செய்திகள்

இந்திய ரசிகர்களின் தாதா - செளரவ் கங்குலி

1992இல் முதலில் ஒரு நாள் போட்டியில் அறிமுகமான கங்குலி, கால் தரையில் படாதவாறு ஓடிக்கொண்டிருந்த இந்திய அணி பீல்டர்களுக்கு தரையில் புரண்டும், பாய்ந்தவாறு பந்தை பிடிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்த முன்னோடியாக திகழ்ந்தார். ஆரம்ப காலகட்டத்தில் கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளில் பேட்டிங்கில் பெரிதாக தாக்கத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், அற்புத பீல்டர் என்ற கவனத்தை ஈர்த்தார்.

இதன் பின்னர் 1996ல் டெஸ்ட் ஆடும் வாய்ப்பு. முதல் போட்டியிலேயே கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸில் வைத்து சதமடித்து உலக கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். இதனால் அணியிலும் நிலையான இடத்தை தக்க வைத்துக் கொண்ட கங்குலி ஓபனிங் பேட்ஸ்மேனாக பல போட்டிகளில் ஜொலித்தார்.

ஆஃப் சைடில் இவர் அடிக்கும் பந்து சர்க்கிளை தாண்டிவிட்டால் நிச்சயம் பவுண்டரிதான் என்றும், ஸ்பின்னர்களை இறங்கி வந்து அட்டாக் செய்து சிக்ஸருக்கு பறக்க விடுவதும் என பேட்டிங்கில் அச்சுறுத்தினார். 1999 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக, கபில்தேவ்க்கு அடுத்தபடியா 150 ப்ளஸ் ஸ்கோர் அடித்து இந்திய வீரராக, அதே போட்டியில் கபில் சாதனையை முறியடித்து அதிக ஸ்கோர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் புரிந்தார்.

இந்த உலகக் கோப்பை முடிந்த பின்னர் கங்குலி வெளிப்படுத்திய தாக்கம் என்பது இந்திய அணிக்கு வேறு மாதிரியாக இருந்தது. 2000ஆவது ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட இவர், மற்றவர்களை போல் கேப்டன்சி செய்தோம், விளையாடினோம் என்றில்லாமல் அணியை புதிததாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தினார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கங்குலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். கங்குலி தலைமையில் இந்தியா இத்தொடரை வென்றது. ஆனால், இத்தொடரில் ஹேன்சி க்ரோனியே உள்ளிட்ட சில தென்னாப்பிரிக்க வீரர்கள் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி, அது அசாருதீன், அஜய் ஜடேஜா வரை நீண்டது. இந்தக் காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் கபில்தேவ். மேட்ச் ஃபிக்ஸிங் பிரச்னையால் அவரும் பதவி விலகினார். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரே இப்படி சர்ச்சைக்குரியதாக மாறியதில் நொந்துபோனார் கங்குலி.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமே கேள்விக்குறியானது. அணியை முற்றிலுமாக கட்டமைக்க வேண்டிய பொறுப்பு கங்குலிக்கு வந்தது. முதல்முறையாக வெளிநாட்டு பயிற்சியாளர்களைத் தேட ஆரம்பித்தார்கள். நியூசிலாந்தில் இருந்து ஜான் ரைட் வந்தார். இந்தியாவுக்குள் இளைஞர்களைத் தேட ஆரம்பிக்க வீரேந்திர ஷேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ், கைஃப், ஜாகீர் கான் என ஓர் இளம் பட்டாளமே வந்தது. வெற்றிகளும் கங்குலியைத் தேடி வர ஆரம்பித்தன.

1996 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான அவமானகரத் தோல்வி இந்திய கிரிக்கெட்டின் போக்கையே மாற்றத் தொடங்கியது. அதுவரை சீனியர் வீரர்களை வைத்து மட்டுமே வெற்றி பெற்றுவிடலாம் என்கிற எண்ணத்தில் இருந்த கிரிக்கெட் வாரியம் ஓர் அணிக்குள் இளம் வீரர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தது.

உலகக்கோப்பை முடிந்த அடுத்த சில மாதங்களில் இங்கிலாந்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாட வேண்டியிருந்தது. இங்கிலாந்து கண்டிஷனைத் தாக்குப்பிடித்து ஆடுவதற்கான சரியான அணி அப்போது இல்லை. டீமுக்குள் வலுவான 2 மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உடனடித் தேவையாக இருந்தது. ‘இருவரில் ஒருவர் ஆல்-ரவுண்டராக இருந்தால் இன்னும் சிறப்பு’ என இளம் வீரர்களைத் தேட ஆரம்பித்தது இந்தியத் தேர்வுக்குழு.

அந்தக் காலகட்டத்தில் இந்திய தேர்வு குழுவின் தலைவராக இருந்தவர் குண்டப்பா விஸ்வநாத். கர்நாடகாவைச் சேர்ந்தவரான இவர் எப்போதும் போல லென்ஸை கர்நாடகாவுக்குள்ளேயே சுழற்ற, சுனில் ஜோஷி, ராகுல் டிராவிட், வெங்கடேஷ் பிரசாத் (டெஸ்ட் அறிமுகம்) என மூன்று வீரர்கள் இந்திய அணிக்குள் வந்தார்கள். இதுத்தவிர ஏற்கெனவே இந்திய அணிக்குள் ஜவகல் ஶ்ரீநாத், அணில் கும்ப்ளே என இரண்டு கர்நாடக வீரர்கள் இருந்ததால் கர்நாடக வீரர்களின் எண்ணிக்கை மொத்தமாக 5 ஆனது.

இதனால் அப்போது BCCI-ன் செயலாளராக இருந்த ஜக்மோகன் டால்மியா தன்னுடைய மாநிலத்துக்கு ஒரு வீரர் நிச்சயம் ஒதுக்கப்படவேண்டும் என சண்டைப் போட செளரவ் கங்குலியின் பெயர் 16 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து டூருக்கான அணியில் சேர்க்கப்பட்டது. ஜக்மோகன் டால்மியாவின் அழுத்தத்தால் கங்குலி இந்திய அணிக்குள் சேர்க்கப்பட்டதால் ‘கோட்டாவில் வந்த வீரர்' என ஏளனம் செய்யப்பட்டார்.

113 டெஸ்ட் போட்டிகள், 311 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி 18,575 ரன்கள் குவித்திருக்கிறார் கங்குலி. ஒருநாள் போட்டிகளில் சரியாக 100 விக்கெட்கள் எடுத்திருக்கிறார். கங்குலியின் கரியரை எண்களைக் கொண்டு கணக்கிட முடியாது. இன்று இந்தியா நம்பர் 1 அணியாக உச்சம்தொடுகிறது என்றால் அதற்கு முதல் காரணம் செளரவ் கங்குலிதான். ஷேவாக், சச்சின், யுவராஜ், தோனி என அணியின் மற்ற வீரர்களுக்காக தன்னுடைய பேட்டிங் பொசிஷனை மாற்றிக்கொண்டே வந்ததுதான் கங்குலியின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது.

கங்குலி மீது ஆயிரம் விமர்சனம் வைத்தாலும் இந்திய அணியை மாற்றி அமைத்தது, ஆக்ரோஷமான ஆட்டத்திறன், புதிய வீரர்களை அறிமுகப்படுத்தியது, அணிக்காக புதிய பரிசோதனை முயற்சிகளை செய்ததென ஏகப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர். இந்திய அணியின் ஒப்பற்ற கிரிக்கெட் வீரருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.