வெளியிடப்பட்ட நேரம்: 01-May-2018 , 10:00 AM

கடைசி தொடர்பு: 01-May-2018 , 01:28 AM

வெண்ணிலா எனும் தேவதை - பாகம்-11

images (13)

அன்று இரவு வெண்ணிலா,  சத்யா இருவரும் தூங்கவில்லை. சத்யாவிற்கு மாமாவை பற்றியும், தங்களது காதலை எப்படி எந்தவித பிரச்சனையும் இல்லாமல் மாமாவிடம் சொல்லி சம்மதம் வாங்குவது என்ற கவலையிலும் தூக்கம் வரவில்லை.


வெண்ணிலாவிற்கு சத்யா தன்னை காதலிக்கிறான் என்ற சந்தோசத்திலும் அவனின் முதல் முத்தத்தையும் நினைத்து தூக்கம் வரவில்லை. பக்கத்தில் தேவியோ படுத்ததும் தூங்கிவிட்டாள். இல்லையெனில் அவளிடமாவது ஏதாவது பேசிக்கொண்டு இருந்திருப்பாள். அதிகாலை மூன்று மணியளவில் தான் உறங்கினாள்.


காலையில்  மொபைலின் ரிங்டோன் சத்தத்தில் தான் கண் விழித்தாள். பக்கத்தில் தேவி இல்லை. மணியை பார்த்தாள். எட்டு என காட்டியது. அவசரமாக எழுந்து இவ்வளவு நேரமா தூங்கியிருக்கோம் என நினைத்துக்கொண்டே, மொபைலை எடுக்க சரியாக கால் கட் ஆனது. அப்பாவா இருக்கும் என நினைத்து நம்பரை பார்த்தாள். சிவா அழைத்திருக்கிறான். அப்பொழுது தான் அவளுக்கு ஞாபகமே வந்தது. நேத்து அவனுக்கு போன் பண்ணி பேசாதது. தலையில் கை வைத்துக்கொண்டாள்.


"போச்சு இன்னைக்கு காலைல எழுந்ததும் நல்லா திட்டு வாங்க போறேன் சிவாகிட்ட" என நினைத்துக்கொண்டே அவன் எண்ணுக்கு டயல் பண்ண அவனிடம் இருந்து காலும் வந்தது. எடுத்து, "சாரி, சாரி இப்பதான் எழுந்தேன். இரு பிரஸ் பண்ணிட்டு உனக்கு கால் பண்றேன். நிறைய பேசனும். வெய்ட் பண்ணு" என அவனை பேசவிடாமல் போனை கட் செய்தாள்.


 மாடியில் இருந்து கீழே வந்தாள் வெண்ணிலா. தேவி சுறுசுறுப்பாக பாட்டிக்கு சமையலில் உதவி செய்து கொண்டிருந்தாள். தேவியை பார்த்து வெண்ணிலா


"ஏன்டி என்னையும் எழுப்பிருக்கலாம்ல. நீ எழுந்திரிக்கும் போதே"


"நான் எழுப்பினேன்டி. நீ நல்லா தூங்கின அதான் வந்துட்டேன்"


ஐந்து நிமிசம் வந்துடறேன் என சொல்லிவிட்டு பாத்ரூமில் நுழைந்தாள் வெண்ணிலா. குளித்து முடித்து அவளும் வந்து பாட்டிக்கு சமையலில் உதவி பண்ணினாள். பாட்டிக்கு வெண்ணிலாவை முகத்தைப் பார்த்ததும் ஏதோ மாற்றம் தெரிந்தது.  கண்களிலேயே தேவியிடம், "என்ன ஆச்சு?" என கேட்டார் பாட்டி. தேவிக்கு முதல் நாள் நடந்ததை பாட்டியிடம் சொல்ல சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆகவே வெண்ணிலாவை பார்த்துக்கொண்டே,


"பாட்டி, நேத்து ஒரு விசயம் நடந்துச்சு. ஆனா அதை நான் சொல்லமாட்டேன்ப்பா"  எனக் கூறினாள். வெண்ணிலாவிற்கு தன்னைப் பற்றி தான் பேசுகிறாள் என தெரிந்தது.  "அது வந்து பாட்டி நேத்து அத்தான் வந்து.... வந்து..." என தலையை குனிந்து வெட்க்கப்பட்டாள். பாட்டிக்கு புரிந்தது "ஓ  லவ் பண்றேன்னு அவனே சொல்லிட்டானா அட அவசரபட்டுட்டானே.. உன்னை இன்னும் அலையவிடுவான்ல நினைச்சேன்." எனவும்...


"போங்க பாட்டி நீங்களும் என்னை கலாய்க்கிறீங்க" என பொய்யாக கோவப்பட்டாள். சிரித்துக்கொண்டே பாட்டி அவளிடம்,


"சும்மா சொல்றதுக்குள்ள கோவமா என் செல்லத்துக்கு,  இதையே நினைச்சு தான் நைட் சரியா தூங்காம காலைல லேட்டா எழுந்தயா?” என நமுட்டு சிரிப்புடன் வினவினார்.


அப்பொழுது தான் வெண்ணிலாவிற்கு சிவா கால் பண்ணியதே நினைவிற்கு வந்தது. இரு கையையும் தலையில் வைத்து "அச்சச்சோ சிவா கால் பண்ணினான். இருடா வரேன்னு சொல்லிட்டு அவனை பேசக்கூட விடாம கட் பண்ணிட்டு வந்தேன். செத்தேன் நான். இருங்க பாட்டி அவனிடம் பேசிட்டு வரேன்.” என மொபைலை எடுத்துக்கொண்டு சிவாவின் நம்பருக்கு அழைத்தாள்.


இரண்டு முறை அழைத்தும் கால் எடுக்கவில்லை வெண்ணிலா புலம்ப ஆரம்பித்தாள். ”போச்சு, செம கோவத்தில் இருக்கான் போல ஃபோன் எடுக்கமாட்டேறான்”. என தேவியிடமும் பாட்டியிடமும் புலம்பித் தீர்த்தாள். அரை மணி நேரத்தில் மீண்டும் முயற்சித்தாள் இந்தமுறை ஃபோனை அட்டன் பண்ணிய சிவா இந்தமுறை வெண்ணிலாவை பேசவிடாமல் திட்ட ஆரம்பித்தான்.


"நேற்றில் இருந்து ஒரு ஃபோன் பண்ணுனயா? எரும உங்க அம்மாகிட்ட கேட்டா, அவங்களும் அதையே தான் சொல்றாங்க. அன்னைக்கு பேசின போது மூட் அவுட்டா இருந்த. நேத்தும் கால் பண்ணல. காலைல கால் பண்ணினா என்னை பேசவிடமா கட் பண்ணிட்டு போற. பாட்டி, உன்னோட சத்யா, தேவியெல்லாம் பார்க்கவும் என்னை மறந்துட்ட" என மூச்சுவிடாமல் பேசினான்.


வெண்ணிலா இந்த பக்கம் இருந்து, "முடிச்சாச்சா இன்னும் இருக்கா? இனி நான் பேசலாமா சார்? முதல்ல சாரி சொல்லிக்கிறேன். நேத்து கால் பண்ணாததுக்கு நேத்து கோவிலுக்கு போயிட்டோம்டா அதான் கால் பண்ணல" என கூறி விட்டு சத்யா முதல் நாளே வந்தது, பேசாமல் போனது, நேற்று ப்ரப்போஸ் பண்ணியது எல்லாவற்றையும் கூறினாள். பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த சிவா சந்தோசத்தில் கத்தியேவிட்டான்.


"அப்படினா நீ என்கிட்ட தான் உதவி கேட்கனும். உன்னோட அப்பாவை சம்மதிக்க வைக்கனும். இல்லைனா நான் தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும். அப்பப்பா எவ்வளோ வேலை இருக்கு" என கேலி பண்ண ஆரம்பித்தான்.

வெட்க்கத்தில் முகம் சிவந்தாள் வெண்ணிலா.


"என்னங்கடா ஆள் ஆளுக்கு கிண்டல் பண்றீங்க. போ நான் சாப்பிட போறேன் பசிக்குது" எனவும், "போ போ எப்படினாலும் ஐயா தான் எல்லாம் உனக்கு. போய் கொட்டிக்கோ, வை"  என சிரித்துக்கொண்டே ஃபோனை வைத்தான் சிவா.


இன்னும் என்ன  சத்யாவை காணவில்லை? என  யோசனையுடனே பாட்டியின் அறைக்குள் சென்றாள் வெண்ணிலா. அங்கே சோகமே உருவாக சத்யா அமர்ந்திருந்தான். "என்ன அத்தான் என்ன டல்லா இருக்கீங்க" என்றாள்.


"இல்ல நீ சிவாகிட்ட பேசிட்டு இருந்த, நானும் பாட்டியும் பெட் கட்டினோம். நான் தோத்துட்டேன் அதான் இப்படி உட்கார்ந்திருக்கேன் என கூறினான். வெண்ணிலா இடுப்பில் கை வைத்தபடி முறைத்துக் கொண்டே என்ன பெட் கட்டுனீங்க? எனக் கேட்டாள். ஒரு மணி நேரம் ஆகும் நீ வரதுக்குனு சொன்னேன். பாட்டி இல்ல அரை மணி நேரத்தில் வந்துடுவானு சொன்னாங்க. ரெண்டு பேரும் தோத்துட்டோம். நீ முக்கால் மணி நேரத்தில் வந்துட்ட. என்ன நூறு ரூபாய் போச்சு” என சிரிக்காமல் கூறினான்.


”இந்த நான் தரேன் நூறு.... அடி” என மிரட்டினாள். சத்யா பயந்த மாதிரி நடித்தான். இதை பார்த்த பாட்டி மனதிற்குள் இவர்கள் எப்பொழுதும் இதே சந்தோசத்தோடு இப்படியே நீண்ட நாள் ஒன்றாக இருக்க வேண்டும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டார்.


-ஆனந்தி


முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:


Related Articles