வெளியிடப்பட்ட நேரம்: 17-Nov-2018 , 09:26 AM

கடைசி தொடர்பு: 17-Nov-2018 , 10:39 AM

திரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்

IMG_20181116_191428

நாடகம் - நாடு+அகம் அகத்தில் நாடுதல். அதாவது உள்ளத்தில் உணர்ச்சியை தூண்டுதல் என்பார் கி.ஆ.பெ விஸ்வநாதம். அது நூற்றுக்கு நூறு உண்மை என நிருபித்தனர் பாஃப்டா(BOFTA) திரைப்படக் கல்லூரி மாணவர்கள். வரைகலை, 3D என வளர்ந்துவிட்ட இக்காலத்தில் மெல்ல மெல்ல அழிந்துவரும் ஒரு கலையை ஒய்வின்றி ஒரு மணி நேரம் சீரான உற்சாகத்தில் மீட்டெடுத்து பார்வையாளர்களுக்கு விருந்தாக்கினார்கள்.

தமிழகத்தில் நாடகம் என்பது ஆதி சமூகத்தில் உதித்த ஒன்று என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன். நாகரிகம் வளராத காலத்தில் விலங்குகளை விரட்டி அடிக்கவும், தான் சேர்ந்த குழுக்களை கண்டு உண்ரவும் ஒலியை பயன்படுத்திய மனிதன், அதன் பிறகு விலங்குகளை வேட்டையாடவும், வேட்டையாடிய விலங்குகளை வைத்து வெற்றியை வெளிப்படுத்தவும் ஒலியுடன் கூடிய அங்க அசைவுகளை கண்டு உணர்ந்திருக்க வேண்டும். ஒலியையும், அசைவுகளையும் வைத்தே போர்களில் களமாடியிருக்க வேண்டும். இலக்கியத்தில் இதை துடிக்கூத்து என்பார்கள். ஓசையும், ஒலியும், எவ்வாறு பாடல் ஆனதோ, அதேபோல வேட்டையும் விளையாட்டும் ஆடலாகிறது. பாடலும், ஆடலும் இணைந்து கூத்தாகிறது. கூத்து நாடகத்தில் கதை சொல்லும் பாங்கு அலாதியானது. கணீர் குரலும், மருளும் விழிகளும், நவரச பாவணைக் கொண்ட முகமும் கூத்து நாடகத்தின் பெரும் சொத்து. கூத்து சொல்லித் தர நிறைய பயிற்சி மையங்கள் தமிழகம் முழுவதும் இருந்தாலும் சென்னையில் கூத்துப்பட்டறையை உருவாக்கியவர் சமீபத்தில் மறைந்த திரு முத்துச்சாமி அவர்கள். கூத்துப்பட்டறை தமிழ் சினிமா உலகிற்கு நிறைய கலைஞர்களை உருவாக்கி கொடுத்திருக்கிறது.

திரு. முத்துச்சாமி அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் பாஃப்டா திரைப்பட கல்லூரி மாணவர்கள் முதல் நாடகமாக அவர் உருவாக்கிய சுவரொட்டிகள் நாடகத்தில் இருந்து சிறுபகுதியினை நடித்துக் காட்டினர். நாடகத்தின் முதல் முயற்சியை ஒரு மாபெரும் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைப்பது குரு வணக்கத்திற்கு சமம் என்பதை பாஃப்டா திரைப்பட கல்லூரி மாணவர்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். சரியான ஆசிரியர்களால் வழி நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இதைவிட சிறந்த சான்று இருக்க முடியாது. வலக்காது/இடக்காது, வலக்கண்/இடக்கண் என வேகவேகமாக உச்சரித்து உன் முகம் நீயல்ல என்கிற பொழுது நமக்கும் பகீரென்று இருக்கிறது. கூடவே நாமும் சேர்ந்து அவர்களுடன் வலக்கண்/இடக்கண், வல காது/இடது காது என ஆடும் மன நிலைக்கு உள்ளாகிறோம். அருமையான நடிப்பாக இருந்தது சுவரொட்டிகள். எங்கும், எவரிடத்தில் ஒலிபெருக்கி (மைக்) கிடையாது. ஒவ்வொரு மாணவனின் குரலும் கணீர் கணீரென இருந்தது. ஊன்றுக்கோலில் தரையில் தட்டும் லாகவமும் நாடகத்திற்கு பக்கபலமாய் இருந்தது.

இரண்டாவது நாடகமாக ஆர்.கே. நாரயணனின் ஆண்ட்டிடோட் என்கிற கதை. பிறந்த நாளன்று சவமாக நடிக்கவேண்டிய சூழல் ஒரு கலைஞனுக்கு. இந்த ஒரு வரி தான் நாடகம். பாஃப்டா மாணவர்களின் நாடகதேர்வு சற்று பிரமிக்க வைக்க கூடியது தான். முதல் முயற்சியில் வலுவான கதையினை நாடகமாக்க துணிந்து இருக்கிறார்கள். நாடகத்தில் இயக்குனாராக நடித்த மாணவரின் மிடுக்கான குரலும், ஒரு இயக்குனாரக்கான பரபரப்பு, டென்சன், காட்சியமைக்கும் விதம், உதவி இயக்குனரை கூப்பிடும் தோரணை நாடகம் முடியும் வரைக்கும் பிசிறு இல்லாமல் அதே குரல்வளத்தை வெளிப்படுத்தினார். உதவி இயக்குனாராக நடித்தவரிடமும் நல்ல உடல்மொழி இருந்தது. “சார் எனக்கு பிறந்த நாள் சார் என்று சொல்லும் நடிகனிடம், ஓ! வாழ்த்துகள் என சொல்லுமிடம் கைத்தட்டல் பெற்றதாக இருந்தது. அருமையான வார்த்தை வெளிப்பாடு. வேலை என்று வந்துவிட்டால் ஜோதிடம் எல்லாம் பார்க்க கூடாது என்று நாடகம் சொன்னதை தான் திரைப்பட நடிகர் கோபி வேறுமாதிரியாக சொன்னார். “வெட்கம், மானம், சூடு, சுரணை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு வேலையை மட்டும் பாருங்கள். உங்களுக்கான வாய்ப்பு இன்னும் பிரகாசமாக இருக்குமென்றார்.”

அடுத்த நாடகம் எழுத்துலக ஜாம்பவான் அசோகமித்ரனின் புலிக்கலைஞன். ஒரு படைப்பு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதிற்குள் தாக்கத்தை உருவாக்க வேண்டும். அசோகமித்ரன் அதை சிறப்பாக செய்து வைத்திருக்கிறார். புலிக்கலைஞன் கதையாகவே நம்மில் நுழைகிறார்கள். திரையுலகத்தில் நடிக்க சான்ஸ் கேட்டும் அலையும் ஒரு கலைஞனின் கதை. பாஃப்டா மாணவர்களின் நடிப்பு பிரமாதமாக இருந்தாலும் புலியாட்டம் ஆடியவர் இன்னும் கொஞ்ச நேரம் ஆடமாட்டாரா என்ற ஏக்கம் இருந்தது. தத்ரூபமான ஆட்டம். கதையாக அசோகமித்ரன் நான்கு பக்கத்திற்கு எழுதிய புலியாட்டம் வெறும் நான்கு நிமிடத்தில் நடித்துக்காட்ட அசாத்திய திறமை வேண்டும். கதைப்படி புலியாட்டம் சுவரின் மீது கால் வைத்து ஆடுவது போல இருக்கும். நாடகத்தில் ஆடிய மாணவர் மேஜை மீது ஏறி ஆடி நடிப்பை சிறப்பாக வெளிப்ப்டுத்தினார். கதையின் முடிவில் என்னிடம் நிறைய கேள்விகளை எழுப்பி விட்டு இருந்தது நாடகம். கடிதம் ஏன் திரும்பி வந்தது? அப்படியானல் கூத்து கலைஞன் என்னவாகி இருப்பான்? அவன் குடும்பம் என்னவாக இருக்கும்? ஒரு கலை மரித்துவிட்டதா என யோசிக்கும் போது காட்சிகள் மனக்கண்ணில் விரிந்து நம்மை வேறோர் உலகிற்கு கொண்டு செல்கிறது. அசோகமித்ரன் என்ன நினைத்தாரோ அதை மாணவர்கள் சரியாக நிறைவேற்றினார்கள். பார்வையாளருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.

குங்ஃபூ மாஸ்டர் பெர்னாண்டஸ் மற்றும் ஜாகிர் உசேன் இருவரின் பயிற்சியில் பாஃப்டா மாணவர்களின் அடுத்த அரங்கேற்றம் குங்ஃபூ. முழு குழுவும் ஒரே நேரத்தில் செய்த நிகழ்ச்சியில் எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான். இன்னும் சிறிது பயிற்சி எடுத்து இருக்கலாம்.

ஆரம்பத்தில் குழுவாக சரியாக ஆரம்பித்தவர்கள், போக போக தனித்தனியாக குங்ஃபூ செய்த மாதிரி இருந்தது. வேகம் அனைவரிடமும் ஒரே மாதிரியாக இல்லை. சற்று சொதப்பல் தான்.

அடுத்ததாக சில பாடல்களுக்கு நடனங்கள் ஆரம்பித்தார்கள். இங்கேயும் தனித்தனியாக ஆடும் போது அசத்துகிறார்கள். குழுவாக ஆடும் போது சொதப்பி விடுகிறார்கள்.

தொடர் நிகழ்வாக உடல்மொழி அசைவில் வார்த்தைகள் இல்லாத நாடகங்களை (mime show) அரங்கேற்றினார்கள். திரைப்பட நடிகரும், மைம் ஆர்ட்டிஸ்ட்டுமான நடிகர் கோபி மற்றும் உதவியாளர்கள் மதன் மற்றும் சந்துரு அவர்களின் பயிற்சி சிறப்பாகவே இருந்தது எனலாம். செல்பி குறித்த மைம் நாடகங்கள் அருமையாக இருந்தது. சாவு வீட்டில் செல்பி எடுப்பது, இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது கைபேசியில் பேசிக்கொண்டே போவது, மருத்துவமனையில் செல்பி எடுப்பது, ஆபத்தான செல்பிகள் குறித்து உடல்மொழியை நன்றாக வெளிப்படுத்தினார்கள். நிகழ்வின் கடைசியாக பேசும் போது திரு. கோபி ஒரு விசயத்தை சொன்னார். நடிப்பு மட்டும் தான் எங்களுடைய பயிற்சி. நடிப்பிற்கான கதைகரு மாணவர்களே உருவாக்கியது என்றார். குறைந்த காலத்தில் பயிற்சி பெற்றதாக திரு.கோபி அவர்கள் வெளிப்படையாக பாராட்டி இருந்தார்.

ஒரு டீக்கடை திறப்பதில் இருந்து, அடுப்பு பற்ற வைத்து விதவிதமான மனிதர்களுக்கு டீ போட்டு தருவதாக இருக்கட்டும், மதத்திற்குள் மதம் எப்படி நுழைகிறது?, ஒரு சிறு நிகழ்விற்கு பிறகு எப்படி மத தலைவர்களுடன் சரணாகதி அடைகிறோம் என்பதெல்லாம் தத்ரூபமாக செய்து முடித்தார்கள்.

[video width="360" height="640" mp4="https://kalakkaldreams.com/wp-content/uploads/2018/11/1542427318852.mp4"][/video]

 

கடைசியாக திரு. நாகேந்திர பிரசாத் மற்றும் அவருடைய உதவியாளர் திரு. கார்த்திக், தியேட்டர் டைரக்டர் திருமதி. பிரசன்னா இராமஸ்வாமி, வகுப்பாசிரியர் திரு.சரவணன், திரு. தனஞ்செயன், குங்ஃபூ மாஸ்டர் பெர்னாண்டஸ், மற்றும் ஜாகீர் உசேன், திரு மைம் கோபி, அவருடைய உதவியாளர்கள் மதன் மற்றும் சந்துரு ஆகியோருக்கு நன்றி தெரிவித்து நிகழ்ச்சியை சிறப்பாக முடித்தார்கள்.

ஒவ்வொரு நிகழ்வையும் எந்தவித அலங்காரமும் இல்லாமல் சிறப்பாக நடத்தி இருந்தார்கள். ஆரம்பகால கட்டத்தில் இருக்கும் போதே திறம்பட இயங்கும் பாஃப்டா திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு நிச்சயமாக துறைச் சார்ந்த பகுதியில் பெரிய எதிர்காலம் இருக்கிறது.

-ராஜி

Related Articles