வெளியிடப்பட்ட நேரம்: 26-Mar-2018 , 07:28 AM

கடைசி தொடர்பு: 26-Mar-2018 , 07:29 AM

சிவகாமி பர்வம் - புத்தக விமர்சனம்

FB_IMG_1522028988369

புத்தகத்தின் பெயர்: #சிவகாமி_பர்வம் (The Rise of Sivagami)
எழுத்தாளர்: ஆனந்த் நீலகண்டன்

இந்த நேரத்தில் #பாகுபலி படம் பார்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். வெளி உலகில் எப்படியோ இணையத்தில் அனைவரும் பார்த்திருப்போம். முதல் பாகம் வெளி வந்த உடனேயே இந்த கேள்வி மனதினுள் வந்தது. எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை.

தேவசேனாவை போல அழகும் அறிவும் வீரமும் கொண்ட சிவகாமி தேவி ஒரு ஊனமுற்ற கெட்டெண்ணம் கொண்ட பிங்கல தேவனை ஏன் மணமுடித்திருப்பாள்?

யார் இந்த சிவகாமி என்ற கேள்வி எழும். மூலக்கதை மகாபாரதம் என்றாலும் அதில் பெண்களுக்கு இவ்வளவு துணிச்சலும் அதிகாரமும் தராத நிலையில் நாமாகத்தான் யோசித்துக் கொள்ள வேண்டி இருந்த நிலையில் இந்த புத்தகம் வந்தது.

மன்னர் காலத்து கதை என்றாலே நம் மனம் தானாக, இதற்கு முன் அது போன்ற களத்தில் வல்லவர்களுடன் ஒப்பிடத் தோன்றும். தமிழில் கல்கியும் சாண்டில்யனும் பாலகுமாரனும் தான் என்னை பெரிதும் ஈர்த்தவர்கள். அவர்களது தமிழுடனும் எழுத்து நடையுடனும் விறுவிறுப்புடனும் ஒப்பிட முடியாத அளவு தான் இருந்தது இப்புத்தகத்தின் எழுத்து. காரணம் இது நேரடி தமிழ் நூல் அல்ல. பாகுபலியை போல் இதுவும் மொழிமாற்றம் செய்யப்பட்ட படைப்பு தான்.

மன்னராட்சி என்றாலே அனைவருக்கும் அதன் அடிப்படை புரிந்திருக்கும். வர்ணாசிரமம் இல்லாமல் முடியாட்சி நிகழ வாய்ப்பே இல்லை. அனைவரும் சமம் என்று சொல்லி இங்கு யாரும் யாரையும் ஆள முடியாது அல்லவா? அதன்படி ஒழுங்குடன் கட்டமைக்கப்பட்ட மகிழ்மதி இராஜ்ஜியம், அதன் அரசன். அவருக்கு இரண்டு மகன்கள். ஒருவன் இராஜகுலத்துக்கே உண்டான திமிரும் மூர்க்கத்தனமும் மூடத்தனமும் பெண்ணாசையும் உடையவன். மற்றொருவன் கோழை என்பதால் நல்லவன்.

மன்னருக்கு கீழ் அமைச்சரவை என்பது இல்லாமல் பூமிபதி என்றொரு அடுக்கு உள்ளது. நம் பக்கம் ஜமின்தார்கள் போல. அவர்களுக்கென நிலங்களும் அடிமைகளும் இருப்பார்கள். சிறு படையும் இருக்கும். ஆனால் அவர்கள் மன்னருக்கு கீழ்பட்டவர்கள். அப்படிப்பட்ட ஒரு பூமிபதியை அவரது வீட்டிலிருந்து தரதரவென இழுத்து வந்து தேசத்துரோகம் குற்றம் சாட்டப்பட்டு கல்லால் அடிக்கப்பட்டு தூக்கிலிடப்படுகிறார். அவரது 5 வயது மகள் தான் சிவகாமி. தேசத்துரோகிகளின் மொத்த குடும்பத்திற்கும் மரண தண்டனை வழங்குவதுதான் வழக்கம். ஆனால் 5 வயது சிறுமி என்பதாலும் மற்றொரு பூமிபதியில் சிபாரிசினாலும் சிவகாமி தப்பிக்கிறாள்.

இது நடந்து 12 வருடங்களுக்கு பிறகு, தன் தந்தை மறைத்து வைத்த இரகசிய மொழியான பைசாசியில் எழுதப்பட்ட புத்தகம் சிவகாமி கைகளில் கிடைக்கிறது. தன் தந்தை கொல்லப்பட்ட தினத்தில் இருந்தே இந்த நாட்டையும் அரச குடும்பத்தையும் பழி வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சிவகாமி அதை எப்படி நிகழ்த்த வேண்டும் என்பதில் வழி தெரியாமல் தவிக்கையில் அரசாங்கத்தின் அனாதை விடுதியில் சேர்க்கப்படுகிறாள். இது ஒரு பக்கம்.

#கட்டப்பா, இப்பெயரைக் கேட்டாலே சத்யராஜ் தான் மனதிற்குள் வருவார். தற்போது மெழுகு சிலை வேறு வைத்துள்ளார்கள். படத்தில் வருவது போல் கட்டப்பா அனாதை அல்ல. அவரின் தந்தை முத்தப்பா மன்னரின் பாதுகாவலனாக வருகிறார். கட்டப்பாவின் தம்பி சிவப்பா, இந்த அடிமை முறையையும் அரசாங்கத்தையும் எதிர்க்கும் புரட்சி சிந்தனையுடன் இருக்கிறான். என்ன நடந்தாலும் அரச குடும்பம் தன்னை எப்படி நடத்தினாலும் தான் ஒரு அடிமை என்பதிலும் அதுவே தர்மம் என்பதிலும் தெளிவாக இருக்கும் கட்டப்பா பாத்திரத்தை பார்க்கையில் கட்டப்பா பாகுபலியை கொல்வது சாதாரணமாகத்தான் படுகிறது. ஏனென்றால் அதை விட கொடுரமான விசயங்களையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டும் பங்கேற்றுக் கொண்டும் தன் கடமையை செவ்வனே செய்கிறார் இளைஞன் கட்டப்பா.

மிகவும் சிறியதாக இருந்தாலும் மகிழ்மதி சாம்ராஜ்யம் எப்படி இவ்வளவு வளமாக காணப்படுகிறது? அதன் இயற்கை வளம். இயற்கை வளம் என்றதும் முப்போகம் விளையும் விவசாய பூமியை நினைக்கக் கூடாது. தஞ்சையை மலடாக்கி ஹைட்ரோ கார்பன் எடுத்துக் கொண்டிருக்கிறோம், அதுவும் ஜன நாயக ஆட்சியில். மன்னராட்சியில் என்ன நடந்திருக்கும்? ஒரு அதிசய கல், அதன் பெயர் கௌரி கல். கௌரி மலையில் இருந்து கிடைப்பதால் அப்படி பெயர். அதன் விஷேசம் என்னவென்றால் எக்ஸ் மென் படத்தில் வரும் அடமெண்டியம் போல, அல்லது கேப்டன் அமெரிக்க வைத்திருக்கும் ஷீல்டில் உள்ள வைப்ரேனியம் போல. சிறந்த ஆயுதங்களை தயாரிக்க உதவும். ஆனால் இது எளிதில் கிடைக்காது. சுரங்கம் அமைத்து தோண்ட வேண்டும். தொழில் நுட்பம் வளராத காலத்தில் சுரங்கம் அமைத்தால் எத்தனை விபத்துகள் நேரும்? நேர்ந்தால் என்ன பிங்கலத்தேவன் சொல்வது போல் "பதறாதீர்கள், 100 அடி சிலை, 100 பேரைக் கூட காவு வாங்காதா?" என்றுதான் அரசாங்கம் சொல்லப் போகிறது.

ஆனால் நாளுக்கு நாள் விபத்தில் அடிமைகள் பலியாவதுடன் மலையின் இருப்பும் பயமுறுத்துகையில், சிறிய விட்டத்தில் சுரங்கம் அமைத்து குள்ளர்களின் மேற்பார்வையில் சிறுவர்களை வைத்து கௌரிகற்களை எடுக்க அரசு முயல்கிறது. இதற்கான சிறுவர்கள் எந்த வர்ணத்தில் இருந்து கிடைப்பார்கள்? யோசித்துக் கொள்ளுங்கள். ஆனால் அரசு செய்தாலும் இது யாருக்கும் தெரியாமல் நடக்கும். யாருக்கும் தெரியாது. மக்கள் கூட சிறுவர்கள் எதற்காக கடத்தப்படுகிறார்கள் என்பதை அறியாமல் இருப்பார்கள். அதை கண்டுபிடிக்க 70 வயது கிழவி ஆச்சி நாகம்மா தலைமையில் பெண்கள் புரட்சி படை ஒன்று முயன்று கொண்டிருக்கும்.

இன்னொரு பக்கம், மலையை சுரண்டினால் அங்கிருக்கும் பழங்குடிகள் எங்கு போவார்கள்? என்ன செய்வார்கள்? அங்கு ஒரு புரட்சி படை உருவாகிறது. அவர்களின் குறிக்கோளும் மன்னனின் மரணம் தான்.

சிவகாமியை பார்த்ததில் இருந்து அவளை காதலிக்கும் கோழை இளவரசன் மகாதேவன் ஒருபுறம், பெண்கள் பின்னால் நாக்கை தொங்கப்போட்டு அலையும் மூத்த இளவர்சன் பிஜ்ஜாலா மறுபுறம்..

கரடிவித்தை காட்டி பிழைக்கும் குடியை சேர்ந்தவராய் இருந்தாலும் தனது கடின உழைப்பின் மூலம் பிரதம மந்திரியாக உயர்ந்தாலும், தன் சாதியின் காரணமாக தன் உதவியாளனால் கூட அவமதிக்கப்படும் கந்த தாசன் ஒருபுறம், உயர்குடியில் பிறந்து நல்ல பதவியில் இருந்தும் ஊழல் செய்து பணம் சம்பாதிக்க நாட்டையே அடகு வைக்கும் பட்டாச்சார்யர் ஒருபுறம்...

கதையின் ஒரு இடத்தில் கந்த தாசனிடம் பட்டச்சார்யர் "எங்களுடன் சேர்ந்து விடு, உன்னை ஷத்ரிய குலத்தவனாக அறிவிக்கிறேன், அதிகம் ஒன்றுமில்லை சில பிராமனர்களுக்கு கொடை கொடுக்க வேண்டி இருக்கும் செலவு அவ்வளவுதான்" என்று சொல்லும் போது, சுப்ரமணியசுவாமி பிரதமர் நரேந்திர மோடியை பிராமனராக அறிவித்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.

பெண்களின் கற்பு விஷயத்தில் இரு கோணத்தில் அணுகுகிறார் எழுத்தாளர். ஒருபக்கம் கடற்கொள்ளையனுடன் தனித்தீவில் சிக்கிக் கொள்ளும் புரட்சிப்படையை சேர்ந்த அல்லி, தப்பிக்கும் காலம் வரும் வரை அவனுடன் உடலுறவு வைத்துக் கொள்வதையும் அதை வைத்தே அவனிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இரகசியத்தை கறப்பதையும் யதார்த்தமாக சொல்பவர் இன்னொரு இடத்தில் தன் கற்பை காப்பாற்றிக் கொள்ள தற்கொலை செய்யும் பெண்ணை பற்றியும் எழுதுகிறார். ஆனால் அதை முட்டாள்தனமாகத்தான் காட்டுகிறார். எப்படி என்றால் அல்லி செய்ததை மட்டும் புத்திசாலித்தானமாக சொல்வதன் மூலம். வார்த்தைக்கு வார்த்தை வேசி, பரத்தை என்று ஏசப்பட்டாலும் அதை கருத்தில் கொள்ளாமல் ஆண்கள் பெண்களிடம் உடலைத் தாண்டி எதையும் எதிர்பார்ப்பதில்லை என்பதையே தூண்டிலாக கொண்டு தனது இலட்சியத்தை அடைகிறாள் அல்லி.

தமிழ் சரித்திர எழுத்தாளர்களைப் போல் எந்த கப்சாவும் விடாமல் வர்ணாசிரமத்தில் ஒரு குலம் மட்டும் எப்படி ஏனைய குலத்தின் சுமையை தாங்கியது என்றும் அதற்கும் உயர்குடியினர் மட்டுமில்லாமல் அதை தர்மம் என்று நம்பி கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அடிமையினரும் தான் காரணம் என்பதை தெளிவாக சொல்கிறார். மன்னராட்சி வளமானதுதான். ஆனால அது சிலருக்கு மட்டும் தான்.

சொல்லப்போனால் இக்கதையை படித்து விட்டு, இதில் வரும் அரசாங்கத்துடன் நமது அரசாங்கத்தினை ஒப்பிட்டு விட்டால் இருக்கும் தேச பக்தியும் சுத்தமாக வடிந்து விடும் என்பதே உண்மை.

"எந்த கதையை வேண்டுமானாலும் மக்களிடம் பரப்பலாம், அதில் கொஞ்சமாக மதத்தை கலந்தால் போதும்" என்று எழுதும் துணிச்சலெல்லாம் பாராட்டப்பட வேண்டியது.

எழுத்து நடை தமிழ் சரித்திர கதைகள் போல் சத்தியமாக இருக்காது. முதல் 100 பக்கத்தினை கடப்பது பெரும் சிரமமாக இருக்கும். அதுவும் ஏகப்பட்ட ஆபாசங்களும் வக்கிரங்களும் நிறைந்திருக்கும். பொன்னியின் செல்வன் படித்துவிட்டு ஆயிரத்தில் ஒருவனில் வரும் சோழர்களை பார்ப்பது எந்த உணர்வை தருமோ அதேதான் பாகுபலி மகிழ்மதிக்கும் சிவகாமி பர்வம் மகிழ்மதிக்கும் உள்ள வித்தியாசமாகும்.

இதில் கதை முழுவதுமாக முடியவில்லை. இரண்டாம் பாகத்திற்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

-கதிர் ராத்

(வாசிப்போம் நேசிப்போம் முகனூல் குழுவிலிருந்து)

AD
AD

Related Articles