வெளியிடப்பட்ட நேரம்: 30-Apr-2018 , 11:00 AM

கடைசி தொடர்பு: 29-Apr-2018 , 11:30 PM

வெண்ணிலா எனும் தேவதை பாகம்-10

images (13)

மூன்று பேரும் சாப்பிட அமர்ந்தனர். சத்யா மறுபடியும் வம்பிழுக்க ஆரம்பித்தான். "ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் போய் அப்பா நல்லாருக்காரானு பார்த்துட்டு வந்துடுறேன்." முதலில் இருவரும் புரியாமல் முழித்தனர்.  அப்பா உங்க சமையலை சாப்பிட்டு ஒருமணி நேரம் ஆய்டுச்சுல அதான் நல்லாருக்காரானு பார்த்துட்டு வந்து சாப்பிடலாம்னு பார்த்தேன் எனவும்  வெண்ணிலாவும், தேவியும் ஒரு சேர சத்யாவை அடிக்க வந்தனர். "பக்கிகளா விட்ருங்க  மீ சரண்டர்" என கை இரண்டையும் மேலே உயர்த்தி பசிக்குது சாப்பிடலாம் எனக் கூறினான்.


இருவருக்கும் அவன் பண்ணிய விதம் சிரிப்பை ஏற்படுத்தியது சிரித்துக்கொண்டே சாப்பிட அமர்ந்தனர். சாம்பார், ரசம், இரண்டு பொரியல் என அசத்தி விட்டனர் இருவரும். கேலி பண்ணினாலும் பாராட்டவும் தவறவில்லை சத்யா,


"பாட்டி சமையல் மாதிரியே இருக்கு அசத்திட்டிங்க ரெண்டு பேரும்"  என வெண்ணிலாவையும், தேவியையும் பார்த்து கூறினான்.  தேவி உடனே "நான் சமைக்கல காய் வெட்ட வேற சின்ன சின்ன ஹெல்ப் மட்டும் தான் பண்ணினேன். எல்லாம் நம்ம நிலா மேடம்  தான் பண்ணினா."


"நிஜமாகவே நல்லாயிருக்கு. சாப்பாடு பாட்டி சமைச்ச மாதிரியே இருக்கு" என கூறிக்கொண்டிருக்கும் போது பாட்டியும் சத்யாவின் அம்மாவும் வீட்டினுள் நுழைந்தனர்.


"என்னடா என் பேச்சு அடிபடுது என்ன விசயம்?" என கேட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தனர். சத்யா "ஒன்னுமில்லை... பாட்டி உங்க சமையல் மோசம்னு சொன்னேன்"  பாட்டி அவனின் காதைப் பிடித்துத் வலிக்காத மாதிரி திருகிக்கொண்டே. "ஏன்டா புதுசா இவளுக ரெண்டு பேரும்  சமைச்சதும் என் சமையல் பிடிக்கலையா" என கேட்டார்.. சத்யா வலிக்கிற மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு "உண்மை கசக்கும்" என மீண்டும் பாட்டியை வம்பிழுத்தான்.


பாட்டி இப்பொழுது "இனி பாட்டி அது வேணும் இது வேணும்னு கேளு அப்புறம் இருக்கு உனக்கு" எனவும், "ஐயோ பாட்டி சும்மா தான் சொன்னேன். அப்பறம் எங்கம்மா சமையலை சாப்பிட்டு எங்கப்பா மாதிரி யார் அவஸ்தை படறது" எனவும் சத்யாவின் அம்மா.....


"நீ காலேஜ் போனதில் இருந்து அதிகமா பேச கத்துகிட்ட. ஏற்கனவே வாய் பேச்சு ஜாஸ்தி இப்ப இன்னும் கூடிப்போச்சு. எல்லாம் கல்யாணம் ஆகுற வரை தான். அப்புறம் வருவ நீயே அம்மானு" என கூறவும் அனைவரும் சிரித்தனர்.


பாட்டியும் சத்யாவின் அம்மாவும் சாப்பிட்டு விட்டு வெண்ணிலாவையும், தேவியையும் பாராட்டினர். அடுத்து சத்யா, வெண்ணிலா, தேவி மூவருமே  வழக்கம் போல் அரட்டையை துவங்கினர். தன் காலேஜில், ஹாஸ்டலில்  நடந்த கதைகளை சொல்லியும் இவர்கள் பள்ளியில் நடந்த விசயங்களையும் பேசி கொண்டிருந்தனர்.


சத்யா வெண்ணிலாவிடம், "அடுத்து என்ன படிக்க போகிறாய்? உன் டியர் ஃப்ரண்ட் சிவா  என்ன படிக்க போறான்?" என சிவாவை பற்றியும் விசாரி்த்தான்.


சிவா, வெண்ணிலாவின் நட்பை பற்றி சத்யாவிற்கு நன்றாக தெரியும். எப்பொழுதும் சத்யாவை பற்றி அவனிடம் சொல்வதைப்போல், இங்கே வந்தால் சிவாவை பற்றி இவர்களிடம் பேசாமல் இருந்ததில்லை.


சத்யாவை பார்த்து, "தெரியல அத்தான் சிவா இன்ஜினியரிங் படிக்கலைனு சொன்னான். ஆனா அவனோட அப்பா இன்ஜினியரிங் தான் சொல்றார். இவனுக்கு   மெடிக்கல் அல்லது BSC மேத்ஸ் எடுத்துட்டு காலேஜ் ப்ரோபசர் ஆகனும்னு சொல்றான்.  மார்க் வந்த பிறகு தான் முடிவு பண்ணனும். நான் இன்னும் என்ன கோர்ஸ் எடுக்கனு முடிவு பண்ணல. அப்பா காலேஜ் போக வேண்டாம்னு சொல்றார். அம்மாவும் சிவாவும் அப்பாகிட்ட என்னை படிக்க வைக்க கெஞ்சிட்டு இருக்காங்க என கூறினாள்."


இதைக் கேட்ட தேவியும் சத்யாவும் அதிர்ச்சியடைந்தனர். "என்ன மாமா படிக்க வேண்டாம்னு சொல்றாரா? நீ என்கிட்ட ரெண்டு நாள்ள சொல்லல ஏன்.?" என தேவி கேட்டாள்.


"ஆமாம் அப்பாவோட ஃப்ரண்ட் பொண்ணு காலேஜ் படிக்க போய் யாரையோ காதலிச்சு ஓடி போய்டுச்சாம். அதனால் காலேஜ் அனுப்பப் பயப்படுறார்."


சத்யாவிற்கு இதை கேட்டதும் கோவம் வந்துவிட்டது "யாரோ பண்ணின தப்பிற்கு எல்லாரும் அதே தப்ப பண்ணுவாங்கனு நினைக்கிறது முட்டாள் தனம். இந்த காலத்திலும் அப்படியா இருக்கிறது. நான் இப்பயே மாமாகிட்ட பேசுறேன். மொபைல எடுத்துட்டுவா நான் பேசுறேன்" என அவசரப்பட்டான்.


வெண்ணிலா, "அத்தான் எப்படியும் சிவா அப்பாகிட்ட பேசுவான். நீங்க சொன்னா இன்னும் கோவம் வரும் அப்பாவிற்கு எனவும், மேலும் கோவம் வந்தது சத்யாவிற்கு, "ஏன் நான் சொன்னா உங்கப்பா ஏன் கோவப்படனும்?" எப்படி இவனை சமாளிப்பது? என திரு திருவென விழித்தாள்.


வெண்ணிலா தவிப்பதை பார்த்த தேவிக்கு  எதற்காக வேண்டாம் என தடுக்கிறாள்? என  புரிந்தது.


தேவி தான் சத்யாவிடம், "அண்ணா மாமாவிற்கு எப்பொழுதுமே நம்ம வீட்டு ஆளுங்கள பிடிக்காது. ஊருக்கு வரதுக்கே கெஞ்சி வந்துருக்கா. இப்ப இது விசயமா நீ பேசினா சின்ன பையன் எனக்கு சொல்லிதரானானு அத்தைய தான் திட்டுவார். பொறுமையா இரு. இன்னும் ரெண்டு மாசத்திற்கும் மேல இருக்கு காலேஜ் ஓபனிங் அதுக்குள்ள எப்படியாவது அத்தை சம்மதம் வாங்கிடுவாங்க" என்றாள் தேவி


இப்பொழுது வேறு ஒரு பயம் வந்தது சத்யாவிற்கு. இந்த குடும்பத்தையே பிடிக்காத மாமா,  எப்படி தங்களுடைய காதலுக்கு சம்மதிப்பார் என யேசித்தான்.


-ஆனந்தி


முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:Related Articles