கதிர் குறள் -1138

0
97

“பிளிஸ்டா, என் செல்லம்ல”

“என்ன ஆச்சு உனக்கு? ஏன் மாமா இப்படி பண்ற?”

“நான் இது வரைக்கும் உன்கிட்ட ஏதாவது இப்படிக் கேட்டுருக்கனா?”

“அதனால தான் கேட்கறேன், நீ ஏன் இப்படி கேட்கற? உன்னை எவ்ளோ நல்லவன்னு நம்பிட்டுருக்கேன் தெரியுமா?”

“ஹேய், என்ன? லவ் பண்ற பொண்ணுகிட்ட முத்தம் கேட்டா நான் கெட்டவனாகிருவனா?”

“நீ கேட்கலனாலுமே நான் குடுப்பேன் மாமா. ஏன் இது வரைக்கும் கொடுத்தது இல்லையா? அதுக்காக இப்பவா? மணி என்ன பார்த்தியா, விடியக்காத்தால 3.30 மணிக்கு வீட்டுக்கு முன்ன வந்து நின்னுகிட்டு போன் பண்ணி கூப்பிட்டா நான் எப்படி வருவேன்”

“அதான் சொன்னனே…… ஒரு கனவுடா, உன் கூட வாழ்ந்த மாதிரி இருந்தது. டக்னு முழிச்சுட்டேன். எனக்கு உன்னை பார்த்தே ஆகனும் போல இருந்தது. கிளம்பி வந்துட்டேன்”

“பக்கத்து தெருவுல இருந்து வந்ததை பெருசா பேசாத மாமா. நான் எப்படி வெளியே வரட்டும்? பாட்டி ஹால்ல தான் படுத்துருப்பாங்க. கதவு திறந்தா சத்தம் கேட்கும். என் ரூமை விட்டு வெளியே வந்தாலே தெரிஞ்சுரும்டா”

“அதெல்லாம் தெரியாது, நீ வாடா குட்டி”

“மாமா, உனக்கு நல்லா தெரியும். எங்கப்பா உன்னை பத்தி எவ்வளவு நல்ல விதமா நினைச்சுட்டுருக்கார்னு இப்ப, ஏதாவதுன்னா நாளைக்கு எப்படிடா வந்து படியேறி பொண்ணு கேட்ப?”

“இங்கே பாரு. நான் உன்னை தப்பு பண்ண கூப்பிடலை. வா வந்து என்னை பார்த்ததும் போயிரு. யாராவது கேட்டா தூக்கம் வரலை. சும்மா நடந்து வந்தேன்னு சொல்லி சமாளிச்சுக்கலாம்”

“டேய் மாமு, இவ்ளோ ரிஸ்க் எடுக்கனுமா?”

“ஏய் அடிக்கடி நாம ரெண்டு பேரும் புருசன் பொண்டாட்டின்னு சொல்லுவ தானே”

“ஆமா”

“புருசன் பொண்டாட்டியை பார்க்கனும்னு நினைக்கறது தப்பா? இதுக்கு ரிஸ்க் எடுக்காம வேற எதுக்கு எடுக்க போற?”

“என்னவோ, ஏதாவது பிரச்சனை ஆச்சு, நான் என்ன செய்வேன்னு உனக்கே தெரியும், பார்த்துக்கோ”

“பேசிட்டிருக்க நேரத்துக்கு நீ வந்துட்டே போயிருக்கலாம்”

“சரி, வரேன்…. வை”

ராதிகாவிற்கு மனம் ஒப்பவேயில்லை. சில நேரங்களில் நமக்கு நடக்க போவது முன்பே தெரியும். இதோ இப்போது நம் காலை இடித்துக் கொள்ள போகிறோம், சுவற்றில் மோதப் போகிறோம் என்றெல்லாம் தோன்றினாலும் மூளை அதை உணர்ந்து தடுப்பதற்குள் அது நிகழ்ந்து விடும். இப்போதும் அப்படித்தான். ராதிகாவிற்கு ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பது நன்றாக தெரிகிறது. இருந்தும் மறுக்க முடியவில்லை. அதற்கு காரணம் அரவிந்த் தான். அந்த ஊரில் அனைவருக்கும் அவனை தெரியும். பிள்ளைகளிடம் இவனைப் போல நன்றாக படிக்க வேண்டும், அனைவரிடமும் நற்பெயர் எடுக்க வேண்டும் என்று சொல்லித்தான் வளர்ப்பார்கள். அவ்வளவு மென்மையானவன், படிப்பாளி, கேட்போருக்கு உதவும் குணம் கொண்டவன். வேலை கிடைத்தும் வீட்டிற்கு ஒரே பிள்ளையாதலால் வெளியூர் எங்கும் செல்லாமல், சொந்த ஊரில் கம்யுட்டர் சென்டர் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறான்.

ராதிகா ஒரு வகையில் அரவிந்திற்கு சொந்தம் தான். அவனது சென்டருக்கு படிக்க வந்த பின் தான் இருவரும் பழக துவங்கினார்கள். தனிமையில் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தும் கண்ணியமாய் நடந்துக் கொண்ட அரவிந்த் இப்படி அதிகாலை வந்து அழைப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அவனுக்கு ஒரு கனவு. அதில் ராதிகா விபத்தில் இறப்பது போல வரவும் வெடுக்கென எழுந்து விட்டான். எழுந்த பின்னும் பதட்டம் குறையவில்லை. 3 மணி என்பது அதிகாலையா, நள்ளிரவா என்று தெரியவில்லை. காலையில் கண்ட கனா பலிக்கும் என்பார்களே எனும் பயம். அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அந்நேரத்திற்கு யாரிடம் கேட்பதென்றும் தெரியவில்லை.

ராதிகாவிற்கே போன் செய்தான். முதல் இரண்டு முறை அடித்து அவள் எடுக்கவில்லை என்றதும் முழுவதும் இருப்புக் கொள்ளவில்லை. கிளம்பி அவள் வீட்டருகே வந்து விட்டான். மீண்டும் முயற்சிக்கையில் அவள் போனை எடுக்கவும் கனவினை முழுதாக சொல்லவில்லை. வெறுமனே கனவு, முத்தம் அது இது என குழப்பி உடனே பார்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வர சொன்னான். ராதிகாவிற்கு அரவிந்த் ஒரு மாதிரி வித்தியாசமாக நடந்துக் கொள்வதே புதிதாக இருந்தது, அவனுக்கு என்னவோ ஆகிவிட்டது என தோணவும் என்ன நடந்தாலும் பரவாயில்லை என கிளம்பினாள்.

எந்த ஒரு விஷயத்திற்கும் முன் அனுபவம் வேண்டும். அதுவும் தவறு செய்பவர்களுக்கு கட்டாயம் வேண்டும். ராதிகா இது போல் செய்து பழக்கமில்லை. கதவை எப்படி சத்தம் வராமல் திறப்பது என்றே தெரியவில்லை. அவள் அறைக்கதவை திறக்கும் பொழுதே அவள் தந்தை விழித்துக் கொண்டார். பொறுமையாக யாரோ படியில் இறங்கி வரும் ஒசையை அவரால் கேட்பதை விடவும் ஒருவாறு நன்கு உணர முடிந்தது. திருடனோ என்னவோ என மெதுவாக எழுந்து சத்தமின்றி அறையை விட்டு வெளியே வந்து பார்த்தால், மகள் பதுங்கி சென்று கொண்டிருக்கிறாள். அவள் இயல்பாக சென்று இருந்தால் கூட இவர் “என்னம்மா, எங்கே போற?” என கேட்டுருப்பார், ஏதேனும் பொய்யுரைத்திருக்கலாம், இவள் ஒரு மாதிரி மெதுவாக அடிமேல் அடி வைத்து செல்லவும், அவர் ஏதும் கேட்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

ராதிகா வெளியே வந்ததும், அரவிந்த் அவளை இழுத்து தூணுக்கு பின் நிற்க வைத்தான்.

“என்னாச்சு மாமா”

“ஒன்னுமில்லை, சும்மா பார்க்கனும் போல இருந்தது”

“நம்பற மாதிரி சொல்லு மாமா”

என்று முடிக்கும் போது அவள் அப்பா வந்து விட்டார். ஒரு நொடிதான், என்ன செய்ய ஏது செய்ய என்று இருவருக்கும் புரியவில்லை. ராதிகாவாவது சிரமப்பட்டு “அப்பா..” ஏதோ சொல்ல ஆரம்பித்தாள். அரவிந்துக்கு பேச்சே வரவில்லை. அவர் தான் பேசினார்.

“நீ உள்ள போ, நின்னினா அறை விழும்” ராதிகாவிற்கு தன் தந்தையை பற்றி தெரியும். தலை குனிந்தவாறு உள்ளே சென்று விட்டாள். அரவிந்தை பார்த்தார்.

“தம்பி, உனக்கே நல்லா தெரியும். இந்த இடத்துல வேற யாரையாவது பார்த்துருந்தா இதே தூண்ல கட்டி வச்சு தோலை உரிச்சுருப்பேன். அப்படி செய்யாம இருக்கறதுக்கு காரணம் உன் மேல நான் வச்சுருந்த நம்பிக்கை. உங்கப்பா மேல வச்சுருக்க மரியாதை. அதுக்காக இதை அப்படியே விட முடியாது. நீ போய் உன் வீட்ல நடந்ததை சொல்லி, உங்கப்பாவை கூட்டிகிட்டு வீட்டுக்கு வா, கிளம்பு, வாய்ல சொல்லும் போதே போயிடு”

தலை குனிந்த வண்ணம் வந்து விட்டான். வீட்டை தாண்டிய பின் கால்கள் நகர மறுத்தன. எப்படி வீட்டிற்கு செல்வது? சென்று அப்பாவிடம் என்ன சொல்வது? காதலிக்கிறேன் என்று சொன்னால் கூட பெரிதாய் பிரச்சனை எழாது. ஆனால் இப்படி இருட்டில் அவளை சந்திக்க வந்ததை எப்படி சொல்வேன்? சொல்லித்தான் தீர வேண்டும், இல்லையென்றால் ராதிகாவின் அப்பா சும்மா விடுபவர் கிடையாது. அவர் எதுவும் செய்ய தேவையில்லை, வெறுமனே நடந்ததை வந்து அப்பாவிடம் சொன்னாலே போதும், அப்பா உடைந்து விடுவார். இதுவரை அவர் எனக்காக பள்ளிக்கோ கல்லூரிக்கோ கூட வந்து யார் முன்னும் நின்றதில்லை. கடவுளே என்ன இது சோதனை, எனக்கு ஏன் இப்படி ஒரு கனவு வர வேண்டும்? அவள் ஏன் போனை எடுக்காமல் இருக்க வேண்டும்? நான் அவள் வீட்டிற்கு செல்ல வேண்டும்? இப்பொழுது என்ன செய்ய?

யோசித்துக் கொண்டே தன் வீட்டிற்கு வந்த அரவிந்தை அவன் தந்தை தான் வரவேற்றார்,

“எங்கடா போன? வாசக்கதவை திறந்து விட்டுட்டு?”

ராதிகாவை பார்க்க சென்ற அவசரத்தில் கதவை திறந்து விட்டு வந்துவிட்டான். காற்று பலமாக அடிக்கவும் கதவு டமாரென சாத்திக் கொண்ட சத்தம் கேட்டு அவன் அப்பா எழுந்து விட்டார். யார் கதவை திறந்திருப்பார்கள் என யோசித்துக் கொண்டே வெளியே வந்தால் அரவிந்த் வந்து கொண்டிருக்கிறான். இனி அவரிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை. முதலில் அவரே கேட்கும்படி விதி அமைந்துவிட்டது.

முழுவதையும் கேட்ட பின் அவர் விரக்தியாய் சிரித்து விட்டு “சரி நீ போய் குழப்பிக்காம படுத்து தூங்கு, 8 மணிக்கு மேல 2 பேரும் போலாம்” என்று ஆறுதல் சொல்லி அவனை படுக்க வைத்தார். சற்று நேரத்திற்கு பின் அவனுக்காக காத்திருக்காமல் தனியாக ராதிகா வீட்டிற்கு கிளம்பினார்.

அரவிந்தின் தந்தைதான் வயதில் மூத்தவர், அவரை எப்போதும் மாமா என்று தான் ராதிகாவின் தந்தை அழைப்பார். பெண் விஷயம் இப்படி ஆனப் பின் அவருக்கு உறக்கம் வராது என்று புரிந்ததால் தான் உடனே பார்க்க சென்றார். நேரம் கடத்தினால் மனப்பாரம் தாங்காமல் விஷயத்தை யாருடனாவது பகிர்ந்துக் கொள்வார். அப்படி கேட்பவனில் நல்லவனும் இருப்பான் கெட்டவனும் இருப்பான். அது இரண்டு குடும்பத்திற்குமே நல்லதில்லை.

வீட்டிற்கு முன் நின்று போனடித்து ராதிகாவின் தந்தையை வெளியே வர சொல்லி, முதலில் கையை பிடித்து மன்னிப்பு கேட்டார். பொறுமையாக என்ன நடந்தது என்று விளக்கினார். இறுதியாக “உனக்கு விருப்பம் இருந்தா சொல்லுப்பா, நாளைக்கே தட்டு மாத்திக்கலாம்” என்றார்.

“எனக்கு என்ன மாமா? தாராளமா மாத்திக்கலாம், தம்பி இப்படி செய்யும்னு என்னால நம்பவே முடியலை, நீங்க வந்து கேட்காம தம்பியே வந்து கேட்டுருந்தாக் கூட நான் பொண்ணு கொடுத்துருப்பேன். அவ்வளவு நம்பிக்கை வச்சுருந்தேன். ஒரு மாதிரி சங்கடமா ஆயிருச்சு மாமா”

“மாப்பிள்ளை, இதெல்லாம் வயசு வேகம், காதல், அவன் தப்பான எண்ணாத்தோட வரலை. உனக்கு தெரியாதது ஒன்னுமில்லை. இந்த காதல் சமாச்சாரம் இருக்கே அது இவன் நல்ல பையன், நல்ல குடும்பம் இவனுக்குள்ள வந்தா அவமானம்னு நினைச்சு பார்த்து விட்டு வைக்கவா போகுது. அதெல்லாம் யார் என்னன்னுலாம் பார்க்காதுப்பா”

அதிகாரம்: நாணுத்துறவு உரைத்தல்  குறள் எண்:1138

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறைஇறந்து மன்று படும்

உரை: இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காதல் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!

-கதிர் ராத்

491total visits.