மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 132 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் கடல்நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி 45 மணி நேரத்துக்கு தியானம் மேற்கொள்கிறார். இதற்காக, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு நேற்று மாலை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 5.08 மணிக்கு வந்தார். மாலை 5.40 மணி அளவில் பகவதி அம்மனை தரிசித்த பிறகு, படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்றடைந்த பிரதமர் மோடி, அங்கு தியானத்தை தொடங்கினார். நாளை (1-ம் தேதி) மாலை 4 மணி அளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர், படகு மூலம் கன்னியாகுமரி கரைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி திரும்புகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடலில் உள்ள விவேகானந்தர் பாறையின் 3 கி.மீ. சுற்றளவுக்கு படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல், இந்தப் பாறைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது. மெரைன் போலீஸாரும், கமாண்டோ நீச்சல் வீரர்களும் இரவும், பகலும் ரப்பர் படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, இந்திய விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர்களில் வான்வழி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியில் 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகள்