வெளியிடப்பட்ட நேரம்: 30-Apr-2018 , 07:00 AM

கடைசி தொடர்பு: 03-May-2018 , 09:07 PM

ஊறுகாய்

mango-pickle

முதல் பாகம்:

கூட்ட நெரிசலில் சிக்கி நூறு ரூபாயைக் கொடுத்து ஒரு பியர் பாட்டில் வாங்கி வருவதற்குள் நான் முழுவதுமாய் நனைந்திருப்பேன். பியர் பாட்டிலின் குளுமையில் கை விறைக்கத் துவங்கியது.

பாருக்குள் நுழைந்தேன். அங்கு சப்ளையர்கள் யாரும் இல்லை. கடாயில் எதையோ வறுத்துக்கொண்டிருந்த வட இந்திய சிறுவனிடம் ‘முட்டை இருக்கா” என்று கேட்டேன். அவனும் தலையாட்டினான்.

நான் எப்பொழுதாவது குடிப்பதுண்டு. அதற்கான அற்ப காரணங்களை நானே தேடிக் கொள்வேன். இந்த முறைக்கான காரணம் நான் உதவி இயக்குநராக வேலை பார்த்த முதல் படம் இன்று ரிலீஸ். படக்குழுவில் ஒருவர் கண்ணில் பட்டால் கூட என்னை படம் பார்க்க இழுத்துச் சென்று விடுவார்கள். படத்திற்கு போவதற்கு எனக்கு கொஞ்சம் கூட துணிவு இல்லை. ஆதலால் இங்கு வந்துவிட்டேன்.

இந்த பட இயக்குனர் ஜப்பானிய பாப் பாடகியின் பெயரை தன் பெயராக யாரோ ஜோசியக்காரன் சொன்னான் என்பதற்காக மாற்றிக் கொண்டவர். இயக்குனரை முதன் முதலாக பார்க்கச் சென்ற பொழுது ‘தம்பி, ”இது தமிழ் சினிமாவையே புரட்டிப் போடப் போற கதை. நீ யாரிடமும் வெளிய நம்ம ஸ்கிரிப்ட்  பத்தி பேசக்கூடாது. வந்தோமா, வேலைய பாத்தோமான்னு இருக்கனும். இந்தப் படம் ரிலீஸ் ஆன பிறகு என்னோட அஸிஸ்டென்னு நீ சொன்னாலே போதும். ஆயிரம் புரொடியூசர் ஒன்ன தேடி வருவாங்க” என்று ஆரம்பித்தவர், திடீரென தன் முகத்தை இறுக்கமாக்கியபடி கைகள் இரண்டையும் விரித்து கதையை விளக்க துவக்கினார்.

‘கிராமத்துல இருந்து வர்ற ஹீரோவுக்கும், சென்னையில இருக்கிற பணக்கார வீட்டு ஹீரோயினுக்கும் லவ்வு. இது ஹீரோயினோட அப்பாவுக்கு புடிக்கல. ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓட, ஹீரோயினோட அப்பா தேட, நடவுல கொஞ்சம் பாட ஆடனு...” என அவர் முழுக்கதையையும் சொல்லி முடிக்கும் முன்னரே படப்பிடிப்பு பாதி ஓடியிருந்தது. என்னுடன் வேலை பார்த்த சக உதவி இயக்குநர்கள் இருவரும், இணை இயக்குனரும், ஹீரோயினின் அப்பாவாக நடித்தவருடன் ஹீரோயினும் ஓடியிருந்தனர்.

இதை விட கொடுமை பிரஸ் மீட்டிங்கில் எங்கள் இயக்குனர் இப்படம் நூறு நாளைத் தாண்டி ஓடும் என்றது தான். ஏனெனில் இது தமிழ் சினிமாவை புரட்டி போடும் படம் அல்லவா.

‘புரட்டி போடவா, இல்ல ஆப்பாயிலா போடவா?”, என்று கேட்டான். வட இந்திய சிறுவன். அவனது வாயிலுள்ள மாவா தமிழையும், ஆங்கிலத்தையும் சேர்த்தே குழறியது. என் மேற்சட்டை கைபேசி வைப்ரேட்டரால் அதிர்ந்தது. எவனாவது படக்குழுவில் இருந்து அழைக்கிறானோ என்ற ஐயத்தோடு கைபேசியை எடுத்துப் பார்த்தேன். கைபேசித் திரையில் ‘டைரக்டர் சண்முகம்” என்று நான் பதிவு செய்திருந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

இவர் நான் மேல் சொன்ன புரட்டி போடும் இயக்குனர் இல்லை. அவரைப் போல் புரட்டிப் போட தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு இயக்குனர். இவர் அழைப்பதை பார்த்தால் யாராவது ஒரு தயாரிப்பாளர் கிடைத்திருக்க வேண்டும். கடைசி ரிங்கில் கட் ஆவதற்கு முன் அட்டென்ட் செய்தேன். ஆம், நான் நினைத்தது தான் யாரோ ஒரு தயாரிப்பாளரிடம் பேசி தன் கதையை ஓ.கே. செய்துவிட்டாராம். காமெடி படமாம். லாஜிக்கெல்லாம் கிடையவே கிடையாதாம். ஏனெனில், அது தான் இப்பொழுது டிரெண்டாம்.

‘ஒரு ஐயிட்டம் ஷாங்டா, அந்த ஷாங்ல நாம குடிய பத்தி மெசேஜ் சொல்ல போறோம். நீ தான் கூட இருந்து படத்த முடிச்சு தரனும் கண்டிப்பா. இது தான் இந்த வருசத்தோட மெகா ஹிட்டு. ஒரு ஹிட்டான படத்துல வேல பாத்தா ஒனக்கும் தானே நல்ல பேரு”, என்று இருவரும் தமிழ் சினிமாவை புரட்டி போட துவங்க, புரட்டி போட்டு கருகி எடுத்த புல்பாயிலை அசை போடத் துவங்கினேன். கடைசியாக இயக்குனர் சண்முகம் படத்தின் கதையையும் ஒருவாராக சொல்லி முடித்து படத்தலைப்பையும் கூறினார்.

அத்தலைப்பைக் கேட்டதும், நான் ஒரு நொடி இனம் புரியாதபடி அதிர்ந்தேன். ஒருவேளை நான் மது அருந்தியிருந்ததால் அப்படி நிகழ்ந்திருக்கலாம். இருந்தும், அத்தலைப்பு என் மனதை அழுத்தியது. அத்தலைப்பு ‘ஊறுகாய்”.

ஆம், நான் இப்பொழுது சொல்லப் போவது ஊறுகாயின் கதையை தான். இயக்குனர் சண்முகம் சொன்ன ஊறுகாய் படத்தின் கதையையல்ல. எங்கள் ஊரில் வாழ்ந்த ஊறுகாய் என்பவனின் கதையை.

இதை சொல்ல ஏன் இவ்வளவு பெரிய முன்னுரை என்று என்னை தவறாக நினைத்து படிப்பதை நிறுத்த வேண்டாம். இதில் நிறைய ட்விஸ்ட் வைத்திருக்கிறேன். இது த்ரில்லர் கதையைப் போன்றது. இந்த கதையின் க்ளைமாக்ஸ் இதே பாரில் தான் நடக்கும். லாஜிக் எந்த இடத்திலும் மிஸ் ஆகாது. நீங்கள் மேலும் தைரியமாகப் படிக்கலாம்.

எங்கள் ஊரில் நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில் சிறுவர்கள் அதிகம். எங்கள் ஊர் பெயர் வேண்டாம். அது எனக்கு சொந்த ஊரும் இல்லை. இருந்தும், அந்த ஊரிலுள்ள எவராவது இந்த சிறுகதையைப் படித்து நான் பாரில் மது அருந்திக் கொண்டிருப்பதை என் வீட்டில் சொல்லக்கூடும். கதைக்கு வருவோம். ஊரில் சிறுவர்கள் அதிகமென்பதால் விளையாட்டும் அதிகம். விளையாட்டாக சிறுவர்கள் தங்களுக்குள் வைத்துக் கொள்ளும் பட்டப் பெயர்களும் அதிகம். பீட, கரும்பீட, சிட்ட, மாவு, சோடா என்று பல பெயர்கள் மேற்சொன்னவற்றில் ஒன்று தான் என் பட்டப்பெயரும்.

இப்படி பல பெயர்களில் என்னை ஈர்த்தது ஒருவனின் ‘ஊறுகாய்” என்ற பட்டப்பெயர். அவன் நிஜப்பெயர் என்னவென்று எனக்குத்தெரியாது. நானும் அவனிடம் கேட்டதில்லை. சிறுவர்களாகிய எங்களுக்குள் பட்டப்பெயரைச் சொல்லி அழைக்கும் பொழுது கோபம் வரும். பொதுவாக கிண்டல் செய்யும் பொழுது மட்டுமே பட்டப்பெயர் சொல்லி அழைப்போம். மற்ற நேரங்களில் நிஜப்பெயரை சொல்லி அழைப்பதுதான் வழக்கம்.

ஆனால் அவனை எப்பொழுதும் ‘ஊறுகாய்” என்றே அழைப்போம். அவன் அதற்காக கவலைப்பட்டதே இல்லை. அவனுக்கு யார் அப்பெயரை வைத்ததென்றும் தெரியவில்லை.

ஒருமுறை நண்பன் மாவு ‘அவன் ஒரு ஊறுகா பைத்தியம்டா. எப்ப பார்த்தாலும் ஊறுகாய நக்கிகிட்டு திரியுறான். அதேன் அவன் பேரு ஊறுகா” என்று அவன் பெயருக்கான காரணத்தை கூறினான்.

ஊறுகாய் என்னை விட சில வயது மூத்தவன். ஊறுகாய்க்கும் இது சொந்த ஊரில்லை. அவனது பெற்றோர் ஏதோ ஒரு ஊரில் பழ வியாபாரம் பார்ப்பதாகக் கூறினான். இங்கு அவனுடைய மாமா வீட்டில் தங்கி, அவருடைய கூழ் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் வியாபாரமும், மாலையில் எங்களுடன் விளையாடிக் கொண்டுமிருப்பான்.

அவன் மாமா கொடுக்கும் காசுகளை அவன் கால்சட்டைப் பையிலும், அரையாண கயிற்றிலும் சுருட்டி வைத்திருப்பான். அவன் எங்களிடம் பள்ளிக்கு போவது வீண் வேலையென்றும், கூழ் கடை வைத்து வியாபாரம் செய்வது தான் சிறந்ததெனவும் கூறினான். என்னிடம் இரண்டாம் வகுப்பு வரை படித்ததாகவும், வேறு சிலரிடம் வேறுவிதமாகவும், சிலரிடம் தான் பள்ளிக்கூடம் போனதேயில்லை என்றும் கூறி வந்தான்.

சிறுவர்களுக்குள் சண்டை வந்து தனித்தனி அணியாக சில காலம் திரிவதுண்டு. ஆனால் ஊறுகாய் யாருடனும் சண்டையிடுவதில்லை. அவன் அனைவருடனும் நன்றாக பழகி வந்தான். அவனிடம் எப்பொழுதும் காசு இருப்பதால், நாங்களும் அவனோடு நன்றாக பழகி வந்தோம்.

எப்பொழுதாவது அவன் என்னுடன் விளையாட மீன்பிடிக்க, பட்டம் விட வருவதுண்டு. அப்பொழுது அவன் பேசுவதில் ஊறுகாய் பற்றிய விஷயங்களே அதிகமாக இருக்கும். அவன் ஊறுகாயை விட சிறந்தது எதுவும் இல்லையென்றும், வீட்டில் கஞ்சிக்கு வைத்திருந்த ஊறுகாய் பாட்டில் முழுவதையும் திருடித் தின்றதால் தான் அவன் பெற்றோர் அவனை கோபப்பட்டு இங்கே அனுப்பியிருக்கலாமென்றும், கூழ் கடையில் எப்பொழுதும் ஊறுகாய் இருக்குமென்பதால் தான் அவன் இங்கு வேலை பார்ப்பதாகவும் கூறினான்.

எனக்கு பலமுறை விதவிதமான ஊறுகாய் பாக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்து என்னையும் ஊறுகாய் பைத்தியமாக்கினான். என் பெயரும் ஊறுகாய் என்று மாறுவதற்குள், ஊறுகாய் தன் மாமாவிடம் சண்டை போட்டு விட்டு எங்கோயோ ஓடிவிட்டான்.

அவன் மாமா அவனை ஊர் முழுவதும் தேடினார். அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  நாங்கள் விளையாடும் திடலில் வெகுநேரம் அமர்ந்தபடி அவனுக்காக காத்திருந்தார். அவர் மிகவும் கவலையாக காணப்பட்டார். அப்பொழுது அங்கு ஓடிவந்த அவர் மனைவி வியாபாரத்திற்காக வைத்திருந்த ஊறுகாயை காணவில்லையென்று கூறியபோது அவர் அழத்தொங்கினார்.

பிறகு நான் அவனைப் பார்க்கவும் இல்லை. ஊறுகாய் அதிகமாக சாப்பிடுவதுமில்லை. சென்னைக்கு வந்து, உதவி இயக்குனர் வாய்ப்பு தேடுகையில் ஊரிலிருந்து வந்த நண்பன் மாவு.

‘ஊறுகாய நான் திருப்பூர்ல பார்த்தேன் மாப்ள. லாரி ஓட்டிட்டு இருந்திருக்கான். அங்க யாரோ ஒருத்திய லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டானாம். அவ எவன் கூடவோ ஓடி போய்ட்டா பயபுள்ள. இப்ப வேலைக்கும் போவாம தெனமும் குடிச்சிட்டு ஊர் ஊரா திரியுது, குடிகார தாயோலி”, என்று பல வருடங்களுக்கு பிறகு ஊறுகாய் பற்றிய செய்தியைக் கூறினான்.

அன்று இரவு மாவு ஊருக்கு கிளம்பும்பொழுது, ‘மாப்ள ஏதாவது அமைப்பிருக்கா? சரக்கு கிரக்கு கவனிச்சு விடலாம்ல” என்றான்.

இருவரும் நன்றாக குடித்துவிட்டு, அவனை பேருந்தில் ஏற்றுகையில் தான் சொன்னான் ‘அவன் கல்யாணம் பண்ணுன புள்ள திருப்பூர்ல ஏதோ ஊறுகா கம்பெனியில வேல பாத்தவடா”, என்று சொல்லிவிட்டு அவர்கள் இருவரையும் அசிங்கமாக திட்டியப் படி பேருந்தில் ஏறிச் சென்றான். பிறகு ஊறுகாயைப் பற்றிய தகவல்கள் கூட இல்லை.

நானும் அலைந்து திரிந்து உதவி இயக்குநராக சில படங்களில் பணியாற்றி, ஊறுகாய் என்ற படத்திலும் இப்பொழுது உதவி இயக்குநராக கமிட்டாகி விட்டேன். நம்ம இயக்குனர் சண்முகம் ‘ஊறுகாய்” என்கிற டைட்டிலை யாரோ ஆங்கிலத்தில் ‘பிக்கிள்ஸ்” என பதிவு பண்ணிவிட்டதால் வேற டைட்டில் தேடுவதற்காக இரண்டு மாதமும், புரொடியூசர் சரியில்லையென்று நான்கு மாதமும், இன்வெஸ்ட்மெண்ட் ஹீரோவை வைத்து படம் பண்ண போவதாகவும், மொத்தமாக இரண்டு வருடங்களை ஓட்டிவிட்டார். இப்பொழுது கடைசியாக போனில் பேசிய பொழுது பேய் படம் பண்ண போவதாக கூறினார். ஏனென்றால் இப்பொழுது இது தான் ட்ரெண்டாம்.

தமிழ் சினிமாவ புரட்டி போடுவதாய் சொன்ன, ஜப்பான் பாப் பாடகி பெயரை வைத்திருந்த இயக்குனரின், நான் வேலைப் பார்த்த முதல் படமும், அடுத்த அவர் இயக்கிய இரண்டாவது படமும் ஐந்து நாட்கள் கூட ஓடாததால், தன் பெயரை அமெரிக்க அரசியல் தலைவரின் பெயராக மாற்றிவிட்டதாக சாலிகிராமம் காவேரி கார்னரில் எதேச்சையாக அவரைப் பார்த்த பொழுது கூறினார்.

‘இங்க இருக்க எவனுக்கும் என் படம் பாக்குற அளவுக்கு நாலேட்ஜ் இல்லடா. ஒரு கத பாலிவுட்ல பண்ண போறேன். அது இந்தியாவையே புரட்டிப் போடும். வர்றியா”, என்று அவர் கேட்டபொழுது, சிரித்தப் படியே நான் அங்கிருந்து நகர்ந்தேன். இனி இவரை பார்க்கவே கூடாதென்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில் இவர் அடுத்து ஹாலிவுட்டை புரட்டி போட கிளம்புவார் என்று தெரியும்.

நானும் திரைப்படம் இயக்க முடிவு செய்து, கதை எழுதி தயாரிப்பாளர் தேடத் துவங்கினேன். கதையே கேக்காமல் கதாநாயகிகள் பற்றிக் கேட்கும் தயாரிப்பாளர்கள், ‘ஹீரோ குடிக்காரன்னா, ஒயின் ஷாப்ல ஒரு கானா சாங் வச்சுடலாம்” என ஐடியாக்களை வாரி வழங்கும் தயாரிப்பாளர்கள் என பல தயாரிப்பாளர்களைப் பார்த்த பின் கடைசியாக ஒரு தயாரிப்பாளரைப் பிடித்து இந்த கதையை உங்களுக்கு கூறிய படியே அவரிடமும் முழுதாக கூறி முடித்தேன்.

 

‘ஏன் கதைக்குள்ள இவ்வளவு கதை? எது மெய் கதை?”

‘எதுக்கு அந்த ரெண்டு டைரக்ட்டரோட கதை?”

‘ஊறுகாய்னு ஏன் டைட்டில் வச்ச?”

‘ஊறுகாய் தான் மெயின் கேரக்ட்ரா? ஊறுகாய் என்ன ஆனான்?

‘இந்த கத மூலமா நீ என்ன சொல்ல வர்ற”?

‘ஹீரோயினே இல்லாத கதையா?”

என்று அவரும் உங்களைப் போலவே குழம்பிய படி இக்கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டார்.

என்னால் இக்கதையை மாற்ற இயலாது. இது தான் நான் இயக்கும் படத்தின் கதையென்பதில் தீர்மானமாக இருந்தேன். பிறகு, தயாரிப்பாளரும் கதையை மாற்றுவது பற்றி எதுவும் பேசவில்லை.

‘சரி இருக்கட்டும். நான் இந்த படத்த புரோடியூஸ் பண்றேன். க்ளைமாக்ஸ் முடிவு பண்ணிட்டு வா. க்ளைமாக்ஸ் இல்லாம எப்படி படம் பண்ண முடியும். முழுசா முடிச்சிட்டு வா” என்று அனுப்பி வைத்தார்.

அவர், கேட்பதிலும் நியாயம் உள்ளது. ஏன் நீங்களே இதை தான் நினைத்திருப்பீர்கள். ‘ஊறுகாய்” என்று கதைக்கு தலைப்பு வைத்துவிட்டு ஊறுகாயைப் பற்றிய க்ளைமாக்ஸாவது வைத்து தானே ஆக வேண்டும்.

க்ளைமேக்ஸ் பற்றி யோசிக்க நேராக மதுபானக்கடை நோக்கி விரைந்தேன்.

இப்பொழுது காரணங்களே இல்லாமல் தினமும் குடிக்க பழகியிருந்தேன். குடியும் என்னை இருமடங்காக குடித்துக் கொண்டிருந்தது. இரண்டே வருடங்களில் நூறு ரூபாய் விற்ற பியர் விலையும் நூற்றி முப்பதாய் உயர்ந்திருந்தது. ஆனால் என் சம்பளம்? உதவி இயக்குனராக வேலை பார்த்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

கிளைமாக்ஸை எப்படி முடிப்பது என ஆராய்ந்த படி பியர் பாட்டிலை முழுவதுமாக ஒரே மடக்கில் குடித்து முடித்தப்பொழுது எனக்குள் ஒரு புது கேள்வியொன்று துவங்கியது.

இது நல்ல கதை தானா?

இல்லை வேறெதுவுமா?

எதுவாய் இருந்தாலும் சரி, நான் க்ளைமாக்ஸை தீர்மானிப்பது என்று முடிவு செய்து இன்னொரு பியரையும் ஆடர் செய்தேன்.

இங்கே கட் செய்து, நான் முதலில் விவரித்த சப்ளையர் இல்லாத பார் நோக்கி ”ப்ளாஸ்பேக்கில்” செல்வோம். ஏனென்றால் அந்த பாரில் தானே க்ளைமாக்ஸ் வரப்போவதாக நான் உங்களுக்கு முன்னரே வாக்கு கொடுத்திருக்கிறேன்.

அன்றைய தினம் இயக்குனர் சண்முகம் பேசி முடித்ததும் மீதமிருந்த பியரையும், கருகிய புல் பாயிலையும் சாப்பிடத் துவங்கினேன். அப்பொழுது அங்கே, தலையில் கட்டு போட்ட படி ஒருவன் பாரினுள் வந்தான். அவன் சட்டையில் இரத்த திட்டுகள் தெரிந்தன. அவன் முகம் வெளிறிப் போயிருந்தது. அவன் பின்னால் வெள்ளை சட்டை, வேட்டி கட்டி ஓங்கி வளர்ந்த உருவம் ஒன்று வந்தது. அவர் தான் பாரின் முதலாளி என்பதை பார்த்ததுமே அறிந்தேன்.

ஏனென்றால், முதலாளித்துவக் கொள்கைப்படி தலையில் கட்டு போட்டவனையும், வட இந்திய சிறுவனையும் அசிங்கமாக திட்டிக்கொண்டே அவர்களை வேலை பார்க்கும்படி சொல்லிவிட்டு வெளியே சென்றான். வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்த முதலாளி தலையில் கட்டு போட்டவன், என் மேசையருகே குவாட்டர் பாட்டிலுடன் வந்தமர்ந்த புதிய வாடிக்கையாளரை நோக்கி வந்தான்.

புதிய வாடிக்கையாளன் ‘என்ன சைடிஸ் இருக்கு?” என்று கேட்டு முடிப்பதற்குள்ளாகவே “ஊறுகா மட்டும் இல்ல” என, தலையில் கட்டுப்போட்டவன் ஒருவாறு கோபமாக சொன்னான். வாடிக்கையாளன் ஏதும் புரியாமல் அவனை ஏற இறங்க பார்த்தான். வட இந்திய சிறுவன் ஏதோ புரிந்தது போல சிரித்தான்.

அந்த நேரம் பாரின் முதலாளி, இரண்டு போலீஸ்காரர்களோடு தலையில் கட்டுப்போட்டவனை நோக்கி சுட்டிக் காட்டியபடி உள்ளே நுழைந்தான். வாங்கிடாக்கியைக் கையில் பிடித்தபடி நின்றிருந்த எஸ்.ஐ. அவனை அருகில் அழைத்து என்ன நடந்தது என்பதை விசாரித்;தான்.

“சார், நான் இந்த பார்ல மூனு வருசமா வேல பாக்குறேன். வெளில இருந்து சைடிஸ் வாங்கிட்டு வந்து உள்ளே சாப்பிடக்கூடாது. ஒருத்தன் சைடிஸ் ஏதும் இங்க வாங்காம, வெளியே இருந்து கொண்டு வந்த ஊறுகாய வச்சி சரக்கடிச்சுட்டு இருந்தான். இதை கேட்டதுக்கு, ஊறுகா இல்லன்னா உலகமே இல்லன்னு சொல்லிட்டு, பாட்டில எடுத்து என் தலையில அடிச்சிட்டு ஓடிட்டான் சார்”, என்று பாட்டில் உடைந்திருந்த திசையை காட்டினான்.

உடைந்திருந்த பீங்கான் சில்லுகளுக்கிடையே ஊறுகாய் கவர் ஒன்று இருந்தது. அதைப் பார்த்தப்படியே, அன்று நான் அங்கிருந்து வெளியேறினேன்.

க்ளைமாக்ஸ் பற்றி எதுவும் யோசிக்காமலே இன்று இரண்டாவது பியரையும் குடித்து முடித்திருந்தேன்.

ஏனெனில், நான் இக்கதையை எழுதிக்கொண்டிருக்கையில், ஆம் எனக்கு இது கதைதான். நீங்கள் இதை படித்துக் கொண்டிருக்கும் பொழுதும், படித்த பிறகும், ஊறுகாய் சாப்பிடும் நேரத்திலும் என்றாவது இந்த ‘ஊறுகாய்” பற்றி நினைக்கையில் க்ளைமாக்ஸைத் தாண்டி அவன் கதையும்

என் கதையும் முடிவேயில்லாமல் தொடரும் ...

 

இரண்டாம் பாகம் :

தொடரும். என்று முடித்து, க்ளைமாக்ஸை இரண்டாம் பாகத்தில் சொல்லலாமென்று, தயாரிப்பாளரிடம் பேசி அவரை ஓ.கே. சொல்ல வைத்து முதல் ஊறுகாய் கதையின் முதல் பாகத்தை இயக்க அட்வான்ஸ{ம் வாங்கிவிட்டேன்.

வாங்கிய அட்வான்ஸை நான் குடித்தே செலவு செய்ய இதையறிந்த தயாரிப்பாளரோ அடித்தே என்னை படம் இயக்க வைத்தார். இரண்டு குத்து பாடல்களோடும், இரண்டு வைன் ஷாப் கானா பாடல்களோடும்.

என் படத்தில் இணை இயக்குநராக பணியாற்ற வந்த இயக்குனர் சண்முகம், அந்த வைன் ஷாப் பாடல்களில் ஏதாவது சமூகத்திற்கு மெசேஜ் சொல்லலாமென்று தயாரிப்பாளரிடம் கூற, அவர் சண்முகத்தை மசாஜ் செய்து அனுப்பினார். பிறகு அவர் சினிமாவே வேண்டாமென சொல்லிவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று விட்டார்.

பின்னொரு நாள் சண்முகம் என்னிடம் மொபைலில் மலேசியாவிலிருந்து பேசியபொழுது, அங்கு ஏதோ மசாஜ் சென்டரில் வேலைக்கு சேர்ந்திருப்பதாகக் கூறினார்.

இந்த படத்திற்கு இரண்டாம் பாகமெல்லாம் வேண்டாம். இதிலே க்ளைமாக்ஸை எழுதி படத்தை முடிக்க வேண்டுமென்றும், அல்லது அவர் எழுதி தரும் க்ளைமாக்ஸிற்கு ஏற்றார் போல் இயக்கி முடிக்க வேண்டுமென்றும், இல்லையெனில் அடி தான் விழுமென்றும் தயாரிப்பாளர் என்னை அடித்தபடியே கூறினார். நானோ சிரித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் நான் அப்பொழுதும் குடித்திருந்தேன்.

அன்றோடு குடியை விட வேண்டுமென்றெண்ணி கோயிலுக்குச் சென்றேன். கோயிலில் என் நண்பன் மாவுவும், ஒரு பெண்ணும் கழுத்தில் மாலை அணிந்தப் படி திருமண கோலத்தில் என்னை பார்க்காமலே நடந்து சென்றனர். அங்கிருந்த அர்ச்சகரிடம் அவர்கள் பற்றி நான் விசாரிக்கையில், மணப்பெண் திருப்பூரில் ஊறுகாய் கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும், வேறெந்த தகவலும் தெரியாதென்றும் கூறினார்.

க்ளைமாக்ஸைத் தவிர மற்ற அனைத்து படப்பிடிப்பும் முடிந்த நிலையில், க்ளைமாக்ஸ் படப்பிடிப்பிற்கும், போஸ்ட் புரொடக்ஷனுக்கும் பணத்தேவை ஏற்பட்டதால், தயாரிப்பாளர் தன் நிலத்தை விற்க தன் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். க்ளைமாக்ஸை எழுதி விட்டதகாவும், வரும்பொழுது அதனை கொண்டு வருவதாகவும் என்னிடம் மொபைலில் பேசுகையில் கூறினார். அப்பொழுது எனக்கு ட்ரெய்ன் ஓடும் சப்தம் மட்டுமே கேட்டது. அதன்பின் தயாரிப்பாளர் வரவே இல்லை. ட்ரெயினில் மோதி விபத்துள்ளான அவர் கார் நொறுங்கியது. அங்கு எவ்வளவு தேடியும் தயாரிப்பாளரின் ஒரு எலும்பு கூட கிடைக்கவேயில்லை. ஆனால் ஒரு காகிதம் மட்டும் கிடைத்தது. அதில் பெரும்பகுதி உதிரமேறி சிவப்பு நிறமாயிருந்தது. மேலே தெரிந்த சிறு பகுதியில் ‘க்ளைமாக்ஸ்” என்று எழுதப்பட்டிருந்தது.

தயாரிப்பாளர் இறந்ததும், அவருடைய மகன்கள் சொத்தை சரிபங்காய் பிரித்துக் கொண்டு தத்தம் தொழில்களில் முதலீடு செய்ய சென்றுவிட்டனர். போகும் பொழுது, சினிமாவில் முதலீடு செய்ய நாங்கள் ஒன்றும் எங்கள் அப்பாவைப் போல ஏமாளிகள் அல்ல எனக் கூறிவிட்டு தங்கள் பங்கிற்கு என்னை அடித்துவிட்டுச் சென்றனர். ஆனால், நான் அப்பொழுது குடியை விட்டிருந்ததால், அழத்தொடங்கினேன்.

தயாரிப்பாளர் இறந்தபின், அவரின் மகன்கள் சினிமாவில் ஆர்வம் காட்டாத்தால் படத்தை விற்றால் அந்த பணம் யாருக்கென்று தயாரிப்பாளர்களின் மகன்களுக்குள் சண்டை வந்தாலும், வேறெவர்க்கும் முடியாமல் என் படம் ட்ராப் ஆனது. பிறகு நான் இந்தி தெரியாவிட்டாலும் பாலிவுட்டிற்குச் சென்று ஒரு படத்தின் இணை இயக்குனாராக வேலைப் பார்க்க தொடங்கிவிட்டேன்.

தயாரிப்பாளரின் ஒரு மகன் சொத்தில் கிடைத்த பணத்தில் ஒரு ஊறுகாய் கம்பெனியைத் தொடங்கினார். அங்கு வேலைப் பார்த்த லாரி டிரைவர் பெரிய குடிக்காரன். அவன் ஒரு நாள் லாரியில் ஊறுகாய் டெலிவரிக்கு செய்கையில் லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஊறுகாய் டின்களை மட்டுமே எடுத்துக் கொண்டு எங்கேயே சென்றுவிட்டான்.

இவ்வாறு என் கதை, முதல் பாகத்தின் படப்பிடிப்பு கூட முழுதாய் எடுக்கப்படாமலே முடிவடைந்தது.


  • ராஜ் செளந்தர்

Related Articles