வெளியிடப்பட்ட நேரம்: 24-Mar-2018 , 08:33 AM

கடைசி தொடர்பு: 24-Mar-2018 , 08:35 AM

தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனை - புத்தக விமர்சனம்

FB_IMG_1521860078854

முதலில் ..... பூர்வீகம் ஈரோடாக இருந்தும் பெரியாரைத் தேடி வாசிக்கவில்லையே என வெட்கப்படுகின்றேன். மற்றொரு புறம் அவரது சிந்தனைகளின் பாதையில் தான் வாழ்கிறேன் என்று ஆய்ந்து ஒரு முடிவுக்கு வந்து சமாதானமாகிறேன். கடந்த இரு வருடம் முன்பு ஈரோட்டில் அவர் வாழ்ந்த வீட்டிற்குச் சென்று ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக இருந்து அவரது நினைவுப் படங்கள் , நிகழ்வுகளைப் பார்த்து, படித்து பெருமையுடன் திரும்பினேன்.

இந்தப் புத்தகத்தின் விலை ரூ 15 மட்டுமே. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் வெளியீடு. இதிலுள்ள பெரியார் பல்வேறு கூட்டங்களில் சொன்ன செய்திகளைத் தொகுத்து வழங்கியிருப்பது கி.வீரமணி அவர்கள் . பக்கங்கள் 30 மட் டுமே.

இந்தப் புத்தகம் 6 தலைப்புகளை உள்ளடக்கியுள்ளதாக இருக்கிறது .
# காதல்
# பெண்கள் அலங்கார பொம்மைகளா ?
# பெண்களும் சர்க்கார் உத்தியோகமும்
# விபசாரம்
# விதவா விவாகம்
# பெண்ணே, பெண்ணே, பெரியார் பேசுகிறார் கேள் !

முதல் ஐந்து தலைப்புகளுமே இந்த சமூகம் பெண்களை குற்றவாளியாக சித்தரிக்கும் மறைபொருளை சாடுகிறார். சுதந்திரக் காதலில் ஆண், பெண் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளாமல் ஜாதகம் பார்த்து முடிவு செய்தலும் எங்ஙனம் சரியாகும் ? எனக் கேட்கும் பெரியார் பெண்ணைப் படிக்க வைக்காமலும் வீட்டிற்குள் பூட்டி வைத்தால் வெளி உலக அனுபவம் எப்படி வரும்? தனக்குத் தேவையான துணைவனைத் தெரிந்தெடுத்துக் கொள்ள முடியுமா? என்ற வினாக்களை முன் வைக்கிறார்.

அதுவும் 20 வயது முடிந்த பிறகு நன்கு பழகிப் புரிந்து கொள்பவரின் காதலே நன்மையில் முடியும் என்று 1944 இல் குடியரசில் கூறியிருக்கிறார். அதோடு , கல்வி - அறிவு -சுதந்திரம் ஆகியவை அடியோடு அற்ற , அடிமையாகவும் இழிவாகவும் நடத்தப்படும் பெண் உருவங்களால் இங்கு வளர்க்கப்படுகிறார்கள் என 1935 இல் குறிப்பிடுகிறார். எவ்வளவு உண்மை !!!!!!!!!!!

பெண்கள் அலங்கார பொம்மைகளா? இது நல்ல கேள்வி. ஆண் பெண் மிக அவசியமானப் புரிதலை தந்துள்ள பெரியார் இந்த இடத்தில் என்னோடு முரண்படுகிறார். அலங்காரம் ஏன் ? மக்கள் கவனத்தை ஈர்க்கும்படியான நகை , துணி , மணி , ஆபரணம் ஏன் ? என்று யாராவது சிந்திக்கிறார்களா எனக் கூறி, பெண்கள் அஃறிணைப் பொருள் என்பதற்கு என்ன ஆதாரம் வேண்டும் என்கிறார். இது சரியல்லவே, இன்றெல்லாம் ஆண்களும் அலங்காரம் செய்து கொள்கின்றனர். அதுவல்ல பிரச்சனை. அஃறிணைப் பொருள் என ஒப்பிட்டிருப்பதை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.

ஆனால் இறுதியில் அதிக ஆடம்பரம் இல்லாத சாதரண குறைந்த தன்மையில் அலங்காரம் அவசியம் எனவும் ஒப்புக் கொள்கிறார்.

ஜவுளிக்கடைகளில் விளம்பரத்திற்கு வைத்திருக்கும் அழகிய பொம்மை உருவங்கள் போலல்லாமல் நாட்டுக்கு, மனித சமுதாயத்திற்குப் பெண் உலகத்திற்கு இவர்கள் என்ன மாதிரியில் தொண்டாற்ற அல்லது தரங்களாவது ஒரு புகழோ கீர்த்தியோ பெறத்தக்கபடி வைத்தார்களா ? என்று கேட்கிறார். ஆனால் இன்று நிறைய மாற்றங்கள் பெண்களால் இந்த சமூகத்தில் ஏற்பட்டுள்ளது கண்கூடு என அனைவரும் அறிவோம்.

பெண்களின் படிப்பு பற்றியும் , உலக நாடுகள் போல் இங்கும் பெண்களின் பங்கை நாட்டின் வளர்ச்சிக்கு மாற்ற வேண்டும் என பலவாறு சிந்தனைகளைப் பதிகிறார்.

அடுத்து ... பெண்களும் சர்க்கார் உத்தியோகமும் என்ற தலைப்பில், முதன் முதலில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சர்க்கார் உத்தியோகங்கள் எதிலும் இடம் கிடைக்க வேண்டும் என்பது பற்றி
சென்னை சட்டசபையில் 1930 இல் விவாதம் செய்திருப்பதைக் குறிப்பிட்டு இருக்கிறார். பெண்கள் சமுதாயத்தில் தலைகீழானப் புரட்சி ஏற்பட்டால் மட்டுமே பயன் ஏற்படும் எனக் கூறும் பெரியார் , முதலில் அடுப்பங்கரையை விட்டு, பெண்களை வெளியேற்ற வேண்டும். அடுத்து நகைப் பேயை அவர்களிடமிருந்து  விரட்ட வேண்டும். அடுத்து இப்போதுள்ள திருமணச் சிக்கல்களைத் துண்டு துண்டாக நறுக்கிட வேண்டும் என்கிறார். எவ்வளவு அரிய உண்மைகளை அன்றே சொல்லிவிட்டார் பாருங்களேன்.

மேலும் கல்வி, சொத்துரிமை இரண்டும் தடையில்லாமல் செய்தலே ஆட்சியாளர்களின் கடமை என்கிறார். அதே போல் மற்ற தலைப்புகளிலும் பெண்களுக்காக வார்த்தைக்கு வார்த்தை குரல் கொடுத்து நறுக்கு தெரிக்கும் உண்மைகள் பல உண்டு.
இது ஏறக்குறைய 80-90 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டிருக்கின்றது எனில் பெண்களின் அன்றைய நிலைக்கும் ஒரு நூற்றாண்டில் பெண்களின் நிலை படிப்பறிவிலும் உலக ஞானத்திலும் எவ்வாறு மாற்றம் பெற்றிருக்கின்றது என்பதையும் நம்மால் உணர முடிகிறது. ஆனாலும் இன்னும் முற்றிலும் இந்த நிலை மாறவில்லை என்பதே உண்மை .
சிந்தனைகளில் 90 ஆண்டுகள் முன்னோக்கிப் பார்த்தால் எவ்வளவு கிடை மட்ட அளவில் பெண்களுக்கான நிலை இழிநிலையாக இருந்திருக்கிறது என எண்ண வைக்கின்றது. இன்னாட்களில் கல்வி , சமூகப் பொருளாதார நிலைகளில் பெண்கள் பலவாறு முன்னேற்றம் கண்டிருந்தாலும் கூட , உண்மையான மாற்றங்களும் பெரியார் எதிர் பார்த்த மன எழுச்சி எல்லாப் பெண்களுக்கும் வந்திருக்கின்றதா என ஆய்ந்தால் இல்லை என்பதே விடையாகும்.

உரிமையைக் கோரும் பெண் கடமையையும் நினைவில் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து. ஒரு ஆணை எதிர்ப்பதாகவோ அல்லது குடும்பத்தில் போட்டி போட மட்டும் பெண்களுக்கான உரிமைகள் இருக்கக் கூடாது. களம் இறங்கி துணிந்து சமூக மாற்றத்திற்கு வலு சேர்க்கவும் தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனை அமைய வேண்டுமென எனது கருத்துகளைப் பகிர வழிவகுத்துள்ளது இப்புத்தகம் .
பெண்களும் ஆண்களும் படிக்க வேண்டிய ஒரு விழிப்புணர்வு நூல் இது.

இந்தப் புத்தகத்தைப் பரிசாக வழங்கிய இந்த வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழு நண்பர்கள் பரப்புரை செய்வதாகவே எண்ணுகிறேன் , வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழர்களே...

அன்பும் மகிழ்வும்
உமா மகேஸ்வரி

 

(வாசிப்போம் நேசிப்போம் முகனூல் குழுவிலிருந்து)

Related Articles