செய்திகள்

தமிழக அரசு நடத்தும் குடிமைப்பணி பயிற்சி

தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் சென்னையிலுள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் குடிமைப்பணி தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்தியக் குடிமை பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இதில் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன.

குடிமைப்பணி முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்களுக்கு ஜூலை முதல் செப்டம்பர் 2024 வரை மூன்று மாதங்களுக்கு முதன்மைத் தேர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ஆர்வலர்கள் மட்டுமன்றி, குடிமைப்பணி முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த இதர ஆர்வலர்களும் இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.

இங்கு பயிற்சி பெறக்கூடிய மூன்று மாத காலத்திற்கும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பித்த நபர்கள் இட ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டு ஜூலை 5 மற்றும் 6ஆம் தேதியில் சேர்க்கை நடைபெற்றது. இதில் சேர்க்கை பெற்றவர்களுக்கு இன்று (8ஆம் தேதி) முதல் முதன்மைத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் சேர்க்கை பெற்ற நபர்களுக்குத் தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட உள்ளது.