சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

0
51

பெண் சிசுவைப் பிறக்க விடக்கூடாது என்ற பழமையான கண்ணோட்டத்துக்கு, நவீன கண்டுபிடிப்பு கருவியும் துணைபோவது தான் துயரம். தப்பி தவறி பிறக்கும் பெண் குழந்தைகளும் ஒவ்வொரு கட்டத்திலும் தப்பிப் பிழைத்து வளர்ந்து, வாழ்ந்து மறைய வேண்டியிருக்கிறது.

உடை, படிப்பு, விளையாட்டு பொருள் என ஒவ்வொரு விஷயத்திலும் புறக்கணிப்பை சந்திக்கும் பெண் குழந்தை இளமையிலிருந்தே ஒவ்வொரு தடைகளையும் கடந்து தான் வளர்கிறாள்.

பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011ஆம் ஆண்டு ஐ.நா. சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

‘பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்” என்பது இத்தினத்தின் மையக்கருத்து ஆகும். மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணி பாட்டிற்க்கிணங்க பெண் குழந்தைகள் தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பெண் குழந்தைகள் அதிகளவில் கல்வி பெறுவதற்கு, அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பெற்றோர்களின் பங்கு முக்கியம். வீட்டை விட்டு வெளியே செல்கிற பெண் குழந்தைகள் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எத்தகைய பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதை கட்டாயம் கற்றுத்தர வேண்டும்.

இந்தக் காலத்தில் ஆணும், பெண்ணும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலை வந்து விட்டது. வேலைக்கு போகிறோம், சாம்பாத்திக்கிறோம், என்று சொல்லிக்கொண்டு பெண் குழந்தைகளை அலட்சியமாக விட்டு விடுதல் கூடாது.

பெண் குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தாய்மார்கள் கவனிக்க வேண்டும். அதற்கென்று எதற்கெடுத்தாலும் கண்டிப்பு கூடாது. பெண்குழந்தைகளுக்கு கற்றுத்தருவது போல் ஆண் குழந்தைகளையும் சிறுவயது முதலே விழிப்புணர்வுடன் வளர்க்க வேண்டும். பெண் குழந்தைகளை 18 வயது நிறைவதற்கு முன் திருமணவாழ்கையில் தள்ளப்படுவது தவறு. இவை இன்று சதவிகித அளவில் குறைந்தாலும் இன்றளவும் சரியான தீர்வினை எட்டவில்லை.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 336 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்றப்பிரிவு மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளிப்பால் கலாச்சாரமும், கரும்பலகை இல்லா மாநிலமும் இன்றளவும் இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றன. இவை தடுக்கப் பட்ட போதிலும் இன்னும் வேர்கள் களையவில்லை. எனவே பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளை போல் சமமாக நடத்தி அவர்களின் வாழ்விற்கும் நாமும் துணையாக நிற்போம்.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம். கல்வி அளிப்போம். வருங்கால சமூகத்தை ஆரோக்கியமானதாக கட்டமைப்போம்.

-வினோ

681total visits,1visits today