வெளியிடப்பட்ட நேரம்: 12-Oct-2018 , 08:17 AM

கடைசி தொடர்பு: 12-Oct-2018 , 09:56 AM

வாத்திய இசையும் தமிழர் பண்பாடும்

images (5)

தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கிராமம். அவ்வூர் கோயிலுக்குப் போயிருந்தேன். இரவு நேரம் ஒன்பது மணி இருக்கும். இருந்து விட்டுப் போங்களேன். அர்த்த ஜாமம் நடக்கப் போகிறது என்றார் குருக்கள். சரி என்று தங்கினேன். அந்த பூஜையின் போது சுத்தமத்தளம் வாசிக்கப்பட்டது. அந்தக் கோயிலில் நிலவிய அமைதியும் சுத்தமத்தள வாத்ய இசையும் தீபாரதனையும் என்னை அப்படியே தெய்வத்தின் முன்னிலையில் நிறுத்தின. என்னை அறியாமலேயே உள்ளத்திலும் உடலிலும் சாந்தமான அமைதி. அந்த மத்தள இசையை இப்பொழுது நினைத்தாலும் மனதில் ஒரு சாந்தியை ஏற்படுத்துகிறது.


கோயில்களில் "அந்தந்த காலத்துக்கு ஏற்ப ராகங்களும், வாத்யங்களும் வாசிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு காலத்துக்கு ஒவ்வொரு விதமாக வாசிக்கப்பட வேண்டும். எங்க அப்பா அது எல்லாம் வாசிப்பார். எனக்கு ஒன்று இரண்டுதான் தெரியும்" என்றான் மத்தளம் வாசித்த பையன்.

காலமும் இடமும் இசையும் மனித உள்ளத்தில் எந்தெந்த உணர்ச்சிகளை ஏற்படுத்தும். அதைப் பயன்படுத்தி எப்படி நாம் பண்பட்டவர்களாக, உயர்ந்தோராக மலர முடியும் என்று நம் ஆன்றோர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அனுபவத்தின் மூலம் அறிந்து எந்த காலத்தில் எந்த இசை, எந்த ராகம் என்று வரண்முறை படுத்தினார்களோ அதைத்தான் நம் கோயில்கள் போற்றின. இந்த அனுபவத்தைத்தான் நமது ஆகமங்கள் எழுதி வைத்தன. பெரும்பாலான கோயில்களில் இந்தப் முறைப்படி இசையும் வாத்யமும் வாசிக்கப்பட்டன. இவை இப்பொழுது படிப்படியாக மறைந்து வருகின்றன. பல இசைக்கருவிகளை எப்படி வாசிப்பது என்றே தெரியாமல் கோயில்களில் அவை மக்கி மறைந்து வருகின்றன. இருந்தாலும் ஓரிரண்டு கோயில்களிலாவது பண்டைய மரபு இன்னும் உள்ளது.


திருவரங்கத்து பெருமானின் திருமுன்பு காலையில் வீணை இன்றும் வாசிக்கிறார்கள். எவ்வளவு இனிமையான இசை. கோயில்களில் வீணை வாசிக்கும்போது எவ்வளவு மங்களகரமாக இருக்கும். பெருங்கோயில்களில் எல்லாம் வீணை வாசிப்பவர்கள் இருந்தார்கள். தஞ்சாவூரில் பெரிய கோயிலைக் கட்டிய இராஜராஜன் அக்கோயிலில் வீணை வாசிக்க இரண்டு பேரை அமர்த்தியிருந்தான். அவர்களுக்கு சிறப்பு விருதுகள் அளித்து கெளரவப்படுத்தியுள்ளான். வீணை வாசிப்பவருக்கு வீணை ஆதித்தன் என்று பட்டம் கொடுத்து சிறப்பித்திருக்கிறான். அதைத் தனது கல்வெட்டில் வீணை வாசிப்பார் இருவருக்கு சுப்பிரமணியன் கூத்தனான செம்பியன் வீணை ஆதித்தனுக்கு பங்கு மூன்றரை என்று கூறுகிறான். இரண்டு பேர் வீணை வாசிக்க வேண்டும் அவர்களுக்கு இன்றைய கணக்கில் சொல்ல வேண்டும் என்றால் மாதம் ஒருவருக்கு 5000 ரூபாய் சம்பளம். இருவருக்குமாக அந்தக் கோயிலில் வீணை வாசிக்க மட்டும் 10000 ரூபாய் கொடுத்தான். இது போல் தஞ்சாவூர் கோயிலில் இசைக் கருவிகள் வாசிப்பதற்கு மட்டும் 64 பேர்கள் இருந்தனர். ஒருவருக்கு குறைந்த பட்ச சம்பளம் இன்றைய கணக்கில் 2750 ரூபாய். இசைக்கருவிகளுக்கு மட்டும் ராஜராஜன் மாதம் ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறான்.

இதுபோல வழிபாட்டின் போது நல்ல தமிழ் பாடல்கள் பாடவேண்டும். தேவாரப் பதிகங்களை பாடுவதற்கென்று 50 பேரை இராஜராஜன் நியமித்தான். இவர்களுக்கு திருப்பதிகம் விண்ணப்பிப்பார் என்று பெயர். திருப்பதிகங்கள் தவிர தமிழ்பாட்டுக்கள் பாடவும் சமஸ்கிருத பாடல்கள் பாடவும் தனித்தனியாக இசைவல்லுனர்களை நியமித்தான். வெவ்வேறு சந்நிதிகளில் வெவ்வேறு நாட்டியமாட 400 பெண்களை நியமித்திருந்தான். மொத்தமாக இசைக்கும் நாட்டியத்துக்கும் மட்டும் ஆண்டுக்கு நான்கு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமகாக் கொடுத்திருக்கிறான். இத்தனையும் ஓரே கோயிலுக்கு கொடுத்தவை. அவன் ஆட்சியில் எவ்வளவு ஆயிரம் கோயில் இருந்தன. இத்தனை பேர் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு கோயிலிலும் பாடுவோர் இருந்தனர், ஆடுவோர் இருந்தனர் அதனால் ஒவ்வொரு ஊரிலும் இசை மலர்ந்தது. எண்ணிப்பாருங்கள்!


தமிழ் நாட்டில் உள்ள எல்லாக் கோயில்களிலும் நாள் தோறும் காலையிலும், நடுப்பகலிலும், மாலையிலும், இரவிலும் இசை ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்தந்த காலத்துக்கு ஏற்ற இராகங்கள் வாத்யங்கள் இசைக்கப்பட்டன என்றால் தமிழகமே அல்லவா இசைக் கோலம் பூண்டு திகழ்ந்திருக்கும். அதைத்தானே பண்பாடு என்கிறோம். அதுவும் கோயில்களின் தெய்வீக இசை என்றால் இங்கு வாழும் மக்கள் அனைவருமே அல்லவா அந்தப் பண்பில் திளைப்பார்கள்.


சில ஆகமங்கள் அருணோதயத்தின் போது பஞ்சமகாசப்தங்கள் வாசிக்க வேண்டும் என்று கூறுகின்றன. கோயில்களில் ஆறுகாலம் பூஜை நடந்தால் ஒவ்வொரு காலத்திலும் சர்வவாத்யம் வாசிக்கவேண்டும் என்று ஒரு ஆகமம் கூறுகிறது. பஞ்சகவ்யம் அபிஷேகம் நடைபெறும் போது வீணை வாசிக்க வேண்டும். பிறகு தூபம் காட்டும் வரையில் தமிழ் பாட்டுக்கள் பாட வேண்டும் என்று ஆகமம் கூறுகிறது. பிறகு 18 பாஷைகளில் இருந்து எந்த பாட்டு வேண்டுமானால் பாடலாம் என்று கூறுகிறது. 24 இசைக்கருவிகள் வாசித்தல் அல்லது 34 அல்லது 50 கருவிகள் வாசித்தல் என்ற நியதி உண்டு.


சர்வவாத்யம் வாசிக்கும் போது இத்தனையும் இசைந்து தாளமும் இணைந்து வாசிக்க வேண்டும். இந்த மரபு தமிழ்நாட்டில் மறைந்தே போய்விட்டது. ஆனால் கேரளவில் மட்டும் இன்னம் இந்த மரபு இருக்கிறது. 64 பேர் இணைந்து ஒன்று போலவே வாசிக்கும் நம் நாட்டிலே இருந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் திகழ்ந்திருக்கிறது.


கேரளத்தில் இன்றும் எஞ்சியுள்ளது. இதை எல்லாம் நாம் விட்டு விட்டோம். வெள்ளைக்காரன் கொண்டு வந்த பேண்டு வாத்தியத்தையும், மேலைநாட்டு கும்பல் சங்கீதமும் தான் இசை என்று படத்திலும், டி.வி.லும் ரேடியோவிலும் திரும்ப திரும்ப காண்கிறோம். நம் பண்பாடு என்று ஒருபுறம் பறை வேறு சாற்றிக் கொள்கிறோம்!


பூஜையின் போது எல்லாத் தேவதைகளுக்கும் ஒரே இடத்தில் வழிபாடு செய்வது மரபு. இதைத்தான் பலி என்று சொல்வது. பலி கொடுத்தல் என்றால் ஆட்டையோ கோழியையோ கொடுத்தல் என்று எண்ண வேண்டாம். எல்லாக் கோயில்களிலும் பலிபீடம் என்று ஒன்று உண்டு. அதில் "என்னால் பெயர் கூவி அழைக்கப்பட்ட தெய்வங்களே எனக்குத் தெரிந்தோ தெரியாமலோ இருக்கும் மற்ற தெய்வங்களே நீங்கள் அத்தனை பேரும் இங்கு எழுந்தருளி நாங்கள் கொடுக்கும் இந்த வழிபாட்டை எற்றுக் கொள்ளுங்கள்" என்று வேண்டிக் கொள்வதைத்தான் பலி என்று அழைக்கிறார்கள். இதற்கு புஷ்பம், தண்ணீர், சாதம் ஆகிய மூன்றையும் சமர்ப்பிப்பார்கள். இதை சிலப்பதிகாரம் பூப் பலி செய்தல் என்று கூறுகிறது. இதைக் கேரளாவில் ஸ்ரீபலி என்பார்கள்.


இந்த வழிபாட்டின் போது வாசிப்பதற்கென்று தனிக் கொட்டு ஒன்று உண்டு. ஒவ்வொரு திசைக்கேற்ற ராகமும் அதற்கேற்ற தாளமும் உண்டு.


அத்துடன் அந்தந்த இடத்திற்கேற்ற நாட்டியம் உண்டு. மேக ராகத்துடன் பிரும்மதாளம் வாசிக்க வேண்டும். காந்தாரப் பண்ணுடன் சமதாளம் வாசிக்க வேண்டும். கொல்லிப் பண்ணுடன் பத்தாவணம் என்னும் தாளம், கெளசிகப் பண்ணுடன் பிருங்கிணீ என்னும் தாளம், நட்ட ராகத்துடன் மல்லதாளம், சீகாமரம் என்ற பண்ணுடன் நவதாளம், தக்கேசி என்ற பண்ணுடன் பலிதாளம், தக்க ராகத்துடன் கோடி தாளம், சாலாபாணியுடன் டக்கரி, வாசிக்க வேண்டும் என்று காமிகாமம் கூறுகிறது. இன்றும் சுவாமி புறப்பாடு செய்யும் போது மல்லாரி வாசிக்கிறார்கள். பல்லக்கு வரும்போது ஆனந்தபைரவி வாசிக்கும் மரபு உண்டு. இதுபோல் உத்ஸவத்துக்கு ஏற்ற ராகங்களையும் ஆகமங்கள் கூறுகின்றன.

பூர்வ சந்தியில் காந்தாரத்தையும், பின்னர் ஷாடவம் என்ற பண்ணையும், மத்தியானத்தில் நாட்டை ராகத்தையும், சாயங்கலத்தில் இந்தளம் என்ற பண்னையும், அர்த்த ஜாமத்தில் பஞ்சமம் என்ற பண்னையும் பாடவேண்டும் என்று சுப்ரபேதாகமம் என்னும் நூல் கூறுகின்றது.


பலகோயில்களில் தெரிந்தோ தெரியாமலோ இவற்றில் சிலவற்றை நாதஸ்வரத்தில் இசைக்கிறார்கள். இந்த மரபு தெரிந்தவர்கள் நமது நாதஸ்வர வித்வான்களும் ஓதுவார்களும் அவர்களிலும் வயதான ஒரு சிலருக்குத்தான் தெரியும். அவர்களிடமிருந்தும் இவை மறைந்து விடும் முன்னர் இந்த ஆனந்த மரபை இந்த தலைமுறை தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும்.


-வினோ

Related Articles