வெளியிடப்பட்ட நேரம்: 18-Jul-2019 , 06:27 PM

கடைசி தொடர்பு: 18-Jul-2019 , 06:36 PM

நம்பிக்கை வாக்கெடுப்பு இன்றே நடத்துங்கள்

karnataka3

சட்டப்பேரவையின் நம்பிக்கையை பெற்றவராக முதல்வர் இருக்க வேண்டும், இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என கர்நாடக சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கடந்த இரு வாரங்களில் 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால், கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அதிருப்தி எம்எல்ஏக் கள் பைரத்தி பசவராஜ், விஸ்வநாத் உள்ளிட்ட 15 பேர், கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் தங்கள் ராஜினாமாவை ஏற்க சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமாருக்கு உத்தரவிடக் கோரிக்கை விடுத்தனர்.


இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு  நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ‘‘அதிருப்தி எம்எல்ஏக் களின் ராஜினாமா விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் பேரவை தலைவருக்கே உள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு பேரவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது. அதிருப்தி எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது’’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் கர்நாடகா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி இன்று கொண்டு வந்து பேசினார். இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர்  சித்தராமையா கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாத்தின்போது கொறடா உத்தரவு பிறப்பிக்க உரிமை உள்ளதா என்ற பிரச்சினையை எழுப்பினார்.

அரசியல் சட்டம் கொடுத்துள்ள இந்த உரிமை பற்றிய முடிவு தெரியாமல் வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என அவர் கூறினார். இந்தநிலையில் அவை ஒத்தி வைக்கப்படுவவதாக கூறி சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை முதல்வர் குமாரசாமி இழந்துவிட்டார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் நேரத்தை கடத்தி வருவதாக புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் நம்பிக்கையை பெற்றவராக முதல்வர் இருக்க வேண்டும், இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என கர்நாடக சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles