தினம் ஒரு கலக்கல்ஸ்

அஸ்வத்தாமன் - பாகம் -3

குருஷேத்திரத்தில் துரியோதணனுக்கு பக்க பலமாக இருக்கும் 7 அதிமகாரதிகளில் அஸ்வத்தாமனும் ஒருவர். (ரதிகள் சிறு விளக்கம்) ரதன் = 5000 போர் வீரர்களுக்கு சமமான வீரன் அதிரதன் = 10,000 போர் வீரர்களுக்கு சமமான வீரன் மகாரதன் = 60,000 போர் வீரர்களுக்கு சமமான வீரன் அதிமகாரதன் = 12 மகாரதிகளுக்கு சமமான வீரன் (7,20,000 வீரர்களுக்கு சமம்) மகாமகாரதன் = 24 அதிமகாரதிகளுக்கு சமம் (1,72,80,000 வீரர்களுக்கு சமம், இந்த பூமியில் இதுவரை மகாமகாரதன்கள் பிறக்கவில்லை) மகாபாரதப்போரில் பாண்டவர்களை அழித்து துரியோதனனை முன் நின்று காப்பேன் என்று களம் இறங்கும் அஸ்வத்தாமன் பீஷ்மரால் தென் திசைப் படையை வழி நடத்தும் வீரனாக நியமிக்கப்படுகிறார். 10ம் நாள் போரில் பீஷ்மர் வீழ்ந்தப் பிறகு தன் தந்தை துரோணரால் துரியோதணின் மெய்க்காப்பாளனாக மாற்றப்படுகிறார். 12ம் நாள் போரில் அர்ஜுனனோடு நேருக்கு நேர் விற்போர் நடத்துகிறார். இருவரும் சமபலத்துடன் விளங்கியதால் வெற்றி தோல்வியின்றி யுத்தம் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. இருவரும் தேவர்களின் திவ்ய அஸ்திரங்களை ஒருவர் மீது ஒருவர் ஏவிய வண்ணம் கடுமையாக போரிட்டனர். அஸ்வத்தாமன் கோபத்தோடு போர் புரிய நேர்ந்தால் அவருடைய கோபம் எதிரில் நிற்பவர் யாராயிருந்தாலும் அழித்துவிடும் என்பதை நன்கறிந்தவர் ஸ்ரீகிருஷ்ணர். அதன் பொருட்டு பீமனை அஸ்வத்தாமனோடு மோதவிட்டு அர்ஜுனனோடு வேறு பக்கம் தேரை செலுத்துகிறார். 13ம் நாள் போரில் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் கோர மரணத்திற்கு காரணமான 6 அதிமகாரதிகளில் இவரும் ஒருவர் (6 அதிமகாரதிகள் ஒன்றாக இணைந்தால்தான் தன்னைக் கொல்ல முடியும் என்ற வரம் பெற்றவன் அபிமன்யு). 14ம் நாள் போரில் சிந்துராஜன் ஜெயத்ரதனை காப்பாற்றும் முயற்சியில் அர்ஜுனனோடு போரிட்டு தோற்கிறார். ஜெயத்ரதனின் சிரசை பாசுபதம் கொண்டு பிய்த்து எறிகிறான் அர்ஜுனன். (பாசுபதத்தை தவிர வேறு ஆயுதத்தால் ஜெயத்ரதனைக் கொன்றால் அவனைக் கொள்பவன் தலை வெடித்து சிதறி மரணிப்பான் என்பது ஜெயத்ரதனின் வரம்). ஜெயத்ரதன் மரணத்தால் வெகுண்டு எழுகிறான் துரியோதனன். பாண்டவர்களை இரவு போருக்கு அழைக்கிறான். கௌரவ சேனையில் துரோணர், கர்ணன், அஸ்வத்தாமன் ஆகிய மூவரும் இரவு போரில் வல்லவர்கள். அதே சமயம் பாண்டவர் சேனையில் அர்ஜுனன் ஒருவனே இரவு போர் நிகழ்ந்த வல்லவன். இதை சாதகமாக்கி போரை முடிவுக்கு கொண்டுவர எண்ணினான் துரியோதனன். ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் துரியோதனனின் திட்டத்தை அறிந்துக் கொண்டு பாண்டவர்களுக்கு உதவும் பொருட்டு பீமனின் மகன் கடோத்கஜனை வரவழைக்கிறார். மாய அரக்கன் இடும்பனின் தங்கை இடும்பிக்கும் பீமனுக்கும் பிறந்த மகாசக்திசாலி மாயாவி அரக்கன் கடோத்கஜன் தன் இரு மகன்கள் மேகவர்ணன் அஞ்சனபர்வன் மற்றும் தன் அரக்கர் சேனையோடு குருசேத்திரத்தில் நுழைகிறான். கௌரவ சேனை மொத்தமும் நிர்மூலம் ஆகிறது.