வெளியிடப்பட்ட நேரம்: 07-May-2018 , 06:45 AM

கடைசி தொடர்பு: 07-May-2018 , 06:45 AM

வெண்ணிலா எனும் தேவதை - பாகம்-14

images (13)

பாட்டி அன்று இரவு தீவிர யோசனையில் இருந்தார். சத்யாவும் இரவு சிவாவிற்கு கால் பண்ணினான். தன் யோசனையை கூறினான். இன்னொரு யோசனையை சிவா கூறினான். யார் அந்த மாப்பிள்ளை என விசாரித்து அவரிடம் வெண்ணிலாவின் படிப்பிற்காக பேசுவது என, எப்படியும் வெளிநாட்டில் வேலை பார்பவருக்கு படிப்பின் அவசியம் புரியும் என நினைத்தனர். ஆனால் இப்படி மாமா பார்த்த மாப்பிள்ளையிடம் தான் பேசுவது தெரிந்தால் பயங்கர கோவம் வரும் அதுமட்டுமல்ல ஏற்கனவே அவருக்கு இவர்கள் குடும்பத்தின் மீது கொஞ்சம் ஒட்டுதலும் இல்லை ஆகவே பாட்டியை வைத்து பேச வைக்க முடிவெடுத்தனர். சிவாவின் முதல் வேலை மாப்பிள்ளை வீட்டை பற்றிய விவரங்களை இரண்டு நாளைக்குள் சேகரிப்பது. சிவாவிடம் பேசிய பிறகு சத்யா கொஞ்சம் மனது நிம்மதியுடன் உறங்கச் சென்றான்.

வெண்ணிலாவும், தேவியும் இங்கு சிவாஜி படத்தைப் பற்றி விமர்சனம் பண்ணி அதில் வந்த ஜோக்குகளை சொல்லி சிரித்துக் கொண்டே ஊஞ்சலில் படுத்திருந்தனர். பாட்டி இவர்களின் பேச்சுகளை ரசித்துக் கொண்டிருந்தார். மனதிலோ வெண்ணிலாவை பற்றிய கவலை எப்படி அவளின் அப்பாவிடம் பேசுவது என்ற யோசனையில் ஆழ்ந்தார். இவர்கள் இருவரின் பேச்சும் படிப்பு அதன் பிறகு என்ன ஆசை என நகர்ந்தது.

வெண்ணிலா தேவியிடம் என்ன படிக்க போற அடுத்து என்ன ப்ளான் பண்ணிருக்க என கேட்டாள். அதற்கு
"அவள் பெரிய ப்ளான்லாம் இல்லடி கம்ப்யூட்டர்ல இன்ட்ரஸ்ட் எனக்கு. அதனால், அப்பா இன்ஜினியரிங் சேர்த்தா IT எடுப்பேன் இல்லைனா BSC Computer science எடுப்பேன். எப்படியும் நான் படிக்கறதுக்குள்ள அண்ணனும் படிப்பை முடிச்சுருவான். மெக்கானிக்கல் இன்ஜினியரிங்க்கு எப்படியும் சென்னை இல்லைனா கோயமுத்தூர் தான் வேலை கிடைக்கும். அங்கேயே தங்கி நானும் ஆசைக்கு ஒரு வருசமாவது வேலை பார்த்துட்டு அப்புறம் தான் கல்யாணம் பண்ணிக்கனும்" கண்களில் கனவுகளுடன் அவளுடைய ஆசையை சொல்லி முடித்தாள் தேவி.

உனக்கு என்ன ஆசை சொல்லுடி என வெண்ணிலாவிடம் கேட்டாள். அதற்கு அவள் "எப்படியும் நல்ல மார்க் வாங்கிருவேன். இன்ஜினியர் கனவு எல்லாம் இல்ல எனக்கு. படிக்கனும் எப்படியாவது, சிவா பர்ஸ்ட் மார்க் வாங்கினா டாக்டர். இல்லைனா BSc, Msc, னு சொல்றான். சிவா மாதிரி தான் நானும் மேத்ஸ் டிபார்ட்மெண்ட் எடுக்கனும்னு ஆசை. ஆனா அப்பா தான் படிக்க விடமாட்டேன்னு சொல்றாரே.? ஒரு ஸ்கூல்ல டீச்சராவாவது வேலை பார்க்கனும். ரிசல்ட் வருவதற்குள்ள அப்பாகிட்ட படிக்கறதுக்கு பர்மிசன் வாங்கனும்". கவலையுடன் சொன்னாள் வெண்ணிலா. அடடா, "எங்க வெண்ணிலா இப்படி சோகமா இருக்கக்கூடாது. கவலைய விடு. எப்படியாவது அத்தை உன்னை படிக்க வைக்காம விட மாட்டாங்க. மாமாவிடம் கேட்டு உன்னை காலேஜ் அனுப்புவாங்க வா நாம போய் தூங்கலாம்" என இருவரும் மாடிக்கு தூங்கச் சென்றனர்.

மறுநாள் காலையில் சத்யா வெண்ணிலாவும், தேவியும் எழுந்து வருவதற்குள்ளேயே பாட்டியை காண வந்தான். இரவு சிவாவிடம் பேசியதையும் அவனின் யோசனையையும் பாட்டியிடம் சொல்லி
"நீங்க தான் பாட்டி அந்த மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசனும். எப்படியும் சிவா நாளைக்குள் எல்லாம் விசாரிச்சுடுவான். இல்லைனா நீங்க அத்தையிடம் அவங்களுக்கு தெரிஞ்ச விவரங்கள் என்னனு கேளுங்க பாட்டி"என்றான் சத்யா.

"சரிடா நான் கேட்கிறேன். அதுக்குள்ள இவள்களை எங்கையாவது வெளில கூப்பிட்டு போ. நான் உன் அத்தையிடம் கேட்க்கிறேன்" என்றார். எங்கே அழைத்துச் செல்வது என யோசித்துக் கொண்டிருந்தான் சத்யா. அதற்குள் தூங்கி எழுந்து மாடியில் இருந்து வந்த இருவரும் சத்யாவைப் பார்த்து ,

"என்ன ஒரு அதிசயம் அத்தானுக்கு இன்னைக்கு சீக்கிரம் விடிஞ்சுருச்சு" என வம்பிழுத்தாள் வெண்ணிலா. சத்யா இன்றைக்கு "எங்கே ஊர் சுத்தலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு போகவா? இல்ல, நான் மட்டும் என் ஃப்ரண்ட்ஸ்களோட போகவானு திங்க் பண்றேன்".

ஃப்ரண்ட்ஸ்களோட போனா நல்லா சைட் அடிக்கலாம். உங்கள கூப்பிட்டு போன ரெண்டு பேரையும் பாதுகாக்கவே நேரம் பத்தாது. அதான் என்ன பண்ணனு தெரியல.? "ஓ இப்படிலாம் வேற ஆசை இருக்கா, மனசுல ஆமா அப்படி எங்க போகப்போறிங்க" என கேட்டாள் வெண்ணிலா. "பக்கத்து ஊர் கீழனூர் மாரியம்மன் திருவிழா இன்னைக்கு ஆரம்பம். அதான் போகலாம்னு நினைச்சேன். வரீங்களா, ரெண்டு பேரும் என் ஃப்ரண்ட் வீட்ல இன்னைக்கு கிடா வெட்டாம். போய் ஒரு பிடி பிடிச்சுட்டு சாயங்காலம் வரலாம்" என்றான். திருவிழா என்றாலே ஒரு சந்தோஷம் தான் எப்பவும் வெண்ணிலாவிற்கும், தேவிக்கும் அதனால் உடனே சரி என தலையாட்டினர் இருவரும். பாட்டி சத்யாவை ஆச்சர்யமாக பார்த்தாள். இந்த சிறு வயதில் எவ்வளவு பக்குவமாகவும், புத்திசாலித்தனமாகவும் யோசிக்கிறான் என வியந்தார்.

இருவரும் திருவிழாவிற்கு கிளம்பச் சென்றனர். அப்பொழுது பாட்டி சத்யாவிடம் "எப்படிடா உனக்கு திருவிழா யோசனை வந்தது" என கேட்டார். சத்யா, "ஊரில் இருந்து வந்த அன்னைக்கு என் ஃபிரண்ட் விமல் வரச் சொன்னான் பாட்டி. அது ஞாபகம் வந்துச்சு. அதான் சொன்னேன் நீங்க அத்தைக்கு கால் பண்ணி முதல் வேலையா பேசுங்க. அப்புறம் என்ன பண்றதுனு யோசிப்போம்" என்று கூறி விட்டு திருவிழாவிற்கு ரெடியாகச் சென்றான்.

திருவிழாவிற்கு என்ன ட்ரெஸ் போடலாம் என தேவியும், வெண்ணிலாவும் தீவிரமான ஆலோசனையில் இருந்தனர். எப்பொழுதும் நாம சுடிதார் தான் போடுறோம். இன்னைக்கு பாவாடை தாவணி போடலாம் என வெண்ணிலா கூறினாள். ஊரிலும் எப்பவும் தாவணி அணிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அவளுக்கு. எப்பொழுதும் ஊருக்கு வந்தால் தான் திருவிழா சமயத்தில் தான் தாவணி அணிவது. அதனால் இன்றும் தாவணி அணிய முடிவு பண்ணினாள் வெண்ணிலா. இருவரும் தயாராகி வந்தனர் இருவரையும் தாவணியில் பார்த்த பாட்டி திருஷ்டி கழித்தார். சத்யாவும் அந்த நேரம்தான் இருவரையும் அழைத்துச்செல்ல உள்ளே நுழைந்தான். வெண்ணிலாவை தாவணியில் பார்த்த சத்யா உண்மையில் அசந்து போனான். அவனுக்கு பிடித்த வெளிர் நீல கலரில் தேவதையாகத் தெரிந்தாள். மேகத்தில் இருந்து இறங்கி வந்தவள் போல தெரிந்தாள். சற்று நேரம் அவளை பார்த்துக்கொண்டே மெய் மறந்து நின்றான். தேவியும் அழகில் குறைந்தவள் இல்லை அவளும் லைட் ரோஸ் நிறத்தில் தாவணி அணிந்திருந்தாள். அவளுக்கு அந்த நிறம் மிக எடுப்பாகத் தெரிந்தது. இருவரையும் பார்த்ததும் சத்யாவிற்கு புதுக் கவலை வந்தது இருவரையும் பத்திரமாக அழைத்துச் சென்று வரவேண்டுமே.

அவர்கள் இருவரையும் பார்த்து, "திருவிழாவிற்கு போகலாம்னா என்னமோ கல்யாண பொண்ணு மாதிரி அலங்காரம் பண்ணிருக்கீங்க. திருவிழாவில் நான் ஜாலியா சைட் அடிக்கலாம்னு பார்த்தா உங்களுக்கு பாடிகாடா மாத்திட்டிங்களே! என்னடா இந்த சத்யாவிற்கு வந்த சோதனை"! என்றான். வெண்ணிலா உடனே, "சத்யாவை முறைத்து நான் இருக்கும் போது சைட் அடிக்க ஆள் தேடுவீங்களா" என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி முணுமுணுத்தாள். சத்யா உடனே பாட்டியிடம் "பாட்டி நான் திருவிழாவுக்கு பத்திரமா போய்ட்டு திரும்ப வரனும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கோங்க, தெரியாதனமா யாரையாவது பார்த்தா கூட உங்க பேத்தி என்னை எரிச்சுடுவா போலயே" என பயந்தமாதிரி நடித்தான். இதை பார்த்ததும் அனைவருக்கும் சிரிப்பு வந்தது. சிரிப்பினூடே மூவரும் திருவிழாவிற்குக் கிளம்பிச் சென்றனர்.

-ஆனந்தி

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் :

https://kalakkaldreams.com/vennila-enum-thevathai-by-ananthi-part-12-2/

Related Articles