர்களுக்கும் சூர்யாவிற்கும் இதுதான் வித்தியாசம்.

ஏதாவது ஒரு பெண் தன் தோழிகளிடம் ஒரு பையனை பற்றி பேசினால் “ஏன் அவனை பற்றி பேசுகிறாய், அதெல்லாம் சரியில்லை, படிக்கிற வேலையை பார், உன் குடும்பத்தை நினைச்சு பார்” என்று சொல்லி கவனத்தை திசை திருப்புவார்கள்.

ஆனால் இதுவே ஒரு பையன் தன் நண்பர்களிடம் தன்னுடன் பழகும் ஒரு பெண்ணை பற்றி பேசினால் போதும்.“மச்சி உங்க 2 பேருக்கும் அப்படி ஒரு பொருத்தம், அஜித்-ஷாலினிக்கு அப்புறம் அந்த பொருத்தம் உங்ககிட்டதான் பார்க்கிறேன். யோசிச்சு பார், ஏன் நீங்க 2 பேரும் பார்த்துக்கனும், பழகனும், எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்குடா”ன்னு சும்மா இருக்கறவனையும் சீண்டி விடுவாங்க.

சூர்யா யாருக்கும் இதுபோல் செய்ய மாட்டான். ஏனென்றால் அவனுக்கு பெண்களை பற்றி நன்றாக தெரியும்.

கொஞ்ச நேரத்தில் பெண்கள் அலங்கரித்துக் கொண்டு கிளம்பி செல்வது தெரிந்தது. சூர்யாவும் ஹரியும் எதை பற்றியோ பேசுவது போல் அவர்களை பார்த்து கொண்டிருந்தார்கள்.

வனிதா ஹரியிடம் வந்து கேட்டாள்.

“நாங்க கோயிலுக்கு போறோம், நீ இன்னும் பெரிய கோயில் வந்தது இல்லை தானே, வாயேன் போலாம்”

ஹரி எதிர்பார்த்தது தான்.
“வர்றோம், ஆனா அங்க வந்துட்டு பொண்ணுங்க கூப்பிட்டவுடனே பின்னாடி வந்துட்டோம்னு யாரும் சொல்ல் கூடாது”

“ஆமா, உன்னை பத்தித்தான் எல்லாரும் பேசிகிட்டு இருக்காங்களா? வேற வேலை இல்லை, வந்தா வா இல்லைன்னா போ எனக்கென்ன?”

“சரி சரி நீங்க போங்க நாங்க பைக்ல வர்ரோம்”

சூர்யா கேட்டான்

“ஏன்டா, நீயே உன் மானத்தை வாங்கிக்கற?”

“இல்லைடா, நீதானே சொன்ன என்னை பத்தி பேசிகிட்டு இருந்தாங்கனு, அதான் கேட்டேன். இப்ப பேசலைனு தெரிஞ்சுருச்சுல்ல”

“லூசு, உனக்கு இப்ப மட்டும் தெரிஞ்சுருச்சா அவங்க பேசலைனு? போடா. அவங்க பேசறத வச்சுல்லாம் எதையும் கண்டுபிடிக்க முடியாது”

“அப்படியா?”

“ஆமாடா”

ஹரி தான் எதை பற்றி சிந்திக்கிறோம் என்பது கூட அவனுக்கு தெரியவில்லை, சூர்யாதான் அழைத்தான்.

“ஏன்டா கனவுக்கு போய்ட்டியா?”

“இல்லைடா யோசிச்சுகிட்டு இருந்தேன்”

“எதை பத்தி?”

“தெரியலை”

சூர்யாவிற்கு புரிந்து விட்டது. ஆனால் எதுவும் சொல்லவில்லை.

-கதிர் ராத்

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும். https://kalakkaldreams.com/article.php?a=saralkaalam-part-3-by-kathirrath&i=9175

Related Articles