சின்னாயா – பாகம் -5

0
40

பொதைச்சு வெச்ச பனங்கொட்டை மொளைப்பு விட்டுச்சுனா அத மண்ணுல இருந்து ரெண்டா வெட்டி உள்ள இருந்து பருப்பு எடுத்து சாப்பிட்டா ஆகா.

இயற்கை கொடுக்கிற சுவையை எந்த  சமையல்காரராலும் தரமுடியாது. அப்புறம் பனங்கிழங்க வேக வெச்சு சாப்பிடுவோம். எலி பிடிக்கறவங்க வந்தா எங்களுக்கு அவ்வளவு குஷி கூட ஓடறதுல.

மொதல்ல வங்கு எங்கெங்க இருக்குனு பார்த்துக்குவாங்க. அப்புறமா அங்கங்க கிடக்கிற கல்லக்கொடியை எடுத்து வங்க அடைச்சிட்டு அதை தள்ளாத மாதிரி காட்டுவரப்போரத்துல கிடக்கிற கல்லு எல்லாம் வெச்சிடுவாங்க. அப்பறம் மிச்சம் இருக்கிற ஒரு வங்குல பொகை மூட்டுவாங்க. ஒரு அஞ்சு நிமிசம்  அவ்வளவு தான் அதுக்குள்ள பொகை அந்த வங்கு தடம் எங்கெங்க இருக்கோ அது வழியா அடைச்சு வெச்ச கல்லக்கொடி சந்துல வெளிய வரும்.

ஒருவேளை எதைச்சும் வங்கை கவனிக்காம விட்டு இருந்தா அது வழியா எலி சும்மா பிச்சுக்கிட்டு ஓடும். உடனே ஒரு ஆளு ஓடி அந்த வங்கையும் அடைச்சிட்டு எலியை தொரத்த ஆரம்பிச்சுடுவார். இன்னொருத்தரு விடாம பொகை போடுவாரு. எல்லா வங்குலயும் பொகை நல்லா வெளிய வர்றவரைக்கும் விட்டுடுவாங்க. அப்பறம் அந்த பொகை போட்ட வங்கை அடைச்சிட்டு ஒரு ஒரு வங்க போய் மம்முட்டியால வங்கை வெட்டுவாங்க.

இன்னொரு ஆள் சாக்குப்பைய கைல வெச்சுக்கிட்டு ரெடியா நிப்பாரு. ஏன்னா எல்லா எலியும் பொகைல மயங்கி கிடக்காது ஒரு சில கிராதக எலிக தாக்குப்பிடிச்சு ஓட வழி தேடிட்டு இருக்கும். மண்வெட்டியால வெட்டி சந்து பெருசாச்சுனா குபீர்னு கால் சந்துல பூந்து ஓடப்பார்க்கும். அத கைல இருக்கிற கோணி சாக்கால அடிச்சா சமாளிக்க முடியாம விழுந்திடும்.

அந்த வங்கு தடத்தை முழுசா பறச்சு மயங்கிக்கிடக்கிற எலிகளை எடுத்து சாக்குல போட்டுட்டு அடுத்த காட்டுக்கு நடப்பாங்க. அவங்க கூட சுத்தும் போது நேரம் போறதே தெரியாது. பள்ளக்காடு இல்ல பெரியாயா காடு வரை மட்டும்தான் கூட சுத்துவோம்.

மத்தவங்க காட்டுக்கு போனாலும் எதும் சொல்லமாட்டாங்க கோவில்ல குறி கேட்க வரதால எல்லாருக்கும் எங்கள யார்னு தெரியும். அப்படி இப்படினு நாலு நாள் ஆனதும் அப்பா வருவாங்க எங்களக் கூட்டிட்டுப் போக. போகும் போது பச்ச கல்லக்கா வேவிச்சு சாப்பிட ரெண்டு வயர் கூடைல நிறையா,  காய வெச்ச கல்லக்கா வறுத்து சாப்பிட சட்னிக்குனு அரை மூட்டை. கொட்டக்காய் கம்பு இப்படி எல்லாம் வண்டில கட்டிக்கிட்டு எங்கள கூட்டிட்டு போவாங்க.

இப்படித்தான் போய்ட்டு இருந்துச்சு எங்க ஸ்கூல் லீவு ஒரு காலகட்டம் வரை. அடுத்து வந்த ஒரு சில நிகழ்வுகள் எல்லாத்தையும் மாத்திடுச்சு.

இனிமே அந்த நாட்கள் எவ்வளவு கொடுத்தாலும் கிடைக்கப் போறது இல்லை. இந்த இனிமையான நிகழ்வுகளோட சேர்த்து அந்த கசப்பான நிகழ்வுகளும் மனசுல பதிஞ்சிடுச்சு

-சிரித்தே தொலைப்பவன்

26574total visits,1visits today