வெளியிடப்பட்ட நேரம்: 01-May-2018 , 06:17 PM

கடைசி தொடர்பு: 02-May-2018 , 01:04 PM

ஷோபா - 38ம் ஆண்டு நினைவஞ்சலி

shobha1

குழந்தை நட்சத்திரமாக தனது மூன்றாவது வயதில் சினிமாவில் அடியெடுத்து வைத்தவள் தான். சாகும் வரை சினிமாவிலேயே இருந்தாள். (இறந்த பிறகும் சினிமாவில் நடித்தாள்) தனது 18 வயதுக்குள் 75க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து முடித்துவிட்டார். மலையாள சினிமாவும் தமிழ் சினிமாவும் இவர் திறமையை சரிவர பயன்படுத்திக் கொண்டது.

தனது பதினெட்டு வயதை கூட பூர்த்தி செய்யாவிடினும், தான் இறந்து 38 ஆண்டுகளாகியும் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களின்  மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்றால் அதற்கு காரணம் அவள் ஏற்று வாழ்ந்த பாத்திரங்களும் தான். அப்படியான எண்ணத்தில் என்றும் அழியாத பல பாத்திரங்கள் அமையப் பெற்றது அந்த நடிகையின் பாக்கியமா? இல்லை அந்த பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் நடிகை வாய்க்கப் பெற்றது சினிமா ரசிகர்களின் பாக்கியமா என்று தெரியவில்லை.



♦ “தங்கை வள்ளி”யாக

“முள்ளும் மலரும்” தமிழ் சினிமாவின் வரலாற்றில் இருந்து நீக்கவே முடியாத படங்களில் ஒன்று “முள்ளும் மலரும்” தன தங்கை மீது உயிரையே வைத்திருக்கும் முரட்டுத்தனமான அண்ணன் காளிக்கும், நிறைய படித்து நல்ல அரசு உத்தியோகத்தில் இருந்தாலும் தன்னை உயிராக நேசிக்கும் மனம் கவர்ந்த நாயகனுக்கும் இடையில் சிக்கித்தவிக்கும், அச்சம் மடம் நாணம் எல்லாம் கலந்த ஒரு கிராமத்து பாசக்கார தங்கையாக வாழ்ந்து இருப்பார்.
♦ “பரிதவிக்கும் ரேகா”வாக

“மூடுபனி” சைக்கோ திரில்லர் படங்களில் மிக முக்கயமானது. தன கடந்தக் கால ஏமாற்றங்களால் பெண்களை தொடர் கொலைகள் ஒரு சைக்கோ கொலைகாரனோடு வாழ்ந்து, அவனின் மென்மையான பக்கங்களை நேசித்து காதலாகி கசிந்து, பிறகு அவன் அவளை கொலை செய்ய துரத்தும் போது ஓடி ஒளிந்து, பயந்து நடுங்கி என்று நொடிக்கு நொடி அற்புத முக பாவங்களை காட்டி மயக்கி இருப்பார்.

♦“ஆசிரியை இந்துமதி”யாக

“அழியாத கோலங்கள்” விடலைப் பருவத்தில் விரகத்தில் தவிக்கும் மாணவர்கள், அதில் இருந்து மீண்டு வரும் கதைகள், அந்த வயதின் உணர்சிகளை கூறும் கதைகள் தமிழ் சினிமாவில் குறைவு அப்படியே பேசினாலும் அவை காமம் சார்ந்த படங்களாகவே இருக்கும். ஆனால் தன் மீதே மோகம் கொண்டு அலையும் தன் மாணவர்களை நல்வழிப்படுத்தும், அன்பான ஆசிரியையாக, பிற்காலத்தில் அவர்கள் மனதில் ஒரு தாயின் ஸ்தானத்தை பெரும் அளவுக்கான கருணை நிறைந்த ஆசிரியையாக நடித்து “பெண் ஆசிரியர்களுக்கே பெருமை சேர்த்து இருப்பார்.

♦ “வேலைக்காரி திலகம்”ஆக

“நிழல் நிஜமாகிறது” தான் ஒரு வேலைக்காரியாக இருந்தாலும் கற்பனையில் மகாராணியாக வாழும் தன் அப்பாவிதனத்தை, தனக்கு சாதகமாக பயன்படுத்திய பணக்கார வாலிபனின் காமவேட்கையை காதலென்று நினைத்து ஏமாந்தது கூடத்தெரியாமல், அவன் பெயர் கெட்டு விடக்கூடாது என்று பலியையும், பிள்ளையையும் ஒரு சேர சுமந்து, பின் தனக்காக எல்லா விதமான இன்னல்களையும் அனுபவித்து, தன மீது அன்பை மட்டுமே பொழியும் தன சக ஊழியன் அப்பாவி காசியை ஆரம்பத்தில் வெறுத்தாலும் பிறகு மெல்ல மெல்ல அவனை நேசிக்கும் வேலைக்காரித் திலகமாக வாழ்ந்து இருப்பார்.

♦“ஏழை குப்பம்மா”வாக

“பசி” எப்படியாவது தன் குடும்பத்தை, தம்பி தங்கைகளை வறுமையில் இருந்து மீட்டு தன் வாழ்வும் நல்ல விதமாக அமைத்துக்கொள்ள வேண்டும். குப்பைப் பொறுக்கி வாழும், தன்னை விரும்பும் லாரி டிரைவர் ரங்கனிடம் தன்னையே இழந்து ஏமாந்தது தெரிந்து, வேறு வழியில்லாமல் உயிரையே விடும் குப்பத்து குப்பம்மா பாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார். இந்த குப்பமா பத்திரதிற்கு தான் இந்தியாவின் சிறந்த நடிகைக்கான  விருதான “ஊர்வசி” விருதை பெற்றார்.

♦“நடிகை கமலாதேவி எனும் செல்லக்கண்ணு”வாக

“ஏணிப்படிகள்” திரையரங்கில் கூட்டி குப்பை பெருக்கி, சுத்தம் செய்யும் அடிமட்டத் தொழிலாளி, தன் அழகாலும், திறமையாலும் பெரிய நடிகையாகி, கூலி வேலை செய்தபோது தன்னை ஏணிப்படியாக உயர்த்திய காதலனா, குடும்பமா என்று குழப்பத்தில் தவிக்கும் நாயகியாக என்றும் பழசை மறக்காத செல்லக்கண்ணுவாகவே வாழ்ந்து இருப்பார்.

இப்படியான பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்ததால் தான், தான் இறந்து 38 ஆண்டுகளாகியும்...

இன்றும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காமல் வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள். இந்த கனவு தேவதை.

தமிழ் சினிமாவிற்கு வரும் முன்பே மலையாள சினிமாவில் கொடிக்கட்டி பறந்திருந்தாலும் இவளை ஊர்வசி விருது வரை உயர்த்தியது தமிழ் சினிமா தான். அப்படியான இந்த தேவதையை தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்தது ஒளிப்பதிவாளர், இயக்குனர் பாலுமகேந்திரா தான்.

பாலுமகேந்திராவால் அறிமுகப்படுத்தும் முன்பே அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, வளர்ந்தும் தமிழ் சினிமாவில் நடித்து இருந்தாலும் அவரின் கருப்பு வண்ணம் சின்ன சின்ன பாத்திரங்களில் மட்டுமே வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது.

கருப்பான பெண்களை நாயகியாக்கினால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடிக்காது, அப்படியே அவர்களை நாயகியாக்கினாலும் ஒன்று கிராமத்து பெண்ணாகவோ, ஏழை குப்பத்து பெண்ணாகவோ தான் காட்ட முடியும் என்ற கோட்பாடுகளை உடைத்து, வெற்றி நாயகியாக அழகு பதுமையாக வலம் வந்தார்.

அவர் எப்பவுமே அழகு தான் பாலுமகேந்திரா’வின் கேமாரவில் இவர் மேலும் அழகாக காட்சித் தந்தார். அதற்கு காரணம் அவர் சோபாவை பிலிம் ரோலில் படம் பிடிக்கவில்லை தன் காதலன் ரோலில்  படம் பிடித்தார் என்பது ஷோபாவே கூறியது.

பல படங்களில் தங்கை, வேலைக்காரி பாத்திரங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பேரும் புகழும் வாங்கித்தந்தது பாலுமகேந்திராவின் இயக்கத்தில் கன்னடத்தில்  வெளிவந்த “கோகிலா” தான் கமல்ஹாசன் நாயகனாகவும் ஷோபா நாயகியாகவும் நடித்த அந்த படம் தான். பிற்காலத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய மைக் மோகனின் அறிமுக படமும். படம் பெரும் வெற்றியை பெற்றது மட்டுமல்ல இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பெரிய வாய்ப்பையும் உருவாக்கித் தந்தது.

அதன் பிறகு தான் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் படங்களில் உள்ள நல்ல பாத்திரங்களுக்கு ஷோபாவை ரெக்கமன்ட் செய்தார் இயக்குனர் பாலுமகேந்திரா. அப்படி தான் மலையாளத்தில் பெரிதும் பேசப்பட்ட “ஊள்கடல்” வாய்ப்பும் கிடைத்தது. (அதன் பிறகு அவர் பாலுமகேந்திராவின் கட்டுப்பாட்டில் தான் வாழ்ந்தார் என்பது இவரது அம்மாவும் நடிகையுமான பிரேமா, இவர் இறந்த பிறகு வைத்த குற்றசாட்டு)

புகழின் உச்சத்தில் இருக்கும் போதே தீராத மன உளைச்சலிலும் இருந்து இருக்கிறார். கையில் வரிசையாக நிறைய படங்கள் இருந்தும் கூட அவற்றை முடிக்காமல் தன் வாழ்வை முடித்துக் கொண்டாள் இந்த தேவதை. ஆம் 1980ம் வருடம் இதே மே 1 ம் தேதி இந்த தேவதை மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றார். இவர் இறந்த பிறகு இறுதி மரியாதைக்காக கல்யாண மண்டபத்தில் (இன்றைய அசோக் பில்லர் மெட்ரோ ஸ்டேசன் உள்ள இடத்தில் முன்பு இருந்த கல்யாண மண்டபம்) வைக்கப்பட்ட இவர் உடலை கண்டு திரையுலகினர் மட்டுமல்ல, ஏராளனமா ரசிகர்களும் கதறி அழுதனர். அந்த காட்சியை வைத்து சிவக்குமாரோடு நடித்து பாதியில் விட்டுப்போன “சாமந்திப்பூ” திரைப்படத்தில் இவர் இறந்து போனதாக கதையை முடிக்க உபயோகப்படுத்தி இருப்பார்கள். அந்த வைகையில் கதாபத்திரமாகவே இறந்து போன நாயகி திரையுலகில் இவரைத்தவிர யாருமில்லை.

திரை வெளிச்சம் கண்டு
ராணியாக வளம் வர
நினைத்து!
விட்டில் பூச்சியாய்
சில காலமே
வாழ்ந்தாலும்
நீ விட்டுச்சென்ற
வெளிச்சப்புள்ளிகள்
என் கனவுலகை
பிரகாசமாக்குக்கிறது...
- செந்தில்குமார் நாகராஜன்

Related Articles