தினம் ஒரு கலக்கல்ஸ்

அவன் ஒரு சுழல் - பாகம் 29

"தமிழ் பார்த்திபன் ரொம்ப நல்ல பையன்மா. ஆனா ரொம்ப பிடிவாதக்காரன். சின்ன வயசுல சண்டை போட்டுட்டு வீட்ட விட்டெல்லாம் ஓடிருக்கான். குறும்பு ஜாஸ்தி ஆனா தங்கமானவன்." "அதெல்லாம் இருக்கட்டும் தாத்தா, அவனுக்கு லவ்வர் யாராவது இருக்காங்களா?" "அவன் காலேஜ் படிக்கும் போது ஏதோ பொண்ண லவ் பண்ணான்மா. பேரு கூட காஞ்சனாவோ, சஞ்சனாவோ.. இங்க வீட்டுக்கு கூட கூட்டிட்டு வந்திருக்கான். அந்த பொண்ணும் பார்க்க அழகா தான் இருந்துச்சு. " ஒருவேளை அதே சஞ்சனாவாக இருக்குமோ??? காலேஜ்ல இருந்தே லவ் பண்ணி இவ்ளோ நாள் கழிச்சு கொலை பண்ணியிருப்பானா? " அப்புறம் என்னாச்சு? சஞ்சனா கூட பார்த்தி போன்ல பேசி பார்த்ததே இல்லையே!! " " ம்ம்ம் அந்த பொண்ணு அவன ஏமாத்திட்டு போய்ருச்சுமா!! காலேஜ் முடிச்சதும் அவனுக்கு வேலையும் கிடைச்சுது. அந்த பொண்ணு வீட்ல மாப்ள பார்க்கிறாங்க, உடனே கல்யாணம் பண்ணிக்கன்னு அடம்பிடிச்சுது. சரின்னு இவங்களும் ஒத்துக்கிட்டாங்க. " " இவங்களுக்கோ ஒரே பையன், அவங்க செய்ற எல்லாமே இவனுக்கு மட்டும் தான். அந்த பொண்ணும் ரொம்ப ஏழ்மைனு, எல்லா செலவையும் இவங்களே பாத்துக்கலாம்னு முடிவு பண்ணாங்க. அந்த பொண்ணுக்கு நகைநட்டுல இருந்து புடவை வரைக்கும் எல்லாம் இவங்க செலவு. " " கல்யாணத்துக்கு முந்தின நாள் ராத்திரி எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு அந்த பொண்ணு ஓடிருச்சு. " " அச்சோ, போலிஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாயா தாத்தா? இப்படிலாமா பொண்ணுங்க இருப்பாங்க? " " ம்ம்ம் கலிகாலம்மா. அந்த பொண்ண இவன் ரொம்ப நேசிச்சான். அதனால கம்ப்ளைன்ட் எதுவும் கொடுக்கல. அதுக்க பிறகு அவன் எந்த பொண்ணையும் விரும்பல. கொஞ்ச நாள் அவன் ஒரு மாதிரி மன உளைச்சல்லயே இருந்தான். " ஒருவேளை, அதனால தான் பொண்ணுங்கள தேடி தேடி கொன்னு பழி தீர்த்துக்கிறானா?? " அப்புறம் என்னாச்சு தாத்தா? " " அப்புறம் என்னம்மா, அவன் வீட்ல யாருகிட்டயும் சரியா பேச மாட்டான். தனியாகவே இருப்பான். வேலைக்கு போவான் வருவான். அப்படியே இரண்டு, மூணு வருசம் ஓடிச்சு. அதுக்கப்புறம் லெட்சுமி அம்மா பார்த்திபனுக்கு பொண்ணு தேட ஆரம்பிச்சாங்க. ஆனா அவன் கல்யாணத்துக்கு சம்மதிக்கவே இல்ல. " " ஓஹ்" " ம்...ம்... கடைசியா, அம்மா நீ கல்யாணம் பண்ணிக்கலைனா இந்த வீட்ல இருக்க மாட்டேன்னு சண்ட போட்டு, அவங்க ரெண்டு பேரும் பூர்வீக வீட்டுக்கு போய்டாங்க. " " அப்போ அவனோட அப்பா அம்மா கோயிலுக்கு போகலையா? " " இப்போ கோயிலுக்கு தான் போயிருக்காங்க. ஆனா அவங்க இங்க தங்குறது இல்ல. " " அதனால தான் வீட்ல யாருமே புழங்காத மாதிரி வெறுமையா இருக்கா? " " ஆமா... இரண்டு வருசமா தம்பி இந்த வீட்ல தனியா தான் இருக்கு. " " அவங்க அம்மா அதுக்கு பிறகு கல்யாணம் பண்ணிக்க சொல்லலியா? அப்படியே விட்டுட்டாங்களா? " " இல்லம்மா அவங்க அழுது அடம்பிடிச்சு கொஞ்ச நாள் முன்ன சில பொண்ணுங்க போட்டோவ கொண்டு வந்தாங்க. அப்போவும் தம்பி முடியாதுன்னு அடம்பிடிக்க அம்மாவுக்கும் தம்பிக்கும் சண்ட முத்தி கடைசியில அம்மா மயங்கி விழுந்துட்டாங்க. அம்மா ரொம்ப டென்சன் ஆக கூடாது, பத்திரமா பார்த்துக்கோங்கன்னு டாக்டர் சொல்லிட்டாரு. அப்புறம் தம்பி கல்யாணத்துக்கு ஒரு வழியா சம்மதிச்சாரு. அம்மா போட்டோலாம் காட்ட தம்பிக்கும் ஒரு பொண்ண பிடிச்சுது. " " ம்ம் ஆனா ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல? " " அத ஏன்மா கேட்குற. தம்பி கல்யாணத்துக்கு சம்மதிச்சதும் வீடே களை கட்டிருச்சு. ஒரு நல்ல நாள் பார்த்து பொண்ணு பார்க்க கிளம்பும் போது தான் பாழா போன அந்த போன் வந்துச்சு. " " ஏன் என்னாச்சு தாத்தா? " " அந்த பொண்ணு செத்துப்போச்சுமா… அந்த பொண்ணு ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வரும் போது யாரோ கொன்னுட்டதா அடுத்த நாள் பேப்பர்ல வந்துச்சு. " அது நாம போட்டோல பார்த்த சஞ்சனாவா இருக்குமா? அப்படின்னா அவன் லவ் பண்ண பொண்ணும் இந்த பொண்ணும் வேற வேற. அந்த சஞ்சனாவோ, காஞ்சனாவோ அவள பழிவாங்க இவளை கொன்னுருப்பானா? இல்ல நான் தான் தப்பா நினைக்கிறேனா?? " பார்த்திபன் தம்பி அதுக்கு அப்புறம் ரொம்ப மனசு ஒடஞ்சு போயிட்டான். அவனுக்கு தான் ஜாதகத்துல பிரச்சனைனு அம்மா பரிகாரம் கேட்டு இப்போ, கோயில் கோயிலா போயிருக்காங்க." "ம்ம்ம்" "ஆனா ஒண்ணும்மா தம்பிக்கு உன்னை பிடிச்சிருக்கு போல. நீ வந்த பிறகு அவன் முகத்துல ஒரு சந்தோசம் தெரியுது. " அவர் அப்படி சொன்னதும் உடம்பெல்லாம் எனக்கு ஜில்லென்று ஆனது. அது எதனாலோ தெரியவில்லை. ஆனால் மனதுக்குள் குழப்பமும் சந்தேகமும் நிறைந்தே இருந்தது. கேட்டில் பார்த்திபனின் கார் சத்தம் கேட்டது. " இதெல்லாம் அவன்கிட்ட கேட்காதம்மா. அவன் மறுபடியும் வருத்தப்பட ஆரம்பிச்சிருவான்." "சரி தாத்தா." அவன் கார் ஹார்ன் வாசலில் சத்தமிட்டது. தாத்தா கேட் திறக்க வேகமாக சென்றார். நான் காஃபி கோப்பைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றேன். மனதிற்குள் இப்போது பெருங்குழப்பம். குழப்பம் தீர ஒரே வழி அந்த டையரியை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும். அதிலிருக்கும் பெண்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். யோசித்த படியே காஃபி கப்பை கழுவி வைத்துவிட்டு திரும்பினேன். எனக்கு பின்னால் நின்றவனை பார்த்து கண்களை இறுக்க மூடி பயத்தில் கத்திவிட்டேன். "ஹே தமிழ் ரிலாக்ஸ். சாரி சைலண்ட்டா நான் உங்க பின்னாடி வந்து நின்னுருக்க கூடாது. பயமுறுத்திட்டேனா சாரி." பார்த்தி வீட்டிற்குள் வந்திருக்கிறான். கிச்சனில் லைட் எரியவும் வந்து பார்த்திருக்கிறான். நான் பயந்துவிட்டேன் என்று என்னை நானே சமாதானம் செய்து கண் திறந்து பார்த்தபோது அவன் என் தோள்மீது கை வைத்தபடி நெருக்கமாக நின்றிருந்தான்!!!