வெளியிடப்பட்ட நேரம்: 20-Nov-2018 , 10:51 AM

கடைசி தொடர்பு: 20-Nov-2018 , 10:51 AM

யார் இவர்கள்?

images (23)

எனக்கு முந்தைய தலைமுறை ஒன்று இருந்தது. கார்த்திகேயேன், கனகராஜ், தேவா, ராஜா, செந்தில் மற்றும் பலர். எல்லாம் மாமன், மச்சான், பங்காளி வகையறா. 15-20 பேர் கொண்ட குழு அது. பாதிபேருக்கு மேல் முதல் தலைமுறை பட்டதாரிகள். மீதி பேர் படிப்பு வராமல் நடுநிலை பள்ளி, மேனிலைப்பள்ளியோட கல்வியை நிறுத்திக் கொண்டவர்கள்.

மாலை நேரங்களில் டியூசன் எடுப்பார்கள். கபடி விளையாடுவார்கள், வாலிபால் விளையாடுவார்கள். திடீரென ஊரை சுத்தம் செய்ய கிளம்பி விடுவார்கள். ஆனாலும் ஊரில் ஒருத்தருக்கும் நல்ல பேர் கிடையாது. "அவன் கூட எல்லாம் சேராத. உருப்படாம போயிடுவ" இது எல்லார் வீட்லேயும் தேசியகீதம். எந்த அறிவுரையும் காதில் வாங்காமல் சூரியன் உதித்தாலும், சூரியன் மறைந்தாலும் குறைந்தது 4பேரையாவது ஒன்றாக பார்க்கலாம்.

ஊரில் நடக்கும் பிரச்சனைகளில் பாதி இவர்களால் உருவாகும். மீதி பாதி பிரச்சனை இவர்களால் தீரும். அதனால் இவர்களை ஒதுக்கி வைக்கவும் முடியாது. சேர்த்துக் கொள்ளவும் முடியாது.

இப்படியான ஒரு குழுவை முகநூல் வந்த போது கண்ணில் பட்டது. கிண்டலும் கேலியும் சில இடங்களில் ரசிக்கும்படியாக இருந்தாலும், சில இடங்களில் கெட்ட வார்த்தைகள் கூசும்படியாக இருக்கும். இவர்களும் மெத்தப்படித்தவர்கள். பெண்ணிய போராளிகளின் பதிவுகளில் இவர்களை ஒருத்தராவது பார்க்கலாம். அரைவேக்காட்டு பெண்ணிய பதிவுகளில் இரண்டு அல்லது மூன்று பேரையாவது பார்க்கலாம்.

ஒன்று சிறப்பான வாதமாக இருக்கும். இல்லையென்றால் கடுமையான வார்த்தைகளில் மோதலாக இருக்கும். "இவ்வளவு நாள் நல்லா இருந்த. இப்போ பெண்களை மோசமாக திட்டி பதிவும், பின்னூட்டமும் போடுற. பெண்களை பத்தின புரிதல் இல்லை. அதனால அன்பிரண்ட் பண்ணுறேன்னு" நிறைய பதிவுகளில் நன்கு பழகிய பெண்களே நட்பிலிருந்து விலகி போவதை பார்த்திருக்கிறேன். பெண்கள்/பெண்களை பற்றிய பதிவுகள் என்று இல்லாமல் இவர்கள் நட்பு வட்டத்திலே மோசமாக கலாய்த்துக் கொள்வதும் உண்டு. ஆண்/பெண் உறுப்புகளை குறிப்பிட்டு திட்டிக் கொள்வதும், கொஞ்சிக் கொள்வதும் சிலரின் பொழுதுபோக்கு. அடுத்த நாளோ அடுத்த பதிவிலோ மிக சகஜமாக பேசிக் கொண்டு இருப்பார்கள்.

பெரும்பாலருக்கு இவர்களை நட்பு வட்டத்தில் வைத்திருப்பதால் நிறைய அறிவுரைகள் இலவசமாக கிடைத்தது உண்டு. யார் இவர்கள்? எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்றால்......? பதில் கொஞ்சம் கடினம் தான். ரமணா படத்தில் வருவது போல இவர்கள் உலகமெங்கும் வியாபித்து இருக்கிறார்கள். பல்வேறு துறைகளில் இருக்கிறார்கள். பொழுதுபோக்கு முதல் இலக்கியம் வரைக்கும் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த குழுவிற்கு உம்மா பாய்ஸ் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.விஜயகுமார் எனபவரால் உருவாக்கப்பட்ட இந்த குழு, மற்றவர்கள் பார்வைக்கு தெரியும்படியாக முதன்முறையாக சமூக பணிகளில் இறங்கி இருக்கிறது. (இதற்கு முன்பு சமூக பங்களிப்பு இருக்கலாம். பரவலாக வெளியே தெரிந்தது இல்லை). கஜா புயலின் தாக்கத்தில் தத்தளிக்கும் மக்களுக்காக உம்மா பாய்ஸ் குழுவினர் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். இந்த குழுவிற்கு விஜயகுமார் தலைவராக இருந்தாலும், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர் என்ற பதவிகளும் உண்டு. குழுவில் சேருவதற்கு நிபந்தனைகளும், படிவமும் உண்டு. முரட்டு பசங்க என்று பெயர் எடுத்தவர்கள் பொது பணியில் அதுவும் மக்களுக்கான நிவாரண பணிகளில் ஈடுபட்டு இருப்பது பொதுவெளியில் பலரை ஆச்சரியப் படுத்தி இருக்கிறது.

முதலில் குழுவின் உதயகுமார் கிளம்ப, உடன் கை கோர்த்தவர் ஆசாத் அஸார். இவர்களுடன் தஞ்சையிலிருந்து ரமேஷ் இணைய முதல் நாள் நிவாரண பொருட்களை கொடுக்கும் பணி தொடங்கியது. இடையூர், ஆலங்காடு, உப்பூர், முத்துப்பேட்டை, பஞ்சனதிக்குளம், அதிராம்பட்டினம், வேதாரண்யம் பகுதிகளில் நிவாரண பொருட்களை கொடுத்து உதவி இருக்கிறார்கள். முகனூலில் "இந்த பசங்களா" என ஏளனமாக பார்த்தவர்களும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் கணிசமான தொகை சேர்ந்து இருந்தது.இரண்டாம் நாளுக்கான பணியில் உம்மா பாய்ஸ் குழுவை உருவாக்கிய விஜயகுமார், ஜெபஸ், வருண், நாகேந்திரன் ஆகியோர் களத்தில் இறங்கி உள்ளனர். இன்று பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற பகுதிகளில் அடுத்த கட்ட களப்பணியை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

பொறுப்பற்ற இளைஞர்கள் என்று பார்க்கப்பட்ட சமூக தளத்தில் எல்லாருக்கும் உதாரணமாக களம் கண்டு இருக்கும் இளைஞர் பட்டாளம் இனி வரும் பேரிடர் காலங்களிலும் சமூகப்பணியில் முன்னணியில் இருக்கும் என்பது ஐயமில்லை. ஏளனப்பார்வை, ஒதுங்கி போகும் நபர்கள், மோசமாக சித்தரிக்கபடுதலை ஊக்குவிக்கும் மக்கள் மத்தியில் உம்மா பாய்ஸ் குழு நன்மதிப்பை பெற்று இருக்கிறது. வாழ்த்துகள் உம்மா பாய்ஸ் குழுவிற்கு.

உதவும் உள்ளங்களின் தொடர்புக்கு

உதயகுமார் - 6379236784
விஜயகுமார் - 9994117422

பண உதவி செய்ய நினைப்பவர்கள் கீழ்க்கண்ட வங்கி கணக்கில் பணத்தை செலுத்தலாம்.

Udayakumar 50100246196902
Hdfc bank by pass road branch madurai
ifsc code HDFC0002409
PH..no. 63792 36784

-ராஜி

Related Articles