கட்டுரைகள்

குழந்தைகளை கவனமாக பாருங்கள்

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு இரவு சுமார் ஒரு 8:30 மணி அளவில் ஒரு தெரியாத எண்ணில் இருந்து  அழைப்பு வந்தது.

தான் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் ஒரு மருத்துவர் எனவும் அவரிடம் ஒரு ஆறு வயது மதிக்கத்தக்க குழந்தை பேட்டரி விழுங்கி விட்டு வந்திருக்கிறார்கள் எனவும், அதை உடனே எடுக்க வேண்டும் எனவும்,  இப்பொழுது அனுப்பட்டுமா?  இந்த இரவு நேரத்தில் சாத்தியங்கள் உண்டா? எனவும் கேட்டார்.

நான் உடனடியாக, அந்த மருத்துவரிடம் ஆறு வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை அரங்கில் வைத்து மயக்க மருந்து கொடுத்து மட்டுமே இந்த பேட்டரியை எடுக்க இயலும். அவர்களுக்கு சம்மதம் எனில் உடனடியாக அனுப்பி வையுங்கள் என்று கூறினேன்.

அந்த குழந்தையின் பெற்றோர்கள் எங்களுக்கு  சம்மதம் எனவும், உடனடியாக பேட்டரியை எடுத்து குழந்தையை மீட்டு கொடுங்கள் என்று கேட்கவும், குழந்தையை அறுவை சிகிச்சை அரங்கிற்கு கூட்டி சென்று, மயக்க மருந்து கொடுத்து எண்டோஸ்கோபி வழியாக அந்த பேட்டரியை வெளியே எடுத்து கையில் கொடுத்த பிறகு தான் அவர்களுக்கும், எனக்கும் நிம்மதியாக இருந்தது.

சிறு குழந்தைகளை இது போன்ற சம்பவங்களில் இருந்து பாதுகாப்பாக வைத்திருங்கள் என்றும் உடனடியாக இந்த மாதிரி சம்பவங்கள் எழுதும் நிகழ்ந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று அவர்கள் சொல்வதை உடனே செய்தால் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல் நாம் வெளியே வந்து விடலாம் என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கலாம் என்பதற்காகத் தான் இந்த ஒரு பதிவு.

பேட்டரி முழுங்குவதில் உள்ள ஆபத்துக்கள் பின்வருமாறு:

1) இந்த பேட்டரிகள் குடலின் உட்புற சுவரில் அழுத்தி புண்கள் ஏற்படுத்தக்கூடும்.
2) பேட்டரியில் உள்ள கெமிக்கல்கள் வயிற்றில் உள்ள அமிலத்துடன் சேர்ந்து விளைவுகளை ஏற்படுத்தி குடலில் ஓட்டை விழக் கூடும் 
3) வாந்தி மற்றும் வயிற்று வலி

பேட்டரி முழுங்கிய 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள்ளாக இவை எண்டோஸ்கோபி மூலம் கண்டிப்பாக வெளியே எடுக்கப்பட வேண்டும். பேட்டரி உள்ள இடத்தை எக்ஸ்ரே மூலம் முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சிறு வயது குழந்தைகள் என்பதால் அவர்களின் மூச்சு குழாய் பகுதி எண்டோஸ்கோபியின் போது பாதுகாக்கப்பட வேண்டும். ஏனெனில் எண்டோஸ்கோபி மூலம் வாய் வழியாக எடுக்கும் பொழுது அவை தவறி மூச்சுக்குழல் உள்ளே விழ வாய்ப்பு உள்ளது.

எனவே ஒரு சிறந்த மயக்க மருந்து நிபுணரால் மூச்சு குழாய் மற்றும் மூச்சு விடும் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். இந்த குழந்தைக்கு முதலில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு எண்டோஸ்கோபி செய்து பேட்டரி, இரைப்பையில் உணவுடன் கலந்து ஒட்டிக் கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் எண்டோஸ்கோபி மூலம் ஸ்னார் (snare) என்னும் கருவி பயன்படுத்தப்பட்டு  பேட்டரி கைப்பற்றப்பட்டு எண்டோஸ்கோப்பின் அருகில் கொண்டு வரப்பட்டது.

இவை மெதுவாக வெளியே இழுக்கும் பொழுது தொண்டைப் பகுதி மிகவும் சிறியதாக இருந்ததால், வெளியே வர முதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தது. அதன் பிறகு கொஞ்சம் மயக்க அளவை அதிகப்படுத்தி  மருந்துகள் செலுத்தப்பட்டு பேட்டரி வெளியே எடுக்கப்பட்டது.

இது ஒரு சிக்கலான மருத்துவம். பேட்டரி, நாணயம், ஹேர்பின் இந்த பல பொருட்கள் குழந்தைகளால் தவறுதலாக விழுங்கக் கூடும். சிறு குழந்தைகளை கவனமுடன் கையாளுங்கள். அவர்களை தனியாக விளையாடும் போது சுற்றி இந்த மாதிரி சிறு பொருட்கள் இருப்பது பற்றி கவனத்துடன் இருக்க வேண்டும்.

-மருத்துவர் இராதா M.D.,D.M.